
நம்பிக்கை - வெற்றிகர வாழ்வின் துவக்கம். ஆனால் அறிவே அதன் இறுதி நிலை.
நம்பிக்கை, வழிகாட்டுகிறது.
ஆனால், அறிவே அதன் குறிக்கோள்.
நம்பிக்கை - பல இடையூறுகளை எதிர்கொள்கிறது.
ஆனால், அறிவு இடர்பாடுகளிலிருந்து உயிர்த்து எழுந்து விடுகிறது.
நம்பிக்கையின்றி அறிவு இருக்க முடியாது; ஆனால் அறிவைப் பெற்றுவிட்டதும் முடிவடைந்து விடுகிறது. நம்பிக்கையின் பணி வெற்றி அடைந்த வாழ்வு என்பது அறிவின் வாழ்வே.
அறிவு என்பது புத்தகக் கல்வியைக் குறிப்பது ஆகாது. வாழ்வை அறிந்து கொள்வதையே குறிக்கும். அதுவும் மேலெழுந்த வாறாக வெறுமைக் கருத்துக்களை நினைவாற்றலில் ஏற்றி வைப்பதல்ல. வாழ்வின் ஆழ்ந்த காரியங்களையும் உண்மைகளையும் புரிந்து கொள்வதே ஆகும்.
மனிதனுக்கு இந்த அறிவைத் தவிர்த்து வேறு வெற்றி எதுவும் இல்லை. அவனுடைய தளர்ச்சியுற்ற பாதங்களுக்கு வேறு ஓய்வு இல்லை. நொந்து போன இதயத்திற்கு வேறு தஞ்சம் இல்லை.
மனிதர் அனைவருக்கும் வாழ்வின் தொல்லைகள், துன்பங்களிலிருந்து விடுதலை உண்டு. ஏனெனில். செல்வந்தனோ, அன்றி ஏழையோ, கற்றவனோ அன்றி கல்லாதவனோ - அடைய வேண்டும் என்ற விருப்பாற்றல் கொண்டுவிட்டால் குறையற்ற தன்மை எனும் பாதையைக் கடைப்பிடிக்கலாம்.
இந்த உண்மையால், அதாவது சிறைப்பட்டோருக்கு விடுதலையும் தோல்வியுற்றோருக்கு வெற்றியும் உண்டு என்னும் உண்மையால் உயர்ந்த மகிழ்ச்சி ததும்புகிறது. படைப்பு ஆற்றல் மகிழ்ச்சியடைகிறது.
பாவத்தாலும் துன்பத்தாலும் கெட்டழிந்த தன் பழைய உள்ளத்திலிருந்து தூய்மையாலும் அமைதியாலும் மேன்மையுற்ற ஒரு புதிய உள்ளத்தை உருவாக்குறான்.
கவலை, அச்சம், துன்பம், புலம்பல், ஏமாற்றம். ஏற்ற இரக்கம், இழிவு, உள்ளக் கலக்கம் ஆகிய நிலைகளுக்கு அறிவுக் கண் திறக்கப்பட்டவனின் உள்ளத்தில் இடமில்லை. அங்கே அவை வாழ வசதியில்லை. அவை, தான் என்னும் அங்காரத் தன்முனைப்பு உடையவனின் உள்ளத்தில் மட்டுமே வாழ முடிகிற இருள் உயிர்கள்.
அறிவொளியின் முன் அவை உயிர்த்திருக்க முடியாது.
தான் கைப்பற்றிய வருத்தம் தரும் கனவுகளை அழித்தொழிந்த அறிவையும், வெற்றியையும் பெற்ற மனிதன் ஒரு புதிய மேம்பட்ட படைப்பு முழுமையைக் காணுகின்ற ஒரு புதிய பார்வை ஞானத்தால் எழுச்சி அடைகிறான்.
அவன் துன்ப உலகிலிருந்து மேலெழுந்து விடுகிறான்.
அவனுடைய வலிமை தூய்மையானது, அமைதியானது. தெய்வீகமானது.
அவன் சுருக்கமாகப் பேசினாலும் அவன் ஒரு ஆசிரியன்.
அவன் ஒரு ஆட்சியாளன் எனினும் பிறரை ஆள அவனுக்கு ஆசையிருப்பதில்லை.
அவன் ஒரு வெற்றி வீரன்; எனினும் பிறரைப் பணிய வைக்க அவன் விரும்புவதில்லை: முயற்சிப்பதில்லை.
மனிதனே! நீ மேம்பட்ட நன்மையின் உறைவிடம்! ஆகவே அறிவொளியை ஏற்றி அதனால் வெற்றியடையுங்கள்.