இழப்பது ஒன்றும் பெரிய தவறு இல்லை. நம்பிக்கை மட்டும் இருந்தால் இழந்த அனைத்தையும் நம்மால் மீட்டு விட முடியும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்றிக் கொண்டால் போதும் முயற்சியுடன் கூடிய வெற்றியை பெறலாம்.
மனித படைப்பில் ஒவ்வொரு மனிதனுக்கும் என்று ஒரு தனித்திறமை நிச்சயம் உண்டு. எனவே இழந்ததை இழந்ததாகவே எண்ணி சோர்வடையாமல் தைரியமாக எழுந்து நின்று முயற்சித்தால் இழந்ததை விட பன்மடங்கு திரும்பப் பெறலாம்.
முதலில் நாம் எதை இழந்தோம் என்று சிந்திக்க வேண்டும். நாம் கற்ற கல்வியையா, அனுபவத்தையா, சேர்த்து வைத்த பொருளையா? உறவுகளையா, புகழயா, பணத்தையா என்று சிந்திக்க ஆரம்பித்தாலே விடை தெளிவாக தெரியும். எதை இழந்தாலும் திரும்பப் பெறலாம் தன்னம்பிக்கையை தவிர!
வாழ்க்கை நம் வசப்பட ஓடுங்கள் ஓடுங்கள்! நம் முத்திரையை பதிக்கும் வரை தேடி ஓடுங்கள். இகழ்ந்தவர்கள் முகத்திரையை கிழிக்கும் வரை மனம் கலங்காமல் உழையுங்கள். வாழ்க்கை யாருக்கும் அவ்வளவு எளிதில் வசப்படாது. எண்ணியது ஈடேறும் வரை ஓயாது உத்வேகத்துடன் உழைத்திடுங்கள். விடாமுயற்சியின் பலன் வெற்றிதான் என்பதை விரைவில் உணருவோம்.
அவரால் சாதிக்க முடிந்தது, இவரால் சாதிக்க முடிந்தது என்று பட்டியல் போட்டு பெருமூச்சு விடாமல் நம்மாலும் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை.
வள்ளுவரின் குறள் ஒன்று:
"தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்"
வாழ்க்கையில் அனைத்தும் சாத்தியமே! நம்பிக்கை என்ற ஒன்று மட்டும் தளராமல் இருந்தால். காலமும் நேரமும் கூடி நம் நம்பிக்கையும் இணையும் பொழுது வெற்றி நம் வசப்படும்.
நம்முடைய பலம் எது, பலவீனம் எது என்பதை முதலில் கண்டறிந்து பலவீனத்தை போக்கி நமக்குள் இருக்கும் திறமையை மெருகேற்றி, நமக்கென்று ஒரு தனித்துவத்தை வளர்த்துக் கொண்டால் நம் திறமைக்கும் தனித்துவத்திற்கும் நிச்சயம் இழந்த அனைத்தையும் மீட்டு விடலாம். இதற்கு வயது ஒரு தடையல்ல. இழந்த அனைத்தையும் எதுவாக இருந்தாலும் மீட்டு விடலாம். இதோ இந்த புள்ளியில் இருந்து இருப்பதை வைத்து வாழ்க்கையை துவங்குவோம்.
வாழ்ந்து காட்ட உறுதி பூண்டு தெளிவான நம்பிக்கையுடன் நிதானமாக அடி எடுத்து வைக்க நாம் எண்ணியது நம் வசப்படும்.
இழந்த அனைத்தையும் மீட்டு விடலாம் தோல்வியை தடைக்கல்லாக நினைக்காமல் படிக்கல்லாக நினைத்தால்! செய்வோமா?