இங்கு பல பேர் மற்றவர்களை உருவத்தை வைத்து, உடையை வைத்து, தகுதியை வைத்து எடை போடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால், இங்கு யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.
ஒரு விஞ்ஞானி அவருடைய காரில் தனியாக பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய கார் திடீரென்று பஞ்சர் ஆகிவிட்டது. அவருடைய கார் பஞ்சர் ஆன இடத்தில் எந்த கடையுமே இல்லாத காரணத்தால், அவரே டயரை கழட்டி ஸ்டெப்னியை மாற்ற ஆரம்பிக்கிறார்.
அப்போது அவரின் கைகளில் இருந்த போல்ட்கள் எல்லாம் தவறி அருகில் இருந்த குட்டையில் விழுந்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக அழுக்கு உடை அணிந்துக் கொண்டு ஒரு நபர் நடந்து சென்றுக் கொண்டிருப்பதை விஞ்ஞானி கவனிக்கிறார்.
எனவே விஞ்ஞானி, ‘அந்த நபரை குட்டையிலே இறங்கி போல்ட்டை எடுக்க சொல்லலாம்’ என்று எண்ணிக் கொண்டே அவரை அருகில் அழைத்தார்.
அந்த அழுக்கு உடையணிந்த நபரிடம் நடந்தவற்றை எல்லாம் அந்த விஞ்ஞானி கூறினார். இதைக்கேட்ட அந்த நபர், ‘அதற்கு எதற்காக குட்டைக்குள்ளே இறங்க வேண்டும். காரில் உள்ள மற்ற மூன்று டயர்களில் இருந்தும் ஒவ்வொரு போல்ட்டை கழட்டி இந்த டயரில் இப்போதைக்கு போட்டுவிட்டு மெக்கானிக் ஷாப்க்கு எடுத்துச்சென்று அங்கே நான்கு போல்ட்டை வாங்கி போட்டுவிடலாமே!’ என்று சொன்னார்.
இதைக்கேட்ட விஞ்ஞானி, இவ்வளவு அறிவாக சிந்திக்கும் இவரைப்போய் அவரின் உடையை வைத்துக் குறைவாக எடைப் போட்டுவிட்டேனே?’ என்று நினைத்து தலைக் குனிந்தார்.
ஒரு பறவை உயிருடன் இருக்கும்போது அதற்கு புழு உணவாகிறது. இதுவே அந்த பறவை இறந்துவிட்டால், பறவை புழுவிற்கு உணவாகிறது. காலம், சூழ்நிலை எப்போது வேண்டுமானாலும் மறலாம். எனவே உருவத்தை வைத்தோ, உடையை வைத்தோ, தகுதியை வைத்தோ யாரையும் எடைபோடாதீர்கள். ஏனெனில், இங்கே யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. இதைப் புரிந்து நடந்துக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.