அவர் மிகவும் எளியவர். 'அவரைப் பார்த்தால் பணக்காரர் மாதிரியே தெரியாது, அவ்வளவு சிம்பிள் ஆக இருப்பார். இந்த மாதிரி வாக்கியங்களை நீங்கள் அடிக்கடி கேட்கலாம் எளிமையைப் பற்றிய தோற்றத்திற்கும், எளிமை என்பதற்கான இலக்கணத்திற்கும் நாம் கொடுத்திருக்கும் வடிவம் தவறானவையாகவே பெரும்பாலும் இருக்கின்றன.
ஆடம்பரத்திற்கு எதிர்ச்சொல் எளிமை என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆணவம் என்பதற்கான (உண்மையான) எதிர்ச்சொல்தான் எளிமை.
கதராடை அணிந்துகொண்டும் எளிமையற்று இருக்கலாம். பட்டாடை அணிந்துகொண்டும் எளிமையுடன் திகழலாம். எளிமை என்பது உடல் சம்பந்தப்பட்ட தன்மையல்ல, அது மனம் சம்பந்தப்பட்ட மலர்ச்சி.
உண்மையான எளிமை எதையும் தேர்ந்தெடுக்காத தன்மையை உடையது. அது மலிவானவற்றைக் கூட தேர்ந்தெடுக்காது. ஏனென்றால் தேர்ந்தெடுக்கும்போதே நாம் இறுகிப்போகிறோம்.
நதிபோல ஓடிக்கொண்டிருக்கும் தன்மையில்தான் எளிமை அடங்கியிருக்கிறது. மாறாக பனிப்பாறையைப் போல உறைந்துபோவதில் ஒருபோதும் அது இருக்கமுடியாது.
சிலரை எளிமையாக வைத்திருப்பதற்குக்கூட நாம் பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
உதாரணத்திற்கு - ஒருவர் நம் வீட்டிற்கு வருகிறார். இரவு நேரம் - தங்கவேண்டிய சூழல் நம் வீட்டில் மெத்தைகள் மட்டுமே இருக்கின்றன. அவரோ "நான் பாயில்தான் படுப்பேன். மெத்தை என்னைப் பொறுத்தவரை ஆடம்பரம்" என்கிறார்.
அவருக்காக ஓடிப்போய் பாய் வாங்கிவருகிறோம். எளிய வாழ்க்கையைத் தொடரும் மகிழ்ச்சியில் அவர் தூங்கிப் போகிறார். இதில் எது எளிமை?
எது ஆடம்பரம்?
ஒருவர் நம் வீட்டிற்கு திடீரென்று வருகிறார். இட்லி தயாராக இருக்கிறது. "நான் கூழ் மட்டும்தான் குடிப்பேன் என்கிறார். அவருக்காகச் சிரமப்பட்டு கேழ்வரகு மாவு வாங்கி வந்து கூழ் தயாரிக்கிறோம். இது எளிமையா?
எளிமை என்பது இருப்பதில் தன்னை தளர்த்தி கொள்வது. மற்றவர்களுக்குச் சிரமம் கொடுக்காமல் தன்னுடைய எளிமையை நிலைநாட்டிக்கொள்வது. இறுக்கமில்லாத தன்மையைக் கையகப்படுத்துவது.
அது இயல்பாக நிகழவேண்டும். உள்ளுக்குள் இருந்து ஆயிரம் பூக்கள் பூத்ததைப்போல இனிய மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் அது ஆடம்பரமாக இல்லாமல் அவசியமானதாகத் தோன்றும்.
இங்கு - எளிமையே ஆடம்பரமாகிவிடுகிறது. தகுதியின்மையே தகுதியாகிவிடுகிறது.
எளிமை என்பது புனிதத்தன்மையாக ஆக்கப்பட வேண்டியதில்லை. அது குணநலன் (virtue) என்று ஆராதிக்கப்படவேண்டிய அவசியமும் இல்லை.
உண்மையான எளியவர்கள்தான் எளிமையாக இருப்பது கூடத் தெரியாமல் எளிமையாக இருக்கிறார்கள். ஏனென்றால் எளிமையை அவர்கள் தேர்ந்தெடுக்க வில்லை. யாரும் பாராட்ட வேண்டும் என்றோ, புகழவேண்டும் என்றோ அவர்கள் அப்படி ஆகவில்லை.
அப்படி இருப்பதுதான் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. கனமான உடைகளைக் களைந்துவிட்டு தூய பருத்தி உடையில் தூங்குவதுபோல எளிமையில் இருக்கும் வசதி அவர்களுக்குப் பிரியமானதாக உள்ளது.
சந்தன மரத்திற்கு யாரும் நறுமண திரவியம் தடவவேண்டும் என்பதில்லையே.