
வலது பக்க மூளைக்கு ஒரு சிறப்பு உண்டு. அது என்னவென்றால் நமது வலது பக்க மூளையில் ஏராளமான ஆற்றல்கள், ஞானம், அறிவுக் களஞ்சியுங்கள், அபரிமிதமான செயலாக்கும் சக்திகள் ஆகியவை தேங்கிக்கிடக்கின்றன.
சின்னங்கள் அல்லது சித்திரங்களை பார்க்கும்போது அதன் சூக்குமமான ரகசிய சக்திகளை வலது மூளை உணர்ந்து கொண்டு செயல்பட ஆரம்பிக்கிறது. ஆதலால் நாம் எதையாவது அடைய விரும்பினால் குறிப்பாக கல்வியில் சிறந்து விளங்க, நல்ல இல்லறம் அமைய, நோயற்ற வாழ்வு வாழ என்று நாம் நினைத்ததை அடையவேண்டுமானால், அதற்கான சின்னங்களை வலது பக்க மூளையில் பதியவிட்டு தியானத்தை மேற்கொண்டால் நாம் விரும்பியதை அடையலாம். அப்படி செய்யப்படும் தியான பயிற்சிக்கு பெயர்தான் சைக்கோ சிம்பாலஜி தியானம் என்பது.
அதாவது தினசரி இரவு நோயற்ற வாழ்வுடன் வாழ வேண்டும், மற்றும் வேண்டிய வசதிகளுடன் நல்லபடியான வாழ்வு வாழ வேண்டும் என்று நினைத்து படுப்பதற்கு முன்பாக மனக்கண்ணில் அமைதியான ஒரு நீர்த்தேக்கத்தை பார்க்கிறேன், அத்துடன் அந்த நீர்த்தேக்கத்தின் அமைப்பு, அதைச் சுற்றி இருக்கும் அழகான இயற்கை வளங்களை பார்த்து ரசிப்பது, மரம், செடி, கொடிகளை தினசரி 10 நிமிடங்கள் மணக்கண்ணில் பார்த்து வலது பக்க மூளைக்கு பரப்பிவிடுவது போன்றவற்றை செய்து வருகிறேன்.
இதனால் வேலையில் சோர்வு ஏற்படாமலும், உடனுக்குடன் எந்த பிரச்னைக்கும் முடிவு எடுத்து தீர்வு காணவும் முடிகிறது.
மனதுக்கு அமைதியையும், பரம சுகத்தையும் மறை மனம் என்று சொல்லக்கூடிய வலது மூளை எனக்குத் தருகிறது. இதனால் மன மகிழ்ச்சியுடன் இருக்க முடிகிறது. இப்படி இருப்பதற்குப் பெயர் தான் சைக்கோ சிம்பாலாஜி தியானம் என்கிறார் ஒரு பெண்மணி.
இந்த தியான சக்திகளால் தனது குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமானதாகவும், ஆனந்தமாகவும் இருப்பதாக கூறுகிறார்.
ஆதலால் நமது வலது பக்கத்து மூளையில் தகுந்த சின்னங்களை பதிய விடுவதால் நம்மிடம் இருக்கும் தேவை இல்லாத பழக்கவழக்கங்களை அகற்றி விடலாம். பொறாமை குணங்கள், மற்றவர்களை வெறுக்கும் எண்ணங்கள், சுயநலம், நான் என்னும் அகம்பாவம் ஆகியவைகளை போக்கிக் கொள்ளலாம். அன்பு, அமைதி, தயவு, ஒழுக்கம் ஆகிய நற்குணங்களை வேண்டி அனுபவிக்கலாம்.
மொத்தத்தில் நம்மை ஒரு புது மனிதர் ஆக்கிக் கொள்ளலாம் என்பதை தெள்ளத்தெளிவுடன் விளக்குவதுதான் இந்த தியானத்தில் சிறப்பு. சின்முத்திரையுடன் விளங்கும் தட்சிணாமூர்த்தியின் திருவுருவத்தை நமது வலது பக்க மூளையில் மணக்கண்ணில் பரவவிடலாம். இதனால் ஏற்படும் மாற்றங்களை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
இன்னும் எளிமையாக கூறவேண்டும் என்றால் ஒரு சிங்கம் வரை படத்தை தினசரி இரவு படுக்கும் முன் பார்த்து மனதில் பதிய வைத்து வந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறலாம்.
பெண்களும் இந்த சின்னத்தை இரவு அமைதியாக படுக்கும்போது பத்து நிமிடங்கள் பார்த்து தியானித்து வந்தால் மனோதைரியம் கிடைக்கும். பயந்த சுபாவம் போய்விடும் என்று கூறப்படுகிறது.
என் தோழிமார்களில் சிலர் ஸ்வஸ்திக் சின்னத்தை நினைவில் நிறுத்தி வேண்டியதை அடைந்திருக்கிறேன் என்று கூறி கேள்விப் பட்டிருக்கிறேன். இது மூளைக்கு நல்ல பயிற்சி. இதனால் கவனச்சிதறல் ஏற்படாது. மனதை ஒருமுகப்படுத்துதல் மேம்படும் என்பது உறுதி. செய்து பார்ப்போம்; செம்மையாவோம்!