
நம்மிடம் யார் அன்பாக நடந்து கொள்கிறார்களோ அவர்களே நமக்குப் பேரழகாகத் தெரிவார்கள். அன்பு என்பது என்ன?. சுயநலம் இல்லாமல், பிரதிபலன் பாராமல் பிறர் மீது செலுத்தும் உண்மையான உணர்வுதான் அன்பு. அன்பை நான் செலுத்துகிறேன், பதிலுக்கு நீயும் செலுத்து என்றால் அது வியாபாரம். செலவழிப்பதுதான் அன்பு சேமிப்பது அல்ல.
நம் குழந்தைகள் மீது வைக்கும் அன்பை பிற குழந்தைகள் மீதும் செலுத்தினால் அது பேரன்பு. நீங்கள் அரசியல் வாதியாகும்போது இது நம் பணம் அல்ல. மக்கள் பணம் என்று நினைத்தால் ஊழல் செய்ய மாட்டீர்கள். நீங்கள் அரசு அதிகாரியாக இருந்தால் மக்களுக்காக சேவை செய்யவே இங்கு இருக்கிறோம் என்று நினைத்து கையூட்டு பெறாமல் வேலை செய்வீர்கள். நீங்கள் சினிமா இயக்குனராக இருந்தால் நமது குடும்பம் போன்றதுதான் அனைத்து குடும்பமும் என்று நினைத்து எல்லோரும் உட்கார்ந்து பார்க்கக் கூடிய அளவுக்கு விரசமும் வன்முறையும் இல்லாத சினிமா படைப்பீர்கள்.
நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், "நான் மட்டும் வாழ்ந்தால் போதாது. என்னை நம்பியிருக்கும் பணியாளர்களும் தன்னைப்போல் வாழவேண்டும் என்று நினைப்பீர்கள். இப்படி நீங்கள் நல்லபடியாக நினைக்கவும், நல்லபடியாக வாழ்வும் அன்பு இருந்தால் மட்டுமே முடியும். பிறரை மிதித்து பெறும் வெற்றியைவிட பிறரை மதித்து நேசித்துப் பெறும் வெற்றியே நிஜமானது. உங்கள் மனம் விரிவடையவும் உறுதிபெறவும் எல்லா உயிரினங்கள் மீது அன்பு வையுங்கள். வாழ்க்கையில் முன்னேற இலட்சியம் இருக்கிறது.
அதை அடைவதற்கு வேகமாக செல்வதற்கும் பதிலாக நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று சிலர் செயலைச் செய்யாமல் தள்ளி வைத்து விடுகிறார்கள். எல்லாம் சரியாக அமைந்தால்தான் எந்த ஒரு காரியத்திலும் இறங்குவோம் என்று காத்திருக்கக் கூடாது. மழை பெய்யும்போது வெளியே செல்ல வேண்டுமென்றால் தவிர்க்காமல் குடையை எடுத்துக் கிளம்பிச் செல்லவேண்டும்.
ஒரு வேலைக்கு பஸ்ஸில் செல்ல வேண்டுமென்றால் காலியாக பஸ் வரும்போது ஏறலாம் என்று நினைக்கக்கூடாது. சௌகர்யங்களை எதிர்பார்த்து வேலையை ஒத்திப் போடக்கூடாது. நீங்கள் ஒரு செயலை ஒத்திப் போடுகிறீர்கள் என்றால் உங்களிடம் சோம்பல் இருக்கிறது என அர்த்தம். ஒரு வேலையைச் செய்ய அதை ரசித்துச் செய்தால் சோம்பல் வராது. எந்த வேலையையும் ரசித்துச் செய்பவர்கள்தான் முன்னேறுவார்கள்.
ஒரு காரியத்தை முடிவு எடுக்க முடியவில்லை என்றால் அதைப்பற்றிய தெளிவான புரிதல் இல்லை என்று அர்த்தம். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து தோல்வி அடைந்தாலும் தப்பில்லை. ஏனென்றால் வாழ்க்கை முழுவதும் நமக்கு பரீட்சைதான். தகுதி உழைப்பு முயற்சி அக்கறை போன்றவற்றில் கவனம் செலுத்தினால் முன்னேற முடியும்.
ஒரு சிலர் நமக்குத்தான் எல்லாம் இருக்கிறதே இதற்கு மேல் என்ன தேவை என்ற எண்ணத்தோடு இருப்பார்கள். இது தெளிவான சிந்தனை அல்ல. அடுத்தடுத்து தனது சுயத்தை நிரூபித்தால் மட்டுமே இந்த உலகில் வாழமுடியும்.