மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்!

Lifestyle articles
Lifestyle articles
Published on

விட்டுக் கொடுப்பது என்பது நமக்கு உரியவற்றைப் பிறருக்கு விட்டுக் கொடுத்து விடுவது என்பது அல்ல. அப்படி விட்டுக் கொடுக்கவும் கூடாது. நமக்கென்று உள்ள கொள்கைகளை, நாம் விரும்பக் கூடியவற்றை, நாம் பின்பற்றுபவற்றை விட்டுக் கொடுப்பது என்பது இதற்குப் பொருள் அல்ல. 

பிடிவாதமாக நின்று முறித்துக் கொள்ளாமல், பிறருடன் நல்ல உறவைத் தொடர சில நேரங்களில் விட்டுக் கொடுப்பது என்பதே அதன் பொருள். பிஞ்சுப் பருவம் முதற்கொண்டு பெரியவர்களாகி வாழ்தல் வரையில் இப்பண்பு மிகவும் கட்டாயம் இருக்கவேண்டும்..

மாணவர் பருவத்து நட்பாக இருந்தாலும், வாலிபப் பருவத்துக் காதலாக இருந்தாலும், குடும்ப வாழ்வில் கணவன் மனைவி உறவாக இருந்தாலும், அது நிலைத்து நிற்க வேண்டுமானால், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்தல் அவசியமாகும்.

சிலர் பிடிவாதமாக, தான் பிடித்த பிடியைச் சற்றும் தளர்த்தாமல் இருப்பர். மற்ற நபரும் அதே பிடிவாதத்துடன் இருந்தால் அங்கு முறிவு கட்டாயம் நிகழும்.

விட்டுக் கொடுப்பது என்பது என்ன?

ஒருவர் கோபப்பட்டு கடுமையாகத் திட்டினால், இன்னொருவரும் பதிலுக்குக் கடுமையாகத் திட்டுவாரேயானால் அங்கு மேலும் மேலும் கடுமையான சொற்கள் பயன்படுத்தப்பட, இருவரும் சூடேறி கொதிப்படைவர். மாறாக ஒருவர் கடுமையாகத் திட்டும்போது, மற்றவர் சிரித்துக்கொண்டே அமைதியாகப் பேசினால் மற்றவரின் கோபம் குறையும். அவர் தன் தவறை உணர்வார். 

இங்கு அமைதி காத்தவர், தான் பயன்படுத்த வேண்டிய கடும் வார்த்தையை விட்டுக் கொடுத்தார். இதனால், அவருக்கு இழப்பு ஒன்றும் இல்லை. அவருக்குப் பெருமை தான் சேரும்.

இதையும் படியுங்கள்:
சைக்கோ சிம்பாலஜி தியானம் சொல்லும் கருத்து என்ன தெரியுமா?
Lifestyle articles

அதேபோல், ஒருவர் ஆத்திரப்பட்டு அடிக்கும்போது, நாமும் பதிலுக்குப் பதில் அடித்தால், அடி, உதை, குத்து, வெட்டு என்று அது கூடிக்கொண்டே செல்லும். 

மாறாக, ஒரு அடியைப் பொறுத்துக்கொண்டு அமைதி காத்தால் அடித்தவரே வெட்கப்படுவார். விட்டுக் கொடுத்தவர் மதிப்பு அங்கு உயரும்.பதிலுக்குப் பதில் பேசி, பதிலுக்குப் பதில் அடித்து பெறும் பயன் ஒன்றும் இல்லை. ஆனால், விட்டுக் கொடுக்கும்போது பெருமை உயரும்.

நடந்து செல்லும்போது, ஒருவர் வந்து மோதினால், “பரவாயில்லை, பார்த்துப் போங்க” என்று சொன்னால், அவர் புன்முறுவலோடு தன் தவறை உணர்ந்து செல்வார். அதைச் செய்யாது அவரிடம் முறைத்துப் பேசினால் அங்கு மோதல் உருவாகும், நாமும் சிறுமை அடைவோம்.

அதனால்தான் விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை என்பர். இதைத்தான் அக்காலத்தில், “ஒருவர் பொறை இருவர் நட்பு” என்றனர். அதாவது நட்பு கொண்ட இருவரில் ஒருவர் பொறுத்துப் போனால் அது அந்த நட்பு வளர, நிலைக்க, நீடிக்க வழி செய்யும் என்பதே அதன் பொருள்.

நிலைத்து வாழவும், உறவு நீடிக்கவும், சிக்கல், இழப்பு தவிர்க்கவும் விட்டுக் கொடுத்தல் கட்டாயம். விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும். தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும். மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் சரியான முடிவுகள் எடுப்பது எப்படி தெரியுமா?
Lifestyle articles

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com