
எப்போதும் அழுதுகொண்டும் புலம்பிக் கொண்டும் இருக்கும் நபர்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால், ஒரே ஒரு நபரால் ஒரு நகரையே மகிழ்ச்சி நகரமாக ஆக்கவும் முடியும் தெரியுமா? அதற்கு ஒரு வழியும் உண்டு!
பிரபல அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளரும் புலிட்ஸர் விருது பெற்றவருமான ஆர்ட் புச்வால்ட் (ART BUCHWALD - தோற்றம் 20-10-1925 மறைவு 17-1-2007) தி இம்பாஸிபிள் ட்ரீம் (THE IMPOSSIBLE DREAM) என்ற கட்டுரையில் இந்த வழியைத் தந்துள்ளார். இதை முயன்று பார்த்து தானும் மகிழ்ச்சி அடைந்து மற்றவரையும் மகிழ்ச்சி அடையச் செய்தோர் பலர். அவரது கட்டுரையின் சுருக்கத்தைப் பார்ப்போம்...
டாக்ஸி நின்றது. நண்பருடன் சென்ற நான் டாக்ஸியிலிருந்து இறங்க முயன்றேன். அப்போது என் நண்பர் டாக்ஸி டிரைவரைப் பார்த்து, “நன்றி! மிக அருமையாக வண்டியை ஓட்டினீர்கள். உங்களுடையது சூப்பர் ஜாப்” என்றார்.
டிரைவர் ஒரு நிமிடம் திகைத்தார். பின்னர் கேட்டார்: ”நீங்கள் என்ன ஒரு வேடிக்கையாக இதைச் சொல்கிறீர்களா அல்லது ...” என்று இழுத்தார். “இல்லை இல்ல, நிஜமாகவே நீங்கள் அருமையாக வண்டியை ஓட்டினீர்கள். அதைத் தான் சொன்னேன்” என்றார் நண்பர். டிரைவர் சிரித்தவாறே வண்டியைச் செலுத்தலானார்.
நான் நண்பரைக் கேட்டேன்: “என்ன இதெல்லாம்?”
நண்பர் கூறினார்: “பரபரப்பான இந்த நகரத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியைக் கொண்டு வர நான் முயற்சி செய்கிறேன்.
“அது எப்படி முடியும்? ஒரு ஆள் ஒரு நகரத்தை மாற்றி விட முடியுமா என்ன?” – இது நான்.
“ஒரு ஆள் இல்லை. அந்த டாக்ஸி டிரைவர் இருபது பேரையாவது இன்று சவாரிக்கு அழைத்துச் செல்வார். இப்போது நான் சொன்ன பாராட்டினால் அவரும் நிச்சயமாக இன்னும் ஒருவருக்கேனும் நன்றியுடன் அன்பைப் பொழிவார். அப்படியே அந்த அன்பு தொடர் சங்கிலியாகி நகர் முழுவதும் பரவும் இல்லையா?”
“ஒரு டாக்ஸி டிரைவர் இதைச் செய்வாரா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் செய்யாவிட்டால்...?.”
நண்பர் பதில் அளிக்க ஆரம்பித்தார்: “அதனால் ஒன்றும் மோசமில்லை. இன்று நான் குறைந்தபட்சம் பத்து பேரையாவது பார்ப்பேன், அவர்களை மகிழ்ச்சியுறச் செய்வேன், இன்று இல்லையேல் நாளை இன்னொரு டாக்ஸி டிரைவர். இந்த சிஸ்டத்தை நான் நன்கு ஆராய்ந்து வைந்துள்ளேன். பத்துப் பேரில் ஒருவர் இதைப் பிடித்துக் கொண்டு இன்னொரு பத்து பேரை ஊக்குவித்தால் பத்துப் பத்தாக இதன் மடங்கு பெரிதாகும் இல்லையா? நாம் மதிப்புக் கொடுப்பது பணத்திற்கு மட்டும் தான். அதற்கு அப்பாலும் ஒன்று இருக்கிறது. அது தான் பாராட்டு. மனம் நிறைந்த உண்மையான பாராட்டு! இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் நல்ல பணியாளர்களை அலுவலகத்தில் கூட யாரும் பாராட்டுவதில்லை.”
நாங்கள் இப்போது பிரம்மாண்டமான ஒரு கட்டிடம் கட்டும் இடத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தோம். அங்கு சுவர் அருகில் நின்று கொண்டிருந்த கொத்தனாரைப் பார்த்து நண்பர் கூவினார்: “அடடா! அருமையான வேலை! இது எப்போது முடியும்?”
சந்தேகக் கண்ணோடு அந்தக் கொத்தனார் என் நண்பரைப் பார்த்து, “அக்டோபர் மாதம்” என்றார்.
“மிக நல்ல வேலை செய்திருக்கிறீர்கள். உண்மையாகவே நீங்கள் கர்வப்பட வேண்டும். எனது வாழ்த்துக்கள்...” சொல்லியவாறே நகர்ந்தார் நண்பர்.
நான் கேட்டேன் : “ஆனால் நீ ஒரே ஒரு ஆள் தானே இப்படிச் செய்வது?”
என்னை இடைமறித்த நண்பர் கூறினார்: ”ஆமாம். அது எனக்குத் தெரியாதா என்ன? எனது வார்த்தைகளை அந்தக் கொத்தனார் ஜீரணிக்க கொஞ்ச நேரம் ஆகும். அப்புறம் இன்று நாள் முழுவதும் கட்டிடப் பணியாளர்களிடையே மகிழ்ச்சி தான். போ!.... சரி சரி, இதோ அங்கே ஒரு நல்ல பெண்மணி வருகிறார், பாரேன்!”
அந்தப் பெண்மணி அருகில் வந்ததும் பெரிதாக கும்பிடு போட்டு, நண்பர் நமஸ்தே என்று கூற, அவர் சிரித்தவாறே மகிழ்ச்சியுடன் நகர்ந்தார்.
நான் சொன்னேன்: “அது ஒரு பள்ளிக்கூட ஆசிரியை தான்! நிச்சயமாக எனக்கு ஒன்று தெரிகிறது. இப்போது! இன்று அவரது கிளாஸே வேற லெவல்ல இருக்கும்.” நண்பர் சிரித்தார். நானும் சிரித்தேன்!
நண்பர்களே! இப்போது புரிகிறதா...? ஒரே ஒரு நபரால் ஒரு நகரையே எப்படி மகிழ்ச்சி நகராக மாற்ற முடியும் என்பது!
‘The Impossible Dream’ என்ற ஆர்ட் புச்வால்டின் கட்டுரையை பலர் கையில் எடுத்துச் சென்று நண்பர்களிடம் காண்பிப்பது உங்களுக்குத் தெரியுமோ? நகரத்தை மகிழ்ச்சி நகரமாக ஆக்க முயல்வோர் அவர்களே தான்!