இனிமையாய் வாழ...

Motivation Image
Motivation Imagepixabay.com

புத்தாண்டு நேரத்தில் பலரும் பல்வேறு விதமான உறுதி மொழியை எடுப்பது வழக்கம். உடல் நலம் குறித்து அக்கறை காட்டுவது அதைவிட அதிகமாக இருக்கும். எடுத்த வேகத்தில் அதை செயல்படுத்துவதில்தான் அதன் வெற்றியே அமைந்திருக்கிறது. இந்த புத்தாண்டு தினத்தில் தினசரி நாம் செய்ய வேண்டியதை சரியாக செய்தாலே நோய்நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம். மன மகிழ்ச்சி உடனும் வாழலாம். அதற்கு எளிய வழிகள் இதோ. 

மனம் அமைதியாக இருந்தால் மருந்துக்கு அவசியம் இருக்காது. அதற்கு மகிழ்ச்சி முக்கியம் அப்படி மகிழ்ச்சி தரும் அந்த நான்கு விஷயங்கள்.

நம்பிக்கை;

ம்பிக்கைதான் வாழ்க்கை. மனிதன் சுவாசிக்க காற்று எவ்வளவு அவசியமோ, அதை விட அவசியம் நம்பிக்கை. ஒவ்வொன்றிலும் நம்பிக்கை வைக்க வேண்டும். இது நம்மால் முடியும் என்று நம்ப வேண்டும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்று நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை இருந்தால்  நாம் அடைய நினைக்கிற அத்தனை இலக்குகளையும் அடைய முடியும். நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு என்று பாடினான் பாரதி.  கடினமாக உழைக்கிறவனுக்கு கடவுள் கண் திறக்கிறான். மனிதன் கதவை அடைத்தால், இறைவன் சன்னலை திறக்கிறான் என்பது பழமொழி. வெற்றி பெற இறையருள், நம்பிக்கை, கடினமான புத்திசாலித்தனமான உழைப்பு மூன்றும் அடிப்படை தேவைகள். கடினமான உழைப்பு பல நேரங்களில் பலன் கொடுக்காததற்கு காரணம் ஒன்று நம்பிக்கையின்மை. இரண்டாவது புத்திசாலித்தனம் கலவாத கடினமான உழைப்பு .ஆதலால் காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் இன்று புதிதாய் பிறந்தோம் என்று எண்ணிக்கொண்டு. நான் முன்பு போல் இல்லை .நன்றாக இருக்கிறேன். நன்றாக ஆகிவிட்டேன். இனி தோல்வி என்பதே இல்லை .எடுத்த காரியம் எல்லாவற்றிலும் வெற்றியை பெறுவேன் என்று தனக்குத்தானே பலமுறை சொல்லிக் கொள்ளுகிறவர்கள் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. ஆதலால் மனிதன் தான் மரம் நடுகிறான்; இறைவன்தான் மழை பொழிகிறான் இதுதான் உண்மை. நாம் நடும் மரங்களுக்கு கட்டாயமாக இறைவன் மழை பொழிவான் என்ற நம்பிக்கையே நம்மை பல உயரத்திற்கு எடுத்துச் செல்லும்.

நிலவைப் பார்த்தால் படைப்பின் அழகு புரியும். சூரியனைப் பார்த்தால் படைப்பின் வலிமை புரியும். கண்ணாடியில் உங்களைப் பார்த்தால் படைப்பின் உன்னதம் புரியும். இந்த உலகில் உன்னதமான படைப்பு நீங்கள்தான். எனவே உங்கள் மீதான நம்பிக்கையை எப்போதும் இழக்காதீர்கள். இந்த நம்பிக்கையை தினந்தோறும் நம் மனதில் ஏற்றி செயல்படுவதே நம் மனதை இதமாக்கும். 

நன்மையே விளையும்:

ராமன் தேடிப் போனதோ சுக்ரீவனின் நட்பு. அவன் தேடாமல் கிடைத்ததோ அனுமனின் உறவு. சில வேளைகளில் எதிர்பார்க்கும் ஒன்றால் விளைகிற நன்மைகளை விட எதிர்பாராத ஒன்று நடந்து அதிசயிக்கத்தக்க நன்மைகள் நடைபெறுவது உண்டு. ஆதலால் நம் பயணம், பாதை என எல்லாமே ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டிருக்கின்றன. நமக்கான எல்லாம் அந்தந்த காலத்தில் கிடைக்கும் .அது நன்மையானதாகவே இருக்கும் என்பதை மனதில் இருத்திக் கொள்வோம். நாளும் மனதில் இதை இருத்திக் கொண்டால்  மகிழ்ச்சி ததும்பும் அந்த நாள் நன்னாளே. 

நன்றி உணர்வு:

வாழ்க்கையில் பெரிய விஷயங்களை அடைய நினைத்து நம்மிடம் ஏற்கனவே இருக்கும் சின்னச் சின்ன விஷயங்களை மறந்து விடுகிறோம். வாழ்க்கை குறுகியது, என்பதை உணர்ந்து எல்லாவற்றிற் காகவும் நன்றி கூறுவதை அன்றன்றைய தினம் மறக்காமல் செய்ய முனைவோம். மனிதர்களாக வாழ்வதற்கும் மனிதாபிமானத்துடன் வாழ்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை இந்த நன்றி உணர்வு சிறப்பித்துக் காட்டும். மனமகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு இதுவும் ஒரு சிறந்த வழி.

இதையும் படியுங்கள்:
2023ம் ஆண்டில் Kalkionlineல் அதிக கவனம் பெற்ற கட்டுரைகள்!
Motivation Image

மகிழ்ச்சி:

ம் மற்றும் பிறரது நல்ல அம்சங்களை எண்ணி மகிழ்வோம். குறைகளை ஏற்றுக் கொள்வோம். குறைகளை கூறித் திரியாது அதை நிறைகளாக மாற்றுப் பரிமாணம் செய்து கொண்டால் மகிழ்ச்சி கிட்டும். இது போன்ற சூழ்நிலைகளிலும் நகைச்சுவை உணர்வுடன் வளர்த்துக் கொண்டால் அது நம்மை மகிழ்வோடு வைத்திருக்கும். 

புத்தாண்டு நன்னாளில் இவைகளை உறுதி மொழியாக எடுப்போம். எடுத்ததை நாள்தோறும் தவறாமல் கடைபிடிப்போம். வெற்றி மேல் வெற்றி குவிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com