
உலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் எதிலும் முழுமையாய் இருப்பது இல்லை. குணத்திலோ, உடலிலோ ஏதாவது ஒரு குறையுடன்தான் இருப்பார்கள்.
குணத்தில் குறை இருந்தால் காலமாற்றம் அவர்களைத் திருத்திவிடும். அதற்காக நாம் ஏன் அவர்களின் செயல்பாட்டை விமர்சனம் செய்யவேண்டும். தேவையில்லாமல் செய்யும் விமர்சனத்தால் பிரச்னைகள் உருவாகவும் கூடும். நண்பர்களிடையே விளையாட்டாய் பேசும் விமர்சனமும் கூட. விபரீதத்தை உண்டாக்கிவிடும்.
அதனால் மனக்கசப்பு உண்டாகிவிடுகிறது. தீராத பகை உணர்வும் வளர்ந்துவிடும். எனவே, முடிந்தவரை யாரைப்பற்றியும் விமர்சனம் செய்யாமல் இருந்து பாருங்கள்.
ஒரு கருத்தை முக்கியமாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் பிறரைப் பற்றி விமர்சனம் செய்து மகிழ்கின்றோம் என்றால், நம்மைப் பற்றியும் பிறர் விமர்சனம் செய்வார்களே என நினைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் காலம் முழுவதும் மகிழ்ச்சியாய் வாழ விரும்புகிறீர்களா! பிறரைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யாதீர்கள். உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லையர அவரைவிட்டு ஒதுங்கிச் செல்லுங்கள். அதுதான் நல்லவழி ஆகும். நாம் ஒரு விரலை நீட்டி பிறரைக் குற்றம் சுமத்தும்போது மற்ற மூன்று விரல்களும் நம்மை நோக்கித்தான் இருக்கின்றன. எனவே பிறர் குறைகளை விமர்சனம் செய்யாமல், நம் குறைகள் என்ன என அறிந்து, அதை நீக்க முயற்சி செய்யலாம்.
நம்மிடம் உள்ள குறைகளைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. முதலில் நம்மை நாம் மாற்றிக்கோள்வோம். முதலில் நம்மைப் பற்றி சிந்திப்போம். கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்போம். எதிர்காலத்தில் முடிந்தவரை, தவறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம்.
அதற்கு எப்பொழுதும் நல்லதைப் பற்றி சிந்தித்தாலே போதும்! நம் மனதை எப்பொழுதும் நல்ல சிந்தனைகள் ஆளுமை செய்யும் பொழுது, பிறரின் குறைகள் நம் கண்களுக்கு என்றும் தெரிய வாய்ப்பில்லை.
இறைவன் நமக்கு நல்ல இதயத்தைத் தந்துள்ளான். இதயத்தை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்வோம். தேவை இல்லாத குப்பைகளைப் போட்டு அதில் நிரப்பவேண்டாம்.
பிறரைக் குறைகூறி வாழ்பவர் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவர் ஆவார். தான் மட்டும் யோக்கியமானவர். மற்றவர் எல்லாம் பிழை செய்பவர் என்றே காட்டிக்கொள்வார்கள்.
மற்றவர்களைத் திருத்தவேண்டும் என ஆசைப்படுவது தவறு அல்ல. முதலில் அவரின் தவறுகளைத் திருத்திக் கொள்ளவேண்டும். அதுதான் முதல் கடமை ஆகும்.
பிறரைக் குறை கூறியும், ஏளனம் செய்தும் வாழ்பவர் மனிதரே இல்லை. இவர்கள் அனைவரும் மானிட ஜென்மத்தில் தப்பிப் பிறந்த பிறவிகளே
யாரிடம் குறை இல்லை யாரிடம் தவறில்லை வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை...
என்ற கவிஞரின் வார்த்தைகள் மனதில் பதியட்டும்.