
இந்த மண்ணிலே பிறந்தவர்கள் இன்றோ நாளையோ நாளை மறுநாளோ இறப்பது நிச்சயமாக்கப்பட்டது. வாழ்ந்தவர்கள் எல்லாம் வரலாறாகியது இல்லை. சிலர் பிஞ்சிலேயே உதிர்ந்து போகின்றார்கள். இன்னும் பலர் காயாகிக் கருகிப் போகின்றார்கள். சிலர் பழமாகிப் பழுத்து விழுகின்றார்கள். தளிராக இருக்கும்போது இறப்பதும் சருகாகி சாய்ந்து போவதும் இறைவன் விதித்த விதி என்பதை விட- சூட்சுமக் கயிறு நம் கையிலேயும் இருக்கின்றது என்பதே உண்மை.
சுவர் இல்லாது சித்திரம் வரைவது இயலாது. உயிர் இயங்க, உடல் அவசியம். உடல் நீண்ட நாள் பழுதில்லாது இருக்க ஆரோக்கியம் தேவை. ஆரோக்கியம் இல்லாத உடல் அச்சாணி இல்லா வண்டிச்சக்கரம். ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை வாழ்வல்ல. அது மரணத்தின் நிழல்.
உங்களுடைய ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாத்துக் கொள்வது உங்களது கடமை. அதைப் புறக்கணித்தால் உங்களுக்கு நீங்களே சுமையாகி விடுவீர்கள். உங்களைச் சார்ந்தவர்களுக்கும் பாரமாகி விடுவீர்கள்.
அளவானதேவைக்குரிய உணவு நிறைவான உறக்கம். முறையான உடல் உறவு,சீரான பணி சுகாதாரமான சுற்றுப்புறம் இவற்றை வகுத்துக்கொண்டு வாழ்ந்தால் மருந்து உங்களுக்குத் தேவை இல்லை.
சமூக ஒழுக்கத்திற்கும் சமய நல்லிணக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கும் ஆரோக்கியம் நமக்கு ஆணிவேர். வாழ்க்கையை நீண்ட நாள் அனுபவிக்க ஆரோக்கியம் அவசியம்.
உடல் தூய்மைக்கு அடுத்து உள்ளத் தூய்மையும் எழுச்சியும் ஒவ்வொருவருக்கும் இருந்தாக வேண்டும். மனத்தின் வீச்சையும் வேகத்தையும் இது நாள் வரை எந்த அறிவியலும் அளவிட்டுக் கூற இயலவில்லை,' மனிதனின் மனம் தெய்வத்தின் நிழல்' என்றான் பைரன் என்ற ஆங்கிலக் கவிஞன். 'மனத்தூய்மையும் மன எழுச்சியும் இல்லாது எந்த ஒரு பெரிய காரியத்தையும் செய்ய இயலாது' என்றான் எமர்ஸன். புகழும் நல்லிணக்கமும் வந்தாக வேண்டுமானால் மனத்தூய்மை வேண்டும் என்று எச்சரித்தது வள்ளுவம்.
மனத்தூய்மையை பெற்றுவிட்டால் தவறுகள், காழ்ப்பு, கசப்புகள், பேராசை, தீயபழக்க வழக்கங்கள் தனிமனித வாழ்விலேயும் சரி, பொதுவாழ்விலேயும் சரி தலை தூக்காது. இது சத்தியம். தனிமனித ஒழுக்கக் கேடான செயல்களால் எத்தனையோ சமுதாயங்களும் நாடுகளும் சாய்ந்து போயிருக்கின்றன. என்ற கண்ணீர் கதைகளை எத்தனையே சரித்திரங்கள் சொல்லியிருக்கின்றன. நினைத்துப் பாருங்கள். எனவே தனிமனித ஒழுக்கம் காக்கப்பட வேண்டும்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றார் காஞ்சித் தலைவர் அண்ணா. ஒவ்வொருவருக்கும் கடமை விதிக்கப்பட்ட ஒன்று. அரசன் முதல் ஆண்டி வரை கடமை அவரவர்க்குரிய கட்டாயங்களுள் ஒன்று. சுயநலம் கலக்காத கடமை தெய்வீகம். உரிமைகளின் மூலதனம் கடமை என்றார் காந்தியார். ஆகவே வாழ்ந்து காட்டுங்கள் வையகம் உங்களை வாழ்த்தும்.