

நாம இப்ப வாழுறது நவீன நாகரிகத்தோட மத்திய காலகட்டத்துல. ஆனா ஒரு கசப்பான உண்மையைச் சொல்லட்டா? நம்மல்ல முக்காவாசி பேரு, நமக்கு அப்புறம் வரப்போற தலைமுறையும், கடைசி வரைக்கும் உண்மையான மன நிம்மதியையோ, சந்தோஷத்தையோ அடையப் போறதே இல்லை. ஏன் இப்படிச் சொல்றேன்னா, இன்னைக்கு நம்மல பல பேருக்கு நம்ம வாழ்க்கையில நமக்காகன்னு ஒரு குறிக்கோளே இல்லாம ஓடிக்கிட்டு இருக்கோம்.
நாம தினமும் நமக்கு துளியும் பிடிக்காத, அர்த்தமே இல்லாத, எதுக்கு செய்றோம்னே தெரியாத விஷயங்களை பணத்துக்காகவும், பேருக்கும், புகழுக்காகவும் செஞ்சுகிட்டு இருக்கோம். நம்மள சுத்தி இருக்கிறவங்க முன்னாடி சந்தோஷமா இருக்க மாதிரி காட்டிக்கிறதுக்காகவும், நம்ம கூட இருக்கிறவங்களை திருப்திப்படுத்தவும், மத்தவங்களோட பாராட்டுக்காகவும் நம்ம வாழ்க்கையை நாம வாழாம, மத்தவங்களுக்காக வாழ்ந்துட்டு இருக்கோம்.
நம்ம வாழ்க்கை நமக்கு பிடிக்கலங்கிற அந்த குற்ற உணர்வு நம்மள பாதிக்கக் கூடாதுங்கிறதுக்காக, நம்மள நாமே பொய்யான, தற்காலிக சுகங்கள் மூலமா திசை திருப்பிக்கிறோம். நம்ம உடம்பையே கொஞ்சம் கொஞ்சமா அழிக்கிற உணவுகளை சாப்பிடுறோம். மீதி இருக்கிற நேரத்துல, ஒரே இடத்துல உக்காந்து சோஷியல் மீடியாவுல மணிக்கணக்கா நம்ம நேரத்தை செலவு பண்றோம். நமக்கு யாருன்னே தெரியாத ஆட்களை கவரணும்ங்கிறதுக்காக, EMI-லயும் கிரெடிட் கார்டுலயும் நமக்கு தேவையே இல்லாத பொருட்களை வாங்கி குவிக்கிறோம்.
நம்ம வாழ்க்கையை மாத்துறதுக்கு எந்த ஒரு முயற்சியுமே எடுக்காம, "ஒரு நாள் எல்லாம் மாறிடும்"னு கற்பனை மட்டும் பண்ணிக்கிட்டு, மறுபடியும் மறுபடியும் அதே பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கோம். நம்ம வாழ்க்கையில எதைப்பத்தியும் யோசிக்காம, சோஷியல் மீடியாவுல என்ன டிரெண்ட் ஆகுது, எந்த நடிகர் என்ன சொன்னாரு, யாரு செஞ்சது சரின்னு நமக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்களுக்காக சண்டை போட்டுக்கிட்டு, நம்ம நேரத்தை வீணடிக்கிறோம்.
இந்த சுலபமா கிடைக்கிற, ஆனா பொய்யான சந்தோஷத்துக்கு நம்ம மூளையும் உடம்பும் பழகிடுது. வாரக் கடைசியில கிடைக்கிற லீவுல கூட, நமக்காக எதையும் செஞ்சுக்காம, டிவி பார்த்துக்கிட்டும், போனை நோண்டிக்கிட்டும் அந்த நேரத்தை வீணடிக்கிறோம். நண்பர்களோடயோ, குடும்பத்தோடயோ நேரத்தை செலவழிக்காம, மணிக்கணக்கா போன்ல சாட் பண்றோம். இந்த மாதிரி நமக்கு பிரயோஜனமே இல்லாத விஷயங்கள் மேல நம்ம கவனத்தையும், நேரத்தையும், சக்தியையும் செலவு பண்ணிக்கிட்டு இருக்கோம்.
இதுக்கு தீர்வு என்ன? சமுதாயத்தை திட்டிட்டு, துறவி மாதிரி போறது நம்ம எல்லாருக்கும் சாத்தியம் இல்லை. நம்ம சுத்தி நடக்குற விஷயங்களுக்காக மத்தவங்களைக் குறை சொல்றதுலயும் அர்த்தம் இல்லை. நம்ம வாழ்க்கை இப்படி இருக்கதுக்கு காரணம் நம்மதான். நம்ம எதிர்காலம் எப்படி இருக்கணும்னு தீர்மானிக்கப் போறது, இப்போ நாம எந்த விஷயத்துக்கு நம்ம கவனத்தை தரோம்ங்கிறதை பொறுத்துதான் இருக்கு.
இப்போ நாம பண்ற இந்த தேவையற்ற விஷயங்கள் எல்லாம், எதிர்காலத்துல நமக்கு வலியையும், துன்பத்தையும், ஏமாற்றத்தையும் மட்டும்தான் கொடுக்கும்ங்கிற உண்மையை நாம புரிஞ்சுக்கணும். இப்ப நான் ஆறு மாசம் கழிச்சு ஒரு நல்ல உடம்போட இருக்கணும்னு ஆசைப்பட்டா, அதுக்காக நான் இப்போ என்னோட நேரத்தை போன்ல வீணடிக்காம, உடற்பயிற்சி செய்யணும்.
அதே மாதிரி, மத்தவங்களுக்காக வாழ்றதை நிறுத்திட்டு, நமக்கு எது நிம்மதியைக் கொடுக்கும், நம்ம குறிக்கோள் என்னன்னு யோசிச்சு, அதுக்காக நம்ம நேரத்தை செலவு பண்ண ஆரம்பிக்கணும். நம்ம வாழ்க்கையை மாத்துறதுக்கான சக்தி நம்மகிட்டதான் இருக்கு.