
நாம் அடிக்கடி ஆரூர் சென்று வந்திருந்தாலும் இவ்வாலயம் பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். இதை கட்டியவன் மூன்றாம் குலோத்துங்கன் என்னும் பிற்கால சோழனாகும்.
திருக்கோவிலின் பிரதான கிழக்கு வாயிலில் 113 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இதற்கு மகாமதுரம் என்று பெயர். தெற்கு கோபுரத்தின் பெயர் தென்னன் திருவாசல். இரண்டாம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள கோபுரம் ஆரியன் கோபுரம். மந்திரமயமான மணிபுற்றில் எழுந்தருளும் இறைவருக்கு முன்புள்ள கோபுரம் அழகியான் கோபுரம்.
புற்றிடம்கொண்டார் கருவறைக்கு முன்பு தூணோடு கூடிய மண்டபம் (அர்த்த மண்டபம்) அந்தராள மண்டபமாகும். இந்த மண்டபத்தில் தான் அம்மை மணோன்மணி அமர்ந்திருப்பாள்.
செங்கல் கோவிலாக இருந்த பூங்கோவிலை கற்கோவிலாக அமைத்தவர் மூன்றாம் குலோத்துங்கன் மனைவி பரவை நாச்சியார் ஆவார். இவள் கொடுத்த இரு பாவை விளக்கு இன்றும் சுவாமி சன்னதியில் ஏற்றி வைக்கப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் 42,000 கிலோ எடையுள்ள பொன் தகடுகளால் பூங்கோவில் கூரை மற்றும் சுவற்றை அலங்கரித்தான்.
தங்கத்தால் பூங்கோல் கதவுகள் மற்றும் சாமரம், பூஜைக்குரிய பாத்திரங்கள் ஆகியவற்றை செய்து கொடுத்தான். சன்னதியை அடைக்கும் போது தியாகேசனை சிவப்பு நிற திரையால் மறைப்பார்கள். இதற்கு த்ரஸ்கரணி என பெயர்.
தியாகேசர் திருமேனியைச் ஒன்பது விளக்குகள் எப்போதும் எரிந்த வண்ணம் இருக்கும். இங்கு ஒன்பது நவகிரகங்களும் விளக்காக உருமாறி வந்து வழிபாடு செய்வதாக ஐதீகம்.
தியாகேசகருக்கு இருபுறம் விளங்கும் இருவாள்கள்
ஞானகட்கம்
வீரகட்கம்
சோமஸ்கந்தர் வடிவத்தில் ஈசரோடு உள்ள உமையாளுக்கு என்று தனி திருநாமம் கொண்ட ஒரே திருக்கோவில் திருவாரூர் மட்டுமே.வேறு எங்கும் இல்லை.
அதே போல் நீலோத்பலம் என்னும் மலரால் அர்ச்சனை நடப்பது தியாகேசருக்கு மட்டுமே. இம்மலர் ஒரு நீர் வாழ் உயிரினமாகும்
புற்றிடங் கொண்டார் சன்னதியில் நந்தி பெருமானுக்கு பின்னே பித்தளையால் ஆன கண்ணாடி உண்டு. இதனை கண்டபின்னே மூலவரை காண வேண்டும். இந்த கண்ணாடி பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட அனைத்து தோஷங்களை உள்வாங்கும் தன்மை உடையதாக நம்பப்படுகிறது.
பூங்கோவிலில் துவார பாலகர்களாக முசுகுந்தனும் இந்திரனும் இருப்பதாக ஐதீகம். இதனை திருக்கோவில் முகப்பிலும் (வெள்ளி திருக்கதவில்) காணலாம்.
பூங்கோவில் தியாகேசரை தரிசிக்க (அர்த்த மண்டபம்) நுழையும் திருவாயில் பெயர் திரு அனுக்கன் திருவாயில்.
இறைவராம் ஈசனுக்கு இங்கு மட்டுமே இன்றும் புலித்தோல் தரிக்கின்றார்.
இந்த ஊரில் வழங்கப்படும் திருநீறுக்கு மட்டுமே சிறப்பு பெயர் உண்டு. இங்கு தரப்படும் திருநீறுக்கு திருமந்திரம் என்று பெயர்.