
திறமையை எல்லோருக்கும் சமமாகத் திருவருள் நிறையவே கொட்டிக் குவித்து நம்முள் வைத்திருக்கிறது. நம்முள் குடியிருக்கும் திறமையை வெளிக் கொணர்வதற்கு ஆண்டவன் நம் கையிலேயே சாவிக்கொத்தை தந்திருக்கின்றான். சிலர் சாவிக்கொத்தில் உள்ள சாவியாலேயே பூட்டைத் திறந்து வெளிச்சத்திற்கு வருகின்றார்கள். பலர் பூட்டை உடைத்து வெளியேறி உருக்குலைந்து போகின்றார்கள்.
நம்மில் பல பேர் சட்ட வரைமுறைகள் என்பது பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் மட்டுமே சொந்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனது நிலை, செயல் இவைகளை திரும்பத் திரும்பச் சிந்தித்து விளைவு எதுவாக இருக்கும் என்பதை திடமாக உணர்ந்த பிறகு அது நன்மை பயக்குமென்றால் செய்து முடிப்பதற்கு தயங்க வேண்டியதில்லை.
இந்த முடிவை எடுப்பதற்கு நமது அறிவையும், சக்தியையும் ஒருமுகப்படுத்தி நமது எண்ணத்திற்கு வலிவூட்ட வேண்டும். எண்ணங்களை இப்படித்தான் இயக்கிக் காட்ட வேண்டுமென்ற சட்ட வரை முறைகளை தெரிந்து கொள்வதன் மூலமாக மகிழ்ச்சியாக வாழ முடியும். வெற்றிப்படிகள் நமக்குச் சொந்தமாகிவிடும்.
கழனியிலே எந்த விதை விதைக்கப்படுகின்றவோ அந்த விதையின் பலன்தான் கிடைக்கும்.
ஆனால் கழனி ஒன்று. விதைக்கப்படுகின்ற விதைகள் வெவ்வேறானவைகளாக இருந்தால், கழனியிலே குற்றம் காண முடியாது.மனம் ஒன்றுதான். எவ்வாறான எண்ணங்களை செயலாற்றுவதற்கு வெளிக் கொணர்கின்றோமோ அவ்வாறே இன்பமும் துன்பமும் நம்மை வந்து சேருகின்றன.
உலக மக்களின் நல்வாழ்வுக்காக துன்பத்தை இன்பமாக்கி வாழ்ந்தவர்களே மகாத்மாவாக மலர்ந்திருக்கின்றார்கள்.
ஆங்கிலேயன் ஆட்சிக் கொடுமையாலே சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், பர்மாவின் மாண்டலே சிறையில் இருந்தபோது சிறைக் கொடுமையால் கடுமையான காசநோயால் அவதிப்பட்டார். மருத்துவ வசதி அவருக்கு மறுக்கப்பட்டது.
இந்தத் துன்ப நிலை குறித்து தனது நண்பருக்கு போஸ் ஒரு கடிதம் எழுதினார்.சிறை வாழ்க்கையை வார்த்தைகளாலே விளக்கிட முடியாது. துன்பங்களை அனுபவிக்க, அனுபவிக்க; மெல்ல மெல்ல என் கஷ்டத்திலும் ஓர் இனிமையான சுகத்தை உணர்கின்றேன். 'தேச விடுதலை' என்ற லட்சியத்துக்கான எண்ணம் என்னுள் குடிபுகுந்து எனக்கு பெருமகிழ்ச்சியைக் கொடுக்கிறது" என்று கடிதம் முடிகிறது.
மன இயல் அறிஞர்கள் நான்சென், ஹில்லாரி, லிவிங்ஸ்டன், கொலம்பஸ் போன்றவர்கள் எதிர் கொண்ட துன்பங்கள் யாவையும் பொது நலன் கருதி - ஓர் இலக்கை எட்ட வேண்டும் என்ற எண்ணத்தால் இன்பமாகச் சுமந்தவர்கள்.
அறிவு - மனோபாவம் செயல் இதன் வழிதான் எந்த நிகழ்வுகளின் முடிவும் இருக்கும்.
எத்தகைய செயலையும் செய்யத் துவங்குவதற்கு முன்னர் நமது அறிவால், நம்மால் செய்யப்படுகின்ற செயலின் எதிர்த்தாக்கம் விளைவு- பயன் இவைகளை நன்கு பல முறை சிந்தித்து - சரியான எண்ணத்தை கருவுறச் செய்துகொள்ள வேண்டும்.
இத்தகைய செயல்களால் நாம் பெறப்போகின்ற வெற்றியையோ அல்லது இன்பத்தையோ, நாம் கற்பனை செய்து அதில் எங்கேயாவது "துன்பத்தின் நெருடல்" உள்ளதா என உணர்ந்து பார்த்திடும் திடமான உறுதியான மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
உணர்ச்சியை 'மனம்' என்ற பட்டிக்குள் எப்போதும் அடைத்தே வைத்திருக்கவேண்டும்.
அவசரப்பட்டு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளால் வெடித்து வந்த எண்ணங்களின் செயல்பாடுகளால் இமாலயத் தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன. "தெரியாமல் செய்துவிட்டேன், செய்தது தவறுதான், என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை" என்று பல பேர் சொல்லி சொல்லி வருந்துவதைப் பார்க்கின்றோம். இவர்கள் தெரிந்தே பள்ளத்தில் குதித்தவர்கள். பரிதாபத்துக் குரியவர்கள்.
ஆகவே, மனம் என்ற திருக்கோவிலை புனிதமாக பாதுகாத்திடுங்கள்.