
அறிவும், சாமர்த்தியமும் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு வரைமுறையோ வடிவமோ கிடையாது. ஆனால் அந்தப் புத்தி சாதுர்யத்தைக் கவனமாகத் தெரிந்துகொண்டு ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப் பழகினால், எந்தவொரு இக்கட்டையும் எளிதில் சமாளித்து வெற்றிபெற முடியும்.
எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வுகாண முயலும்போது அதில் உங்கள் வலிமையைக் காண்பிக்க முயலாதீர்கள். அப்படிச் செய்தால் அந்தப் பிரச்னை இன்னும் தீவிரமடையத் தொடங்கும். எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்திவிடக் கூடும். அதைவிட உங்கள் அறிவைப் பயன்படுத்தி, அதன்மூலம் அதனைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். வெற்றி கிடைக்கும்.
ஒருநாள் வாடைக்காற்றுக்கும், சூரியனுக்கும் இடையே 'யார் பலசாலி' என்பது குறித்து கடும்போட்டி ஏற்பட்டது. தன்னால் எந்தவொரு மனிதனையும் செயலிழக்கச் செய்துவிட முடியும் என்று கர்வத்தோடு கூறிற்று வாடைக்காற்று.
ஆனால் சூரியனோ, 'உன்னால் அப்படிச் செய்ய முடியாது. என்னால் மட்டும்தான் முடியும். எனக்கு மட்டும்தான் அத்தகைய சக்தி உள்ளது என்று உறுதியோடு கூறியது.
இப்படி இவ்விரண்டும் போட்டி போட்டு வாக்குவாதம் செய்தபிறகு, கடைசியில் இதனை ஒரு மனிதன் மீது காண்பித்து தங்களது வெற்றி, தோல்வியை நிர்ணயித்துக்கொண்டு விடுவது என்று முடிவெடுத்தன.
அடர்ந்த காடு ஒன்றில் ஒருவன் நடந்து சென்று கொண்டிருந்தான். அவனது மேலாடைகளைக் கழற்றி வீசி ஏறியும் சக்தி யாரிடம் இருக்கிறதோ அவரே பலசாலி என்று அவை இரண்டும் தீர்மானித்தன.
முதலில் வாடைக்காற்று களமிறங்கியது. தனது முழுசக்தியையும் பயன்படுத்தி மிகப்பலமாக காற்றினை வீசச் செய்தது. காற்றின் வேகம் தாங்க முடியாமல் அந்த மனிதனின் உடைகள் பறக்கத் தொடங்கின. ஆனால் அவனோ, தனது பலம் முழுவதையும் திரட்டி, தனது ஆடைகளைப் பறக்க விடாமல் தடுத்துக்கொண்டான்.
இதனைப் பார்த்த காற்று, இன்னும் அதிக பலத்துடன் வீசியது. அதற்கு ஈடுகொடுக்கிற விதத்தில் அம்மனிதனும் இன்னும் பலத்தைப் பிரயோகப்படுத்தி தனது ஆடைகள் காற்றில் பறந்துவிடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அப்படியே கடுங்குளிரிலிருந்தும் அவன் தப்பித்துக்கொண்டான்.
இதனால் வாடைக்காற்று தோல்வியைத் தழுவியது.
அடுத்து சூரியனின் முறை. மெல்ல மிதமான வெப்பத்தை அந்த மனிதனின் மீது அதுவீசத்தொடங்கியது. அவனும் குளிருக்கு இதமாக இருப்பதாக எண்ணி சந்தோஷமாக நடந்து கொண்டே இருந்தான். சற்று நேரத்தில் தனது வெப்ப சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் அம்மனிதனுக்கு வியர்வை வழியத் தொடங்கியது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவனுக்கு ஒருகட்டத்தில் முடியவே முடியாது என்ற நிலை ஏற்பட்டது. சூரியனின் வெப்பம் தாங்க முடியாமல் தனது மேலாடையைக் கழற்றிவிட்டு நடக்கத் தொடங்கினான்.
ஆக, போட்டியில் சூரியன் வென்றுவிட்டது.
அதாவது பலம் என்பது தனது வலிமையை சாதாரண மனிதனிடம் காட்டுவதல்ல. அப்படிக் காட்டினால் அதன் விளைவு எதிர்மறையாகவே மாறிவிடும். தனது சாமர்த்தியத்தால், அறிவுறுத்தலால் அடுத்தவனை உன்வழிக்கு, அதாவது நல்வழிக்கு நிர்ப்பந்தப்படுத்தி, அவனை ஏற்றுக்கொள்ளச் செய்வதாக இருக்க வேண்டும்.
சுருக்கமாகச் சொல்லப்போனால், வாடைக்காற்று போல பலப்பிரயோகம் செய்யாமல், சூரியனைப்போல அவனை நிர்ப்பந்தப்படுத்த வேண்டும். இதுதான் உங்கள் நோக்கத்தை வெற்றிப் பாதைக்கு இட்டுச்செல்லும்.