அன்பே சிறந்த ஆயுதம்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com
Published on

ங்கள் குழந்தைகள் சரியாக படிக்கவில்லையா? நன்றாக அடியுங்கள். நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்க மறுக்கிறார்களா? அப்படியென்றால் இன்னும் நன்றாக அடியுங்கள். தவறான நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறார்களா? வெளுத்து வாங்குங்கள். நீங்கள் இப்படிச் செய்தால் மட்டுமே அவர்கள் நிச்சயம் திருந்துவார்கள். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள். அவர்களை அடிக்க நீங்கள் எடுக்க வேண்டிய ஆயுதம் பிரம்பு அல்ல. அன்பு.

கோபத்தில் என்ன செய்கிறோம் என்று புரியாமல் குழந்தைகளை கண்மூடித்தனமாக அடித்துவிடும் பெற்றோர்கள் பலர் உள்ளனர். இடையிடையே கடும் வார்த்தைகளை உபயோகித்து திட்டிக் கொண்டே அடிப்பவர்களும் உண்டு. இதனால் ஏதாவது நன்மை விளையுமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம். இதனால் பிள்ளைகளுக்கு பெற்றோர் மீது வெறுப்பும் பெற்றோர்களுக்கு நம் குழந்தைகளை நாமே அடித்துவிட்டோமே என்ற மனஉளைச்சலும் உருவாகும். இந்த சூழ்நிலையில் உங்கள் பிள்ளைகள் தங்கள் மீது யார் அன்பு பாராட்டினாலும் அவர்களுடன் பிரியமாக பழகத் தொடங்கிவிடுவார்கள்.

ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள் இயற்கையாகவே ஏராளமாக அன்பு எனும் உணர்ச்சி புதைந்து கிடக்கிறது. ஆனால் நம்மில் பலர் இதை அறியவில்லை. மனிதர்கள் கோபம், மகிழ்ச்சி, கவலை, இந்த மூன்று உணர்ச்சிகளை மட்டுமே அதிகமாக பிரதிபலிக்கிறார்கள். எவனொருவன் பிறரிடம் அன்பை அதிகமாக வெளிப்படுத்தி வாழ்கிறானோ அவனே நிரந்தரமான மகிழ்ச்சியை அடைவான். தினம் தினம் பூக்கள் பூத்துக் குலுங்கி காண்பவரை மகிழ்விப்பதைப் போல நம் மனதிலும் அடிக்கடி அன்பு பூத்துக் குலுங்கி நாமும் பிறரை மகிழ்விக்க வேண்டும். பிறரிடம் எவனொருவன் அன்பு காட்டி வாழ்கிறானோ அவன் மனது மயிலிறகைப் போல மென்மையானதாக மாறிவிடும்.

அன்பிற்கு ஒரு உருவம் கொடுத்துப் பார்க்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் உங்கள் தாயைப் பாருங்கள். உங்கள் தாய் இல்லையென்றால் அவளுடைய புகைப்படத்தைப் பாருங்கள். எந்த சூழ்லையிலும் ஒரு தாய் தன் குழந்தைகளை வெறுக்கமாட்டாள். ஒரு தாயை அவள் உயிக்குயிராய் வளர்த்த மகன் கடும் வார்த்தைகளால் திட்டினாலும் பிறர் முன்னிலையில் அவமானப்படுத்தினாலும் அவளை ஒதுக்கி நிராகரித்தாலும் அந்த தாய் தன் மகனை ஒரு போதும் வெறுக்கமாட்டாள். நிராகரிக்கமாட்டாள். மாறாக தன் மகன் எந்த குறையும் இன்றி சிறப்பாக வாழ வேண்டுமென்று வாழ்த்துவாள். கடவுளிடம் மனமுருகி பிரார்த்தனை செய்வாள். தன் மகனைப் போல தன்னிடம் அன்பு காட்டும் ஒரு சிறந்த மகன் உலகத்தில் இல்லை.

இதையும் படியுங்கள்:
லேடீஸ் விரும்பும் லேட்டஸ்ட் ஃபாஷன் – லெக்கிங்ஸ் இந்த 10 வகைகள் மிகப் பிரபலம்!
Motivation image

எதற்கெடுத்தாலும் அடிக்கும் பெற்றோர்கள் தற்போது பெருகிவிட்டார்கள். தங்களின் விருப்பத்திற்கேற்றபடியே தம் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தாம் எதிர்பார்த்ததை குழந்தைகள் பூர்த்தி செய்யாத போது கோபம் வந்துவிடுகிறது. எடுத்ததற்கெல்லாம் திட்டுவதாலும் அடிப்பதாலும் குழந்தைகள் நாளடைவில் தங்கள் பெற்றோர்களை வெறுக்கத் தொடங்கிவிடுகிறார்கள். சிறுவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாது. நமக்கே வாழ்க்கை என்றால் என்ன என்பது சரியாகப் புரியாத போது அவர்களுக்குத் தெரிய நியாயமில்லை தானே. விளையாடுவது. விரும்பியதைச் சாப்பிடுவது> தூங்குவது. இதுவே சிறுவர்கள் விரும்பும் வாழ்க்கை.

அன்னை சாரதாதேவியார் அம்ஜத் எனும் கொள்ளைக்காரனையே தனது அன்பான வார்த்தைகளால் திருத்தியிருக்கிறார். ஓரு கொள்ளைக்காரனே அன்பான வார்த்தைகளைக் கேட்டு திருந்துகிறான் என்றால் அறியாமல் பிழை செய்யும் சிறுவன் திருந்தமாட்டானா? நிச்சயம் திருந்துவான்.

வில்லாகிய நீங்கள் அன்பு எனும் அம்பினை எடுத்து உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் உங்கள் உறவினர்களையும் குறிவைத்து தினம் தினம் செலுத்துங்கள். மகிழ்ச்சியும் பலனும் உங்கள் காலடியில் வந்து விழும். உங்கள் குழந்தைகளை அன்பினால் அடியுங்கள். அவர்கள் நிச்சயம் திருந்துவார்கள். நிரந்தரமாய் திருந்துவார்கள். உங்கள் உறவினர்களிடம் அன்பாய் பேசுங்கள். எப்போதும் எந்த சூழ்நிலையிலும் எல்லோரிடமும் முடிந்த வரையிலும் அன்பாய் பேசப் பழகுங்கள். முடிந்த வரை பிறரிடம் அன்பு பாராட்டி மகிழுங்கள். இதன் மூலம் நல்ல நல்ல மனிதர்களையும் உறவினர்களையும் பரிசாகப் பெறுங்கள். அன்பினை விதையுங்கள். அன்பே நிம்மதி. அன்பே கடவுள். அன்பே சிறந்த ஆயுதம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com