
மனக் கவலைகள் நீங்கி மகிழ்ச்சிபெற நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொண்டு சில பாசிட்டிவ் வாசகங்களை உருவாக்கிக்கொண்டு அதை சொல்லிப் பார்க்கலாம். பிடித்த சிறந்த மேற்கோள்களை ஒரு நோட்புக்கில் எழுதி வைத்துக்கொண்டு அடிக்கடி சொல்லிப் பார்க்கலாம்.
'என்னால் முடியும்', 'நடப்பதெல்லாம் நன்மைக்கே' 'வாழ்க வளமுடன்' போன்ற வாசகங்கள் நம் மனதை புத்துணர்ச்சி பெற உதவும். மனதுக்கு சக்தி தரும், உற்சாகப்படுத்தும் இம்மாதிரி வாசகங்களை அடிக்கடி மனதிற்குள் சொல்லிப் பார்க்க மனக்கவலைகள் நீங்கிவிடும்.
மனதுக்கு இனிமை சேர்க்கும் பாடல்களையும், இசையையும் கேட்டு மகிழலாம். இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. மனதுக்குப் பிடித்த பாடல்களை ரசித்து கேட்பது மனக்கவலையை குறைப்பதுடன் நம்முடைய ரத்த அழுத்தத்தை குறைத்து, இதயத்துடிப்பையும் சீராக்கும். பதற்றம், கவலைகளைப் போக்கி மனதை லேசாக்க உதவும்.
மனம் லேசாக நகைச்சுவை காட்சிகளை ரசித்து பார்ப்பதும், அவற்றை நமக்கு பிடித்தவர்களுடன் பகிர்ந்து கொள்வதும், துன்பம் வரும் வேளையில் அதனை பெரிதாக எண்ணாமல் இதுவும் கடந்துபோகும் என எண்ணி கடக்க முயற்சிப்பதும், நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் நல்ல பலனைத்தரும். அத்துடன் வாய் விட்டு சிரிக்க மனம் லேசாகும். புன்னகை என்பது மிகச்சிறந்த மருந்து. இவை கார்ட்டிசால் சுரப்பை குறைத்து மூளையை தூண்டுவதற்கு உதவும். இதன் மூலம் எண்டார்பின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகும்.
மனக்கவலை அதிகமானால் பதட்டமும், பரபரப்பும் ஏற்படும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். இம்மாதிரியான சமயங்களில் மூச்சை இழுத்துப் பிடித்து நிதானமாக வெளியேற்ற வேண்டும். நம் கவனம் முழுவதும் மூச்சை இழுப்பதிலும் வெளியிடுவதிலும் குவிக்க மனமும் உடலும் லேசாகி மனஇறுக்கம் போய் மனம் லேசாகும். மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கஷ்டம் வரும். அதிலிருந்து வெளிவருவதற்கு நம்மை அழுத்தும் நம்முடைய கவலைகளையும், துன்பங்களையும் நம்பகமான மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள தானாகவே மனபாரம் குறைந்துவிடும்.
அப்படி செய்யாமல் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்தால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.
மனக்கவலைக்கான காரணத்தை தெரிந்து கொண்டு அதை சரி செய்ய முற்பட வேண்டும். அதிலிருந்து மனதை திசை திருப்பி நமக்கு பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பது, தன்னம்பிக்கை தரும் புத்தகங்களை படிப்பது, தியானம் செய்வது, காலாற சிறிது தூரம் நடப்பது, முடிந்தால் ஓரிரு நாட்கள் பயணம் கூட மேற்கொள்ளலாம்.
உணவு முறையில் எப்படி அளவாக உண்கிறோமோ, அதிக எடை உள்ள பொருட்களை நம்மால் எவ்வளவு சுமக்க முடியுமோ அந்த அளவே சுமக்கிறோமோ அதுபோல்தான் நம் மனதில் தோன்றும் எண்ணங்களையும் சுமக்கவேண்டும். தேவையற்ற, எண்ணங்களை மனதிலிருந்து அகற்றி விடுவதே மனக்கவலைகள் குறைய சிறந்த வழியாகும்.
மனக்கவலை நீங்க அம்மாதிரி சமயங்களில் எந்தவொரு பிரச்னைக்கும் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருப்பதும், அப்படி அவசர முடிவு ஏதேனும் எடுத்தால் அவை நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும் என்பதையும் உணரவேண்டும்.
இம்மாதிரி சமயங்களில் ஒரு பேப்பரை கையில் எடுத்து மனக்கவலைக்கான காரணத்தை எழுதி நிதானமாக படிக்கவும். ப்பூ இவ்வளவுதானா! இதற்காகத்தான் இவ்வளவு கவலைப்பட்டோமா என்று எண்ண ஆரம்பித்து விடுவோம். இது சிறந்த பலன் அளிக்கும் மனோதத்துவ முறையாகும். படித்தவுடன் மறக்காமல் எழுதிய பேப்பரை கிழித்து விடுங்கள். இப்பொழுது மனக்கவலை முழுவதுமாக நீங்கி எதையும் சமாளிக்கும் மனத்திடமும், பக்குவம் வந்துவிடும்.