
அறிவு இரண்டு வகைப்படும். ஒன்று உயிரினங்களுக்கு இயற்கையாக இருக்கும் அறிவு. இன்னொன்று அனுபவத்தின் மூலமாகப் பெறப்படும் அறிவு.
மனிதனும் உயிரினங்களில் ஒன்று என்பது நீங்கள் அறிந்ததே. குழந்தை கொஞ்சம் பெரிதானதும் நடக்க ஆரம்பிக்கிறது. அப்படி நடக்கத் தொடங்கும்போது, அது நிலை தடுமாறி பல தடவை கீழே விழும். பிறகுதான் கீழே விழாமல் நடக்கப் பழகிவிடுகிறது. இதுதான் பட்டறிவு. தானே பட்டு அதாவது அனுபவப்பட்டுத் தெரிந்து கொள்ளும் அறிவு.
ஒவ்வொரு அனுபவத்தையும், தானே அனுபவித்துத் தெரிந்து கொள்வது என்பது ஒரு முட்டாளின் செயல். மற்றவர்களின் அனுபவத்திலுருந்தும் பாடம் கற்றுக்கொள்பவனே அறிவாளி. இந்த ஞானம் இயற்கையாகவே இருக்கவேண்டும்.
உலகப்புகழ் பெற்ற அணு விஞ்ஞானி ஐன்ஸ்டைன் கூறினார், "பட்டறிவு படிப்பறிவை விட வலிமையானது" (Ideas are more powerful than knowledge) என்று...
படிப்பறிவு, பட்டறிவு இரண்டிலிருந்தும் மனிதன் பாடம் கற்றுக் கொண்டாலும், பட்டறிவு என்ற அனுபவம்தான், மனித மனதில் ஆழமாகப் பதிந்து வாழ்வையே மாற்றும் தன்மையை பெற்றுள்ளது. அனுபவங்கள்தான், நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தும். வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு தவறுகளில் இருந்தும் நாம் தினசரி பாடம் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம்.
வாழ்க்கையில் பல துறைகளில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
நாமே அத்தனை அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள நினைத்தால், ‘கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம்!’ என்று சொல்வார்களே அது போல்தான்! ஒருபோதும் அது சாத்தியப்படாது! அதற்கு பல நூறு வருடங்கள் ஆகும். அறிவாளிகள் அனைவரும் அவர்களைச் சுற்றி இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் மூலம் கிடைக்கும் பாடங்களை எல்லாம் தங்களுக்கு கிடைத்த பாடங்களாக மாற்றிக் கொள்வார்கள்! அதைத்தான் நாமும் கடைப் பிடிக்கவேண்டும்.
மனித வாழ்வுக்கு பட்டறிவும், படிப்பறிவும் மிக உறுதுணையாக இருக்கின்றன. படிப்பறிவு என்பது கல்வி கற்பதின் மூலமாகவும், பட்டறிவு என்பது மனித அனுபவம் மூலமாகவும் நமக்குக் கிடைக்கின்றன, நீங்கள் ‘நீங்களாகவே’ எப்பொழுதும் இருங்கள்! போலியாக காட்டிக்கொள்ள ஒருபோதும் முயற்சி செய்யாதீர்கள்.
அப்பொழுதுதான் உங்கள் அனுபவம் தரும் பாடங்களின் முழுப் பயனும் உங்களுக்கு கிடைக்கும். எதுவாக இருந்தாலும், உங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் மூலம் நீங்கள் ஒரு உறுதியான நிலைப்பாடு எடுக்க பழகிக் கொள்ளுங்கள். புகழ் பெற்ற தலைவர்கள் எல்லாம் அப்படிப்பட்ட உறுதியான நிலைப்பாட்டை எடுத்தவர்கள்தான் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
நாம் வாழ்க்கையில் தேடிக்கொள்ளும் அனுபவ அறிவே நமக்கு நேர்மை, திறமை, மனோபலம் போன்ற பண்புகள் கொண்ட மனிதனாக நம்மை மாற்றிவிடும். அனுபவங்களைத் தேடுங்கள்...! உலகை வெல்லுங்கள்.