புத்தாண்டு பிறந்தவுடன் நம்மில் பலரும் ஜிம்முக்குச் செல்வது, தினமும் புத்தகம் படிப்பது எனப் பல இலக்குகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஆசையாக எழுதுவோம். ஆனால், பிப்ரவரி மாதம் வருவதற்குள்ளேயே அந்த நோட்டு எங்கு இருக்கிறது என்றே நமக்குத் தெரியாது. நாம் நினைத்ததை அடைய முடியாமல் போவதற்குக் காரணம் நம்மிடம் திறமை இல்லை என்பது கிடையாது. நாம் வைக்கும் 'இலக்கு' என்ற அந்த முறைதான் இங்கு மிகப் பெரிய வில்லனாக மாறுகிறது.
உலகப் புகழ்பெற்ற 'அடாமிக் ஹாபிட்ஸ்' (Atomic Habits) புத்தகத்தின் ஆசிரியர் James Clear சொல்வது போல், நாம் இலக்குகளின் உயரத்திற்கு ஒருபோதும் செல்வதில்லை, நாம் உருவாக்கியுள்ள சிஸ்டத்தின் மட்டத்திற்குத் தான் கீழே விழுகிறோம். வெறும் பகல் கனவுகளை மட்டும் காணாமல், நிஜமாகவே உங்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றும் அந்த அட்டகாசமான வழிமுறையைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இலக்குகளை விட வெற்றி சிஸ்டம் ஏன் அவசியம்!
இலக்கு என்பது ஒரு குறிப்பிட்ட முடிவை மட்டும் குறிக்கும் ஒரு தற்காலிகமான விஷயம். உதாரணமாக, பத்து கிலோ எடையைக் குறைக்கணும் என்பது ஒரு இலக்கு. ஆனால், அந்த எடையைக் குறைத்தவுடன் நாம் என்ன செய்வோம். மீண்டும் பழையபடி பிரியாணியும் பரோட்டாவும் சாப்பிடத் தொடங்கிவிடுவோம். அதனால் எடை மீண்டும் கூடிவிடும்.
இங்குதான் வெற்றி சிஸ்டம் நமக்குக் கைகொடுக்கிறது. எடை குறைப்பது இலக்கு என்றால், தினமும் இருபது நிமிடம் நடப்பது மற்றும் சத்தான உணவைச் சாப்பிடுவது என்பது ஒரு சிஸ்டம். முடிவுக்காகக் காத்து கிடக்காமல், தினமும் செய்யும் அந்தச் செயலை முழுமையாக ரசிப்பது தான் இந்த முறையின் மிகப் பெரிய பலமாகும்.
உங்களுக்கான வெற்றி சிஸ்டம் உருவாக்குவது எப்படி?
ஒரு பெரிய மலையை ஒரே நாளில் தூக்க வேண்டும் என்று நினைத்தால் யாருக்குமே அது சாத்தியப்படாது. ஆனால் தினமும் ஒரு சிறிய கல்லை நகர்த்தினால், சில வருடங்களில் அந்த மலையே அங்கே இருக்காது. உங்களுடைய வெற்றி சிஸ்டம் மிக மிக எளிமையானதாக இருக்க வேண்டும்.
'தினமும் ஐந்து மணி நேரம் படிப்பேன்' என்று மூளைக்குப் பொய் சொல்வதை விட, 'தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரே ஒரு பக்கம் புத்தகம் படிப்பேன்' என்று முடிவெடுங்கள். இந்தச் சின்னஞ்சிறு செயல் உங்கள் உடலுக்கு எந்தவிதமான சோம்பலையும் கொடுக்காது. நாட்கள் செல்லச் செல்ல இதுவே உங்கள் இரத்தத்தில் ஊறிய ஒரு நிரந்தரப் பழக்கமாக மாறிவிடும்.
தோல்விகளைத் தவிர்க்கும் வெற்றி சிஸ்டம்!
நாம் ஒரு இலக்கை வைக்கும்போது, அதை அடையும் வரை நம்மை நாமே ஒரு தோல்வியாளராகவே நினைத்துக் கொள்கிறோம். ஆனால் வெற்றி சிஸ்டம் முறையில் நீங்கள் தினமும் அந்தச் செயலைச் செய்து முடித்தாலே அன்று நீங்கள் ஒரு மிகப்பெரிய வெற்றியாளர் தான்.
பிரபல கார்ட்டூனிஸ்ட் Scott Adams சொல்வது போல, இலக்குகள் தோற்பவர்களுக்கானது, சிஸ்டம் மட்டுமே ஜெயிப்பவர்களுக்கானது. முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், உங்கள் அன்றாடச் செயல்பாடுகளில் மட்டும் நூறு சதவீதம் கவனத்தைச் செலுத்துங்கள்.
நீங்கள் காகிதத்தில் எழுதி வைக்கும் இலக்குகளை உடனே கிழித்துப் போட்டுவிட்டு, இன்று முதல் உங்களின் தினசரிச் செயல்பாடுகளைச் செதுக்கத் தொடங்குங்கள். சரியான செயல்முறையைக் கையில் எடுத்தால், நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத பிரம்மாண்டமான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் மிக இயல்பாக நடக்கும்.