

பொதுவாக பேசும் போது ஒருவர் ஆழ்ந்து சிந்தித்து அமைதியாக நிதானமாக பேசினால் அல்லது நாம் பேசுவதை அவர்கள் காது கொடுத்து குறுக்கே பேசாமல் கேட்டுக் கொண்டே இருந்து கடைசியில் தன் கருத்தை கூறினார் என்றால் அதைத்தான் நல்ல பக்குவம் அடைந்த மனது அல்லது முதிர்ச்சி அடைந்த மனது என்று கூறுகிறோம்.
நம் வீட்டில் தினசரி சமைக்கும் சமையல்தான் என்றாலும், நம் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகிறார்கள் என்றாலோ அல்லது நாம் விருந்தினராக அங்கு செல்ல போகிறோம் என்றாலோ, ஓரிடத்தில் பணிபுரிகிறோம் என்றாலும் கூட அந்தந்த இடத்திற்குத் தகுந்த மாதிரியான உணவை மேற்கொள்வது தான் நம் மீது மற்றவர்களுக்கு சிறந்த மதிப்பை ஏற்படுத்தித் தரும்.
அது போல் தான் உடை விஷயமும். நாம் தோற்றத்திற்கு ஏற்ப, பண்டிகைகளுக்கு ஏற்ப, பயணத்திற்கு ஏற்ப, அலுவல் மற்றும் பார்ட்டி ஃபங்ஷன் போன்றவற்றிற்கு ஏற்ப உடை அணிவது நல்மதிப்பைப் பெற்றுத் தரும். பக்குவப்பட்ட மனநிலையை எடுத்துக்காட்டும்.
குறிப்பாக தேவையற்ற வாக்குவாதங்களையும், எதிர்த்துப் பேசுவதையும் புறந்தள்ளி சில இடையூறான நேரங்களில் மௌனமாக அந்த கஷ்டமான சூழலை கடந்து போய்விட்டால் அது நம் மீது மதிப்பைக் கூட்டும். அருமையான மன முதிர்ச்சி என்பது இதுதான்.
அடுத்தவர்களின் தவறுகளை அடிக்கடி சுட்டிக்காட்டாமல் அர்த்தமுள்ள விஷயங்களைப் பற்றி பாசிட்டிவாகவும், தெளிவாகவும் பேசுபவர்களை அனைவரும் விரும்புவார்கள். அது நல்ல மனமுதிர்ச்சியை எடுத்து இயம்பும்.
தெரியாததை இது எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லித் தாருங்களேன் என்று எந்த ஈகோவும் பார்க்காமல் ஒப்புக்கொள்ள தெரிந்தவர்களை, இதற்காக தங்கள் நேரத்தை வீணடிக்கும் மனிதர்களிடம் இருந்து சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொள்ள தெரிந்தவர்களை அனைவரும் ஆட்கொள்வார்கள்.
வயதான முதியவர்களோ, பால்ய நண்பர்களோ போன் செய்யும்பொழுது அவர்களை மதித்து அவர்களிடம் அன்புடன் நலம் விசாரித்து அக்கறையோடு பேசும் பொழுது நம் மனப்பக்குவம் வெளிப்படும்.
நம் கருத்துக்கு மாற்றுக் கருத்தை யாராவது கூறினால் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தான் அனைத்திலும் மேலானது. அவர்கள் நம் தோற்றத்தைப் பற்றி கிண்டல் அடிக்கலாம். நம் திறமையைப் பற்றி குறைத்து மதிப்பிடலாம். அப்பொழுதும் அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று பெருந்தன்மையுடன் இது போன்ற விஷயங்களுக்காக தங்களை வருத்திக் கொள்ள மாட்டார்கள். மாறாக திருத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். அதுதான் முதிர்ந்த மன நிலையின் அடையாளம்.