

விழிப்புணர்வா...? விறுவிறுப்பான வாழ்க்கையா…? எது நமக்கு மிகவும் அவசியம்?
மனித வாழ்க்கை பெரும்பாலும் இரண்டுவிதமானப் புரிதல்களுக்கு இடையில் ஊசலாடுகிறது. ஒன்று எந்நாளும் ‘விழிப்புணர்வோடு’ இருக்க வேண்டிய சூழ்நிலை; இதில் நாம் ஒவ்வொரு கணத்தையும் கவனத்துடன் உணர்கிறோம். மற்றொன்று ‘ஏற்றுக்கொள்ளும் ஒரு தளர்வான மனப்பான்மை’. இதில் நாம் எந்த ஒரு திட்டமிட்ட முயற்சியும் இன்றி; எது வந்தாலும் அதை அப்படியே எதிர்கொள்கிறோம். இந்த இரண்டு அணுகுமுறைகளுக்கும் மதிப்பு உண்டு. ஆனால் ஒரு அமைதியான வாழ்க்கையை உருவாக்குவதில் அவை வெவ்வேறு நோக்கங்களுக்குப் பயன்படுகின்றன.
விழிப்புணர்வான வாழ்க்கை:
விழிப்புணர்வு என்பது பெரும்பாலும் நனவின் நங்கூரம் (anchor of consciousness) என்று விவரிக்கப்படுகிறது. இதன்பொருள் ஒவ்வொரு நொடியிலும் நாம் நம்மை உணர்வோம். அது நம் எண்ணங்களை, உணர்ச்சிகளை மற்றும் சுற்றுப்புறங்களை எந்தவிதக் காரணமின்றி எப்போதும் கவனிப்பதோ அல்லது கணித்துக்கொண்டு இருக்க வைக்கும். இந்தப் பழக்கவழக்கம் அவசரமான எதிர்வினைகளைத் தடுக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், எந்த நேரங்களிலும் அவசரமாகச் செயல்படுவதற்குப் பதிலாக விவேகத்துடன் முன்கூட்டியே பதிலளிக்கவும் உதவுகிறது.
உதாரணமாக, கோபம் எழும்போது விழிப்புணர்வு நம்மை ஒரு கணம் நிறுத்தி அந்த உணர்வை அடையாளம் கண்டு, அமைதியான பதிலைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. இந்த வழியில் விழிப்புணர்வு ஒரு திசைகாட்டிபோல நமக்கு செயல்பட்டு; நம்மைச் சமநிலையோடு ஒரு தெளிவை நோக்கி வழிநடத்துகிறது.
இதுதான் விறுவிறுப்பான வாழ்க்கையா?:
மறுபுறம், ஏற்றுக்கொள்ளுதல் (acceptance) என்பது வாழ்க்கையை அதன்போக்கில் செல்ல அனுமதிக்கும் ஒரு கலை. அது ஒன்றும் ஒருவர் செயலற்றத் தன்மையில் இருப்பதாக அர்த்தமல்ல; மாறாக சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளலாம் என்று ஒருவரின் திறனில் வைக்கும் நம்பிக்கையாகும்.
இதனால் ‘எது வந்தாலும் நம்மால் அதை எதிர்கொள்ள முடியும்’ என்ற எண்ணத்துடன் வாழ்வது மீள்திறனை வளர்க்கிறது. இது அதிகமாகச் சிந்திப்பதைத் தடுக்கிறது மற்றும் ஒவ்வொரு விவரத்தையும் மண்டையில் ஏற்றிக்கொள்ள வேண்டிய சுமையிலிருந்து நம்மை விடுவிக்கிறது. வாழ்க்கையில் ‘நிச்சயமற்றத் தன்மை’ என்பது இயல்பானது, எனவே, ஒவ்வொன்றையும் எதிர்பார்ப்பதற்குப் பதிலாக; வருவதை ஏற்றுக்கொள்வதன் மூலமே மன அமைதியை நம்மோடு இருக்க வைக்க முடிகிறது.
விழிப்புணர்வு Vs விறுவிறுப்பு எது சிறந்து?:
ஒரு மனிதனுக்கானச் சிறந்த பாதை என்பது ஒன்றைத் தேர்ந்தெடுத்து மற்றொன்றை நிராகரிப்பதல்ல; மாறாக இரண்டையும் ஒருங்கிணைக்க கற்றுக்கொள்வதே ஆகும்.
‘விழிப்புணர்வு’ நிலைத்தன்மையுடன் இருப்பதற்கான ஒழுக்கத்தை வழங்குகிறது. அதே சமயம் ‘ஏற்றுக்கொள்ளுதல்’, வாழ்க்கையின் கணிக்கமுடியாத சூழ்நிலையில் ஒருவர் பயணிக்க அவர்களுக்கான நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. இவை இரண்டும் சேர்ந்து மனநிறைவும், நம்பிக்கையும் சந்திக்கும் ஓர் நல்லிணக்கத்தை உருவாக்குகின்றன.
இதோடு விழிப்புணர்வும், ஏற்றுக்கொள்ளுதல் மனப்பான்மையும்; கருணை, பரிவுணர்வையும் வளர்க்கின்றன. நாம் விழிப்புடன் இருக்கும்போது மற்றவர்களை நன்கு புரிந்துகொள்கிறோம். அதேபோல் வாழ்க்கையின் போக்கை நாம் ஏற்றுக்கொள்ளும்போது; உறவுகளில் பொறுமையையும், அன்பையும் வளர்த்துக்கொள்கிறோம்.
இந்த இரண்டு விஷயங்களையும் நிர்வகிப்பது என்பது மனநிறைவுடன் வாழ்வது அல்லது கவனமாக வாழ்கிறோம் போன்ற அன்றாட புரிதலில் தேவைக்கேற்ப ஈடுபட வைக்கிறது. விழிப்புணர்வு உங்களை அமைதியாக இருக்கவும், புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது. அதேவேளையில் எத்தகையச் சூழல் வந்தாலும் அதைச் சமாளிக்க கூடியதாகவும், பிறகு எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முயற்சிக்காமல் அதன்போக்கில் விடுவதன் மூலம்; மன அழுத்தத்தைத் தவிர்க்க ‘ஏற்றுக்கொள்ளுதல்’ முறை உதவுகிறது. இப்படி இவ்விரண்டையும் இணைந்து கையாளும்போது; வாழ்க்கை எளிதாகவும், அமைதியாகவும் உணரப்படுகிறது.