
ஒன்றை இழந்துதான் மற்றொன்றை பெறவேண்டும். தன்னுடைய இளம்பருவத்தை வறுமையில் கழித்தவர்கள் வசதிக்காக ஏங்குகிறார்கள். எந்த பணம் அவர்களைத் துன்பத்திலும், சோதனையிலும் தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததோ, அந்த பணத்தை திகட்டுமளவு சம்பாதிக்கும் ஆசை அவர்களுக்கு வந்து விடுகிறது. தங்கள் தூக்கத்தை இழந்து, ஓய்வை இழந்து, பல இனிய அனுபவங்களை இழந்து பணத்தை குவிக்கிறார்கள்.
எண்ணம் சக்தி வாய்ந்தது. ஆயுதத்தை விட மதிப்பு மிக்கது. எண்ணத்தில் இருந்தே செயலுக்கான தூண்டுதலை நாம் பெறுகிறோம். நல்ல எண்ணங்கள், நல்ல விளைவுகளையும், தீய எண்ணங்கள் தீய விளைவுகளையும் தத்தம் செயலின் வழியே கொண்டிருக்கும். எண்ணமே வாழ்க்கையை வடிவமைக்கிறது. பணத்தின் மீது விருப்பம் இருக்கலாம், ஆசை இருக்கலாம். ஆனால் அதுவே வெறியாகி விடக்கூடாது.
நீங்கள் எதை வேண்டுமானாலும் அடுத்தவர் தலையில் கட்டிவிட முடியும். ஆனால் உங்கள் கவலையை அவர்கள் மீது சுமத்த முடியாது. மனிதர்கள் இரண்டு வகை. எதற்குமே கவலை படாதவர்கள், எடுத்ததற்கெல்லாம் கவலைப்படுகிறவர்கள் என இரண்டு வகை. நியாயமான கவலைகள் மனித இயல்பு.
நேற்று வரை தொலைந்துபோன பணத்துக்காகக் கவலைப்படுவதும், அடுத்து தொலைத்ததைவிட பணக்கார உறவினர் முலமாக அதிகபணம் ஈட்டிவிட முடியுமா என்ற எதிர்பார்ப்பதும் எப்படி நியாயமான கவலையாகும்?
வாங்கிய கடனை எப்படிக் கொடுப்பது? கொடுத்த கடன் திரும்ப வருமா? பைக்கில் சென்ற கணவன் பத்திரமாக வீடு திரும்புவானா? இப்படி கணக்கில்லாத கவலைகளும் சிலருக்கு எட்டிபார்க்கும்.
கவலைகள் காளான்களாய் முளைக்கும். விட்டு வைத்தால் மலையாக மாறி நம்மை மலைக்கச்செய்யும்.
அனாவசியக் கவலைகளுக்கு இடமளிக்க வேண்டாம். அவை உங்கள் கனவுகளின் வண்ணங்களை இழக்கச்செய்யும். கவலை உங்களுடைய ஊக்கத்தை நலியச் செய்துவிடும். ஊக்கத்தை இழந்தால் நீங்கள் வெற்றியில் இருந்து வெகுதூரம் விலகி நிற்கும்படியாகி விடும். இதை புரிந்து கொள்கிறவரை வாழ்க்கையில் உண்மையான எதிர்பார்ப்பு மற்றும் திருப்தி எது என்பதை நாம் உணர முடிவதில்லை.
நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில் இல்லை. அவற்றை பெறுவதில் இருக்கிறது. அதனால்தான் நாம் கடை கடையாக ஏறி, நமக்கு பிடித்தமானதை வாங்குகிறோம். மகிழ்ச்சி எங்கெல்லாம் இருக்கிறது? ஒலிக்கின்ற அருவியில், உலவுகின்ற காற்றில். அழகு பூக்களில், கவலை சிறிதுமில்லாத குழந்தையின் முகத்தில்... இப்படி எண்ணற்ற இடங்களில் மகிழ்ச்சி பரவிக் கிடக்கிறது.
சவால் என்பது சாதாரணமல்ல... ஒரு சவாலை நீங்கள் எதிர்கொள்கிறபோது அது உள்ளடக்கிய அநேக பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சவால்கள் வளர்ச்சிக்கு அவசியம். அவற்றை வெல்கிறபோது நீங்கள் வளர்ச்சி அடைகிறீர்கள் என்று அர்த்தம்.
எதுவுமே இல்லாதிருப்பதை விட ஏதாவது ஒன்றை பெற்றிருப்பது மேலானது என்பார்கள். நம்பிக்கை என்பது விரும்பிய விதத்தில் எண்ணமிடுவது அல்ல, ஒன்றைத் திடமாக நம்புவது.ஒரு எண்ணத்தை, ஒரு திட்டத்தை, ஒரு செயலால் உங்களால் உருவாக்க முடியும். பின்னணியில் வலுவான நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம்.
ஒரு விதையளவு நம்பிக்கை இருந்தால் போதும். சிறிய விதைதான். ஆனால் அது விதைக்கப்பட்டு விடுகிறபோது அது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவந்து விடுகிறது.