நல்ல வேலை, கை நிறைய சம்பளம், அழகான குடும்பம், ஆனாலும் ஏனோ எதிலும் பிடிப்பு இல்லாமல் வாழ்க்கை ஏனோ தானோவென்று இருக்கிறதா? அதற்குக் காரணம் ஒரே மாதிரியான சலிப்பூட்டும் அன்றாட வேலைகள்தான். இந்த மனநிலை மாற இந்த ஏழு உத்திகளும் உதவும்.
1. செய்ய விரும்பிய எதையாவது செய்யுங்கள்:
நம் அனைவருக்கும் கனவுகள் மற்றும் ஆசைகள் உண்டு, ஆனால் சில நேரங்களில் அன்றாட வேலைப்பளுவில் அதை மறந்து விடுவோம். அவற்றை தொடர நேரம் ஒதுக்க மாட்டோம். நீங்கள் எப்போதும் செய்ய விரும்பிய விஷயங்களை பட்டியலிடுங்கள், பிறகு ஒன்றைத் தேர்ந்தெடுத்து இன்றே செய்யுங்கள். நீங்கள் அதை எவ்வளவு அனுபவிக்கிறீர்கள் என்று ஆச்சரியப்படுவீர்கள். உதாரணமாக புத்தகம் படிப்பது, கிடார் வாசிப்பது நடனம் ஆடுவது போன்றவை.
2. வேறு யாருக்காவது உதவுங்கள்:
உங்களைப் பற்றி நன்றாக உணர சிறந்த வழிகளில் ஒன்று மற்றவர்களுக்கு உதவுவது. இன்னொருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது உங்களைப் பற்றி நீங்கள் நன்றாக உணர வைக்கும். அந்த உதவி பணமாகவோ அல்லது உடல் உழைப்பகாவோ அல்லது உங்களது நேரமகாவோ இருக்கலாம்.
3. வெளியே செல்லுதல்:
மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், படைப்பாற்றலை அதிகரிக்கவும் இயற்கையில் நேரத்தை செலவிடுவது சிறந்தது. காலாற பார்க் அல்லது மொட்டை மாடியில் கூட வானில் பறக்கும் பறவைகளைப் பார்த்துக்கொண்டே, தென்றல் காற்றை அனுபவித்துக்கொண்டே நிதானமாக நடைப்பயிற்சி செய்யுங்கள். அந்த நேரம் மனதிற்கு எத்தனை இதமாக இருக்கிறது என்று உணரலாம்.
4. புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள்:
கற்றுக்கொள்ள எப்போதும் ஏதாவது புதிதாக இருக்கிறது. இன்று சிறிது நேரம் ஒதுக்கி புத்தகம் படிக்க, ஆவணப்படம் பார்க்க, அல்லது வகுப்பு எடுக்க. புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது மனதை கூர்மையாக வைத்துக் கொள்ள உதவும்.
5. எதையாவது உருவாக்குங்கள்:
ஓவியமாக இருந்தாலும், இசையாக இருந்தாலும், கவிதையாக இருந்தாலும், உங்களை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த இன்றே சிறிது நேரம் ஒதுக்குங்கள். புதிய டிசைனில் கோலம் போடுதல், தோட்டத்தில் ஒரு புதிய செடியை நடுதல் போன்ற எதையாவது உருவாக்குவது மேலும் நிறைவாக உணரவும் உதவும்.
6. அன்பானவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்:
அன்பானவர்களுடன் நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம். எப்போதும் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களையும், பங்குகளில் எத்தனை சதவீதம் லாபம் வந்துள்ளது என்று கணக்குப் போட்டுக் கொண்டிராமல் குடும்பத்தினர், உறவுகள் நட்புகள் என்று நேரம் செலவிட வேண்டும். மகிழ்ச்சியும் ஆரவாரமாகவும் நேரம் போகும். அவர்கள் உங்களுக்கு எவ்வளவு தேவை என்று நீங்கள் வியந்து போவீர்கள்.
7. புதிதாக ஏதாவது செய்யுங்கள்:
உங்கள் கம்போர்ட் ஜோனை விட்டு சிறிது நேரம் வெளியே வாருங்கள். வீட்டிற்கு வழக்கமாக செல்லும் வழி அருகிலும், நல்ல சாலைகளை உடையதாகவும் இருக்கலாம். வாரத்தில் ஒரு முறையாவது பாதுகாப்பான மாற்றுப் பாதையில் செல்லவும். அங்கே புதிய மனிதர்கள் புதிய காட்சிகளை காணலாம். அவை மனதிற்கு உற்சாகத்தையும் ஆவலையும் உருவாக்கும். ஏதோ ஒரு அட்வென்ச்சர் செய்தது போல மனம் குதூகலம் அடையும்.