
நமது பெருமையைக் குலைக்கும் படி நண்பர் ஒருவர் நடந்து கொள்கிறார். மற்றவர்கள் முன் இகழ்ச்சியாக பேசுகிறார். தூய்மையான மனதைக் குற்றப்படுத்தி, களங்கப்படுத்தி, கேலியும் கிண்டலும் செய்து, தாழ்த்திப் பேசி, மீள முடியாத சூழ்நிலையில் தள்ளி விடுகிறார். அப்போது மனம் எப்படி இருக்கும்? கூனிக் குறுகி நெருப்பின் மீது சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பது போன்று தானே இருக்கும்.
உண்மைதான்! மறுப்பதற்கல்ல... அதற்காக அப்படியே அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்காமலே ஓடி விட முடியுமா?
உன்னை நீயே செதுக்கிக் கொள்ள வேண்டாமா? அவமானங்களை உனக்கு உளியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
உன்னை உனக்கே அறிமுகம் செய்து வைக்கும் ஆயுதம் தான் அவமானம்!
ஆயிரம் உறவுகள் தர இயலாத பலத்தை ஒரு அவமானம் தந்து விடுகிறது. அவமானம் என்பது அடுத்தவர்கள் நம்மை நிராகரிக்கும் போது தான் தெரியவரும்.
அவமானம் எனும் வேதனை வரும் போது நமக்கு ஏதோ ஒன்றைக் கற்பிக்கவே அது நிகழ்கிறது என்பது மட்டும் நிதர்சனம்.
நாம் அதை எவ்வளவு விரைவில் கற்றுக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு அவற்றின் தேவை என்ன என்பது தெரியும். நாம் அந்த ரகசியத்தைக் கற்றுக் கொண்டு விட்டோமேயானால், நம்மால் துன்பப் பட வேண்டியதில்லை.
ஏனெனில், அந்த ரகசியம் துன்பத்தின் காரணத்தை, அதன் வேரை நமக்கு தெரிவித்து விடுகிறது. அதைக் கடந்து செல்வதற்கான வழியையும் காட்டி விடுகிறது. அவமானமல்ல... அணிகலனே! என நம்மை அழகுப் படுத்தி விடுகிறது.
மற்றவர்களின் அழுக்கை சுத்தம் செய்வதற்காக ஒரு நாளைக்கு ரூ.10 அல்லது ரூ.20 மட்டுமே சம்பாதித்தார். அவரும், அவரது தாயாரும் பெரும்பாலும் வீடுகளை துப்புரவு செய்த போது கொடுக்கப்பட்ட மீதம் உள்ள உணவையே சாப்பிட்டார்கள்.
வீடுகளில் வேலை செய்த போது வீட்டின் உரிமையாளர்கள் கொடுத்த தங்களுக்கு உதவாத பழைய ஆடைகளையே அணிந்தார்கள். ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்தார்கள். மனித மலத்தை கூடையில் சுமந்தார்கள். தெருவில் நடக்கும் போது ஒரு அவமானச் சின்னமாக உணர்ந்தார்கள். துயரத்தின் ரணங்களை அர்த்தமுள்ள வாழ்கையின் மூலம் துடைத்தார்கள்.
சமூகத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்தவர் உஷா சௌமார் (Usha Chaumar). 43 வயது பெண்மணி. இவர் ராஜஸ்தான் மாநிலம் டீக் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்.
தனது தாயாருடன் சேர்ந்து தனது ஏழாவது வயதிலேயே கையில் கூடை மற்றும் விளக்குமாறுடன் கழிவறைகளைச் சுத்தப்படுத்தும் பணியைச் செய்து வந்தார். நோட்டும் புத்தகமும் சுமக்க வேண்டிய வயதில் மலம் அள்ளும் கூடையைச் சுமந்தார். பேனா பிடிக்க வேண்டியதற்குப் பதில் விளக்குமாறைப் பிடித்தார். காரணம் தனது தாயாரும் துப்புரவு தொழிலாளியாக மனித மலம் அள்ளுபவராக பணி செய்து வந்தார்.
உஷா சௌமாருக்கு 10 வயதில் திருமணம் நடந்தேறியது. தனது கிராமத்தை விட்டு புகுந்த வீட்டு ஊருக்குச் சென்றார். பட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும் என்பதைப் போல கணவர் ஊரிலும் உஷா சௌமார் மலம் அள்ளும் பணியே செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கணவர் உள்ளுர் ஊராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக வேலைப் பார்க்கிறார். மாமியாரும் உள்ளுரில் மலம் அள்ளும் வேலையைச் செய்பவர் தான்.
தனது முன்னோர்கள் செய்த வேலை. தாய் அதிகாலையிலேயே மனிதக் கழிவுகளை அள்ளும் கூடையும், துடைப்பத்தையும் எடுத்துக் கொண்டு கிராமத்துக் கழிப்பறைகளை தூய்மை செய்ய விரையும் அந்த உருவம் தன் மனக் கண் முன்னே நிழலாட, எப்படியும் மீண்டுவிட வேண்டும் என்று தான் நினைத்தாலும் சமூகம் அதற்கு வழி விடாமல் தடுத்தே வருகிறது என்பது தான் வேதனையிலும் வேதனையாக உணர்ந்தார்.
டாக்டர் பதக் என்ற சமூக சேவகர் வடிவில் உஷா சௌமாருக்கு விடுதலை வந்தது. சுலாப் இன்டர்நேஷனல் சோஷியல் சர்வீஸ் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, பின்னர் படிப்படியாக தலைவராக உயர்ந்து, நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டன. இன்று நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறார். அவரது துணிச்சல், சேவை மற்றும் தலைமைப் பண்புகளுக்காக அவருக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாக பத்மஸ்ரீ விருது! இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கினார்கள்.
இப்போது, உஷா சௌமார் முகத்தில் மலர்ச்சி! கண்களில் தீட்சண்யம். உதட்டில் புன்னகை. தலையில் கிரீடம் தாங்கி ஒளிர்கிறார்! இமாலய சாதனை தானே!