
வாழ்க்கையில் பலவிதமான சோதனைகளையும் கஷ்டங்களையும் சந்திக்கிறோம். சில நேரங்களில் அவை அதிக வலியையும், வேதனையையும் தருகின்றன. அந்த வலி மற்றும் வேதனை அனுபவங்கள்தான் நம் வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை நமக்கு வழங்குகிறது. நம்மை மேன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பையும் தருகிறது. வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் சவால்களை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டு முன்னேறுவதுதான் சரி.
எங்கே நாம் அதிகம் காயப்படுகின்றோமோ அங்கிருந்துதான் நம் வாழ்க்கை பாடம் துவங்குகிறது. நம் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் ஏற்படும் வலி மிகவும் கொடியது. ஆனால் அதைத் தாங்கித்தான் ஆகவேண்டும். அப்போதுதான் நம்மால் மேற்கொண்டு முன்னேற முடியும். ஆறு மனமே ஆறு என்று எத்தனை முறை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் இருக்கத்தான் செய்யும். மன காயத்துக்கு மருந்து போட வழி இல்லாமல் தவிப்போம்.
எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப நம் நினைவில் வந்து நம்மை பாடாய்படுத்தும். இப்படி ஆறாத காயமாகி நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெறுவது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள்தான்.
துரோகமும் கொடுமைகளும்தான் நம்மை அதிகம் காயப்படுத்துகின்றன. நம்மை காயப்படுத்தும் அவற்றை ஏன் நாம் திரும்பத் திரும்ப மனத்திரையில் எண்ணிப் பார்க்க வேண்டும். அதை மறந்து விட்டு நம் வேலையை பார்க்கப் போனால் நம் மனக்காயம் தானாகவே ஆறிவிடும். மன காயத்துக்கு சிறந்த மருந்து அதை மறந்து விட்டு அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
கடந்த காலம் நமக்கு பாடமாக இருக்க வேண்டுமே தவிர பாரமாக இருந்து நம் மனதை அழுத்தக்கூடாது. ஆனால் மனம் அறிவின்படி நடப்பதில்லையே. எதை நினைக்க கூடாது என்று எண்ணுகின்றோமோ அதையே பிடிவாதமாக நினைத்து வருந்தும்.
எங்கே நாம் அதிகம் காயப்படுகின்றோமோ அங்கிருந்துதான் நிறைய கற்று கொள்கிறோம். வாழ்க்கையைப் பற்றிய தெளிவும் அனுபவமும் பெற்று உயர்ந்த நிலையை அடைகிறோம். வளமான வாழ்க்கையை வாழ்கிறோம். வாழ்க்கை என்பது ஒரு அனுபவம். அது மனிதருக்கு மனிதர் மாறுபடும்.
அதில் உண்டாகும் சுகமும் துக்கமும் நம்மை பலப்படுத்தும். நம்மை காயப்படுத்தியவர்கள் முன் நிமிர்ந்து நிற்கச் செய்யும். வாழ்க்கையில் அதிகம் அடிபட்டவர்கள், காயப்பட்டவர்கள் தான் தன்னம்பிக்கையுடன் மனபலம் பெற்று போராடி மேலெழுந்து வருகிறார்கள். எதைக் கண்டும் சோர்ந்து முடங்கிப் போவதில்லை.
பட்ட காயங்கள் நல்ல அனுபவங்களைத் தந்து, நன்மை தீமைகளை பகுத்தறியும் அறிவையும், சிந்தித்து செயலாற்றும் திறனையும் தருகிறது. நேர்மறையான எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துச் செல்லும். எண்ணத்தின் வலிமை பெரிது.
நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம். பட்ட காயங்கள் நம்மை முழுமையான, நிறைவான வாழ்க்கை வாழ வழிவகை செய்கிறது. காயப்படும் இடத்தில் தான் கற்றுக் கொள்ள முடியும். வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் தோல்விகள் சங்கடங்கள் நம்மை காயப்படுத்தினாலும் அவற்றிலிருந்து வாழ்வில் உயர்வதற்கான வழிகளை கற்றுக் கொள்கிறோம்.