

படித்து முடித்து வேலைக்கு சென்றுவிட்ட உங்கள் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடையே உணர்வுபூர்வமான இடைவெளி தோன்ற காரணமாயிருப்பது பெற்றோராகிய நீங்கள் பின்பற்றும் ஒன்பது பழக்கங்களேயாகும். அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. தகவலுக்கு தாமதமாக பதிலளித்தல்: பிள்ளைகளிடமிருந்து போன் அழைப்போ அல்லது குருஞ்செய்தியோ வரும்போது நீங்கள் உடனடியாக எதிர்வினையாற்றாமலிருப்பது. நீங்கள் பிசியாக வேறு ஏதாவது வேலையில் இருந்தால், போனில், ‘ஐயாம் பிசி, பிறகு அழைக்கிறேன்’ என்று ஒரு பதிலை நாலு வார்த்தையில் அனுப்பி விடலாம். இது இருவருக்குமிடையே பேச்சு குறைந்து தொடர்பில்லாமல் போவதைத் தடுக்கும்.
2. ஒவ்வொரு முறை பேசும்போதும் புத்திமதி கூறுவது: பிள்ளைகள் அவர்களின் பிரச்னை பற்றி பேசும்போது, நீங்கள் நல்ல எண்ணத்தோடு ஏதாவது அறிவுரை கூறினாலும், அது உரையாடலின் முடிவில் அவர்களை குறை கூறுவதாகவும், திட்டமிட்டு எச்சரிப்பதாகவுமே எடுத்துக்கொள்ளப்படும். அதன் பின் அவர்கள் உங்களிடம் எதையுமே பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். பிரச்னையை முழுவதுமாகக் கேட்டுவிட்டு, இறுதியில், ‘இதற்கா இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறாய். விடு, பார்த்துக்கொள்ளலாம்’ என்று கூறி, ஒரு ஆலோசனையை சொல்லி விலகிக்கொள்ளலாம். இது அவர்களை பாதுகாப்பாக உணரச் செய்யும்.
3. போனில் பேசும்போது குறுக்கீடு: பிள்ளைகளுடன் உரையாடிக்கொண்டிருக்கையில் இடையிடையே வீட்டில் வேலை செய்பவருடனோ அல்லது வேறு எவருடனாவது பேசுவது அவர்களுக்கு வெறுப்பை உண்டுபண்ணும். கவனச் சிதறலோடு நாற்பது நிமிடம் பேசுவதை விட முழு ஈடுபாட்டுடன் பத்து நிமிடம் பேசுவது சாலச் சிறந்தது.
4. பிள்ளைகள் மீது குறை கூறுதல்: ‘நான்தான் எப்பவும் உன்ன கூப்பிட்டுப் பேசறேன். நீ கூப்பிட மாட்டியா?’ என்று கேட்பதை விட, ‘ஐ மிஸ் யூ டா, ஃபிரீயா இருக்கும்போது போன் பண்ணு’ என்று கோபப்படாமல் மென்மையான குரலில் கூறினால், அது அவர்கள் தவறை உணர உதவும். பணம் பிரச்னை என்றால் அவர்களிடம் நிலைமையை விளக்கி உதவி கோரலாம். அவர்கள் செய்யும் சிறு உதவிக்கும் நன்றி கூறுவது நெருக்கத்தை உண்டுபண்ணும்.
5. பழைய சம்பவங்களை நினைவுபடுத்துதல்: பிள்ளைகள் சிறு வயதில் செய்த கோமாளித்தனமான செயல்களை கூறி சிரிப்பது அவர்களுக்கு தேள் கொட்டியது போன்ற வலி கொடுக்கும். தற்போது அவர்கள் வகிக்கும் உயர் பதவி, பெறும் மரியாதை, மதிப்பு போன்றவற்றை மட்டும் பேசுவது இரு தரப்பினருக்குமிடையே இடைவெளி உண்டாகாமல் பாதுகாக்க உதவும்.
6. ஒப்பீடு செய்தல்: ‘என் நண்பனின் பிள்ளைகள் அடிக்கடி வந்து அவனைப் பார்த்துச் செல்கின்றனர்’ என்று உங்கள் பிள்ளையிடம் கூறுவது தவறு. ஒவ்வொருவரின் வேலைப்பளு, சோஷியல் ஆக்டிவிட்டி, மனோநிலை போன்றவை நிச்சயம் வேறுபடும். எனவே, ஒப்பீடு செய்வதை விட்டுவிட்டு உங்கள் தேவை என்னவோ அதை மட்டும் கேட்டுப் பெற முயலுங்கள்.
7. எல்லைகளைத் தாண்டாமல் ஸ்பேஸ் அளித்தல்: வளர்ந்துவிட்ட பிள்ளைகள் தங்களுக்கான ஸ்பேஸ் மற்றும் எல்லைகளை வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அவர்களை இப்பவும் டீனேஜ் பசங்களாக நினைக்காமல், அவர்களுக்கான தனிப்பட்ட ஸ்பேஸ் கொடுத்து, அவர்களின் நிதி நிலைமை, ஆரோக்கியம், நட்பு வட்டம், எதிர்கால திட்டங்கள் போன்றவற்றில் குறுக்கிடாமல் இருப்பது நன்மை தரும்.
8. பிள்ளையின் துணையை துன்பத்திற்குள்ளாக்குவது: உங்கள் பிள்ளை மணமானவராயிருப்பின், உங்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலின் போது, அவரின் துணையை நடுவில் இழுப்பது விவேகமாகாது. அவர்கள் இருவருக்குமே அது மன அழுத்தம் தரும் செயலாக முடியும். உங்களுக்கும் உங்க பிள்ளையின் பார்ட்னருக்குமிடையே, உணவு, பயணம், விளையாட்டு, சினிமா போன்ற விஷயங்களில் ஒத்த ஈடுபாடு இருக்குமானால், அந்த இணைப்பை அதன் போக்கில் இயற்கையாக வளர விடுங்கள்.
9. உணர்வுபூர்வமான விஷயங்களைப் பேச அதிக நாட்கள் காத்திருப்பது: சில உணர்ச்சிகரமான விஷயங்களை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ள, சரியான சூழலை எதிர்நோக்கி நாட்களை விரயமாக்குதல், இருவருக்குமிடையே இடைவெளி அதிகமாகவே உதவும். காத்திருந்தது போதுமென்று, இருவருக்கும் தோதான ஒரு நேரம் கிடைக்கும்போது, விஷயத்தை நீட்டி முழக்காமல், நேர்மையான முறையில் சுருக்கமாகக் கூறி முடிப்பது நல்லது.
பெற்றோர் - பிள்ளைகள் உறவில் நெருக்கம் நிலைத்து வளர, பெரியவர்கள் விட்டுக்கொடுத்து, பிள்ளைகள் விஷயத்தில் ஆரோக்கியமான முறையில் ஆர்வம் காட்டுதல், முரண்பாடு உண்டாக்கும். சிறு விஷயங்களுக்கு வருத்தம் தெரிவிப்பது என்று வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போவது நன்மை பயக்கும்.