
இந்தப் பதிவில் கூறப்பட்டிருக்கும் 5 பழக்க வழக்கங்களை நீங்கள் நாள் தவறாமல் கடைபிடித்து வந்தால் அது உங்களை அதிக புத்திசாலியாகவும், கூர்நோக்குடன் கூடிய சுய விழிப்புணர்வு கொண்டவராகவும் மாற்றும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
தினசரி ரீடிங்: தினமும் ஏதாவது ஒரு வரலாறு, அறிவியல் சம்பந்தப்பட்ட நல்ல புத்தகம், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புனை கதைகள் போன்றவற்றைப் படிக்கும்போது அது உங்கள் அறிவை விருத்தியடையச் செய்யும். மேலும் தினசரி நியூஸ் பேப்பர்களைப் படிப்பதால் தற்கால நடைமுறை செய்திகளை அறிந்துகொள்ளவும் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் முடியும்.
கேள்வி கேட்டு அறிவை வளர்த்தல்: ஏதாவது ஒரு பொருள் அல்லது சூழ்நிலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் சந்தேகம் வரும்போது, 'ஏன்' 'எதற்கு' 'எப்படி' என்ற கேள்விகளை தயங்காமல் கேட்டுத் தெளிவு பெறுதல், அந்த விஷயத்தை முழுமையாக, புரிதலுடன் கற்றுக்கொள்ள உதவும். ஆர்வம் இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்.
புத்திசாலி மனிதர்களை உடன் வைத்துக் கொள்ளுதல்: புத்திசாலி மனிதர்களை உங்களுடன் வைத்துக்கொண்டு அவர்களுடன் உரையாடும்போது, ஒவ்வொருவரின் உள்மனது எண்ணங்கள் மற்றும் வேறுபட்ட சவால்கள் வெளிவரக்கூடும். அவற்றை அறிந்துகொள்வதன் மூலம் உங்கள் புத்திசாலித்தனம் மேலும் கூர்மை பெறும்.
செய்யும் செயல்களை திரும்பவும் நினைத்துப்
பார்த்தல்: ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்த அனைத்து செயல்களையும் நினைத்துப் பார்க்கவும், அவற்றில் ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால் அதையும் கவனத்தில் கொள்ளவும் சிறிது நேரத்தை ஒதுக்கி வைப்பது அவசியம்.
அந்த நேரத்தில், தவறுகள் எதனால் ஏற்பட்டது, வரும் நாட்களில் அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம், மற்ற செயல்களை எப்படி இன்னும் பெட்டராக செய்யலாம் என்றெல்லாம் யோசித்து வைத்துக்கொண்டால் அது உங்களை மேலும் ஸ்மார்ட்டாக வெளிப்படுத்த உதவும். இதில் தோன்றும் முக்கிய பாயிண்ட்களை டைரியில் குறித்து வைத்துக் கொள்வதும் நன்மை தரும்.
கற்றதை பிறர்க்கும் கற்பித்தல்: நீங்கள் கற்றுத் தெரிந்துகொண்ட கருத்துக்களை பிறருக்கும் தெளிவாக விளக்கிக் கூறிப் புரிய வைக்கலாம். இது நீங்கள் தெரிந்துகொண்ட விஷயங்களை சிறந்த முறையில் உள்வாங்கி நீண்ட நாள் மனதில் வைத்துக்கொள்ள உதவிபுரியும்.