
"என்ன செய்தாலும் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. வயசுதான் ஆகிட்டே போகுதே தவிர எனக்கு எந்த வாய்ப்புகளும் வரமாட்டேங்குது. என்னை யாரும் கவனிக்கவும் மாட்டேங்கிறாங்க. நல்லா படிச்சிருக்கேன் எல்லாத் திறமைகளையும் வளர்த்திருக்கேன். ஆனா என்ன காரணம் என்று இதுவரைக்கும் தெரியல. இன்னும் நான் நல்ல பொசிஷன் வரதுக்கு முயற்சி பண்ணிட்டுதான் இருக்கேன். ஆனால் ஒண்ணும் நடக்க மாட்டேங்குது எல்லாம் என் தலைவிதி" தெரிந்த இளைஞனிடம் பேசியபோது வேலை பற்றி விரக்தியுடன் அவர் சொன்னது இது.
"சரி. அப்போது உங்கள் அன்றாட செலவுகளுக்கு எப்படி சமாளிக்கிறீர்கள்?" இது நான்.
"என் அப்பா எப்பொழுதும் பாக்கெட் மணியாக ஒரு தொகையை என் செலவுகளுக்காக தந்து விடுகிறார். நான் சம்பாதிக்கும் வரை அவர் தானே எனக்குதா தரவேண்டும். வேறு வழி ?" அசால்ட்டாக சொல்லிச் சென்றார் அவர்.
இன்றைய இளம் தலைமுறையினர் பிரச்னையே இதுதான். எவ்வளவு திறமைகள் இருந்தாலும் தலைவணங்கி செல்ல மாட்டார்கள். ஈகோ எனும் பெரும் பிரச்னை அவர்களிடம் தலை தூக்கி இருக்கிறது. எந்த வேலையாக இருந்தாலும் தன்னைத்தேடி வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
உருண்டு புரண்டு வேலை வாய்ப்புகளை வாங்கக்கூடிய நிலையில் இருப்பவர்கள் நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் மட்டுமே. ஏனெனில் அவர்களின் அன்றாட செலவிற்கு அவர்களுக்குத் தேவையான வருமானம் நிச்சயம் வேண்டும் எனும் நிலையில் அவர்கள் உழைப்பை நோக்கி தள்ளப்படுகிறார்கள்.
அப்பா அம்மாவின் பராமரிப்பில் எந்த கவலையும், பண பிரச்னையும் இன்றி சொகுசாக வாழும் இளைஞர்கள் தங்கள் வேலை குறித்தான எவ்வித அக்கறையும் இன்றி இருப்பதை அனேக இடங்களில் பார்க்க முடியும். அவர்களின் பெற்றோர்களும் வேலை பளுவில் இவர்களைப் பற்றிய சிந்தனை இன்றி 'படிக்க வைத்து விட்டோம் அவனுக்கேத்த வேலை இன்னும் கிடைக்கவில்லை. அவன் என்ன செய்வான் பாவம். ஆனாலும் அவனும் அலையறானே" எனும் நம்பிக்கையுடன் இருப்பார்கள்.
ஒரு கட்டத்தில் தங்கள் மகன் குறித்தான நிலை என்ன என்ற கேள்வி வரும் போதுதான் விழித்துக்கொள்வார்கள். ஆனால் அப்போது காலம் கடந்திருக்கும். தங்கள் மகனால் வெற்றி பெற முடியவில்லை என்ற பெரும் கவலையுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பார்கள். பெற்ற பிள்ளைக்கு தாங்களே ஆதரவு எனும் நிலையில் தங்கள் சம்பாத்தியத்தையும் அவர்களுக்காகவே தாரை வார்த்து கொடுக்கும் பெற்றோரும் உண்டு.
இதற்கு என்ன மூல காரணம்? உழைக்கும் எண்ணம் இல்லாததாலே இந்த நிலை ஏற்படுகிறது. படித்துவிட்டால் மட்டும் போதுமா? தனக்கான தேவைகளுக்கு தானே சம்பாதித்துக்கொள்ளும் வாய்ப்புகளைத் தேடிப்போகும் இளைஞர்களே வெற்றி பெற்றவர்களாக திகழ்கிறார்கள்.
நிறையப் பேருக்கு நடிகை வடிவுக்கரசியை அறிந்திருப்பீர்கள். ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தில் தனக்கென தனி முத்திரையுடன் நடிப்புத் துறையில் 450 படங்களுக்கு மேல் நடித்து 45 ஆண்டுகளைக் கடந்திருக்கும் வடிவுக்கரசியின் எனர்ஜி நம்மை வியக்க வைக்கும்.
“நாம் வாழறதுக்குப் பணம் வேணும். குறைந்தபட்சம் அடிப்படை தேவைகளை நிறைவேத்திக்கவாவது பணம் வேணும். எனக்கு சம்பாதிச்சுக் கொடுக்க யாருமில்லை. அப்படியே கொடுத்தாலும் அதை வாங்கிக்கிற ஆள் நானில்லை. இந்த வயசுலயும் நான் சம்பாதிச்சு மத்த வங்களுக்குக் கொடுக்கணும்னு நினைப்பேனே தவிர, நான் யார்கிட்டேயும் போய் பணம் வேணும்னு கேட்டு நிக்க மாட்டேன். என்னுடைய பிறவி குணம் இது.
அதுக்கு வேலை செய்யணும். யார் கிட்டேயும் காசு கொடுங்கன்னு கேட்டாத்தான் தப்பு. வேலை கொடுங்கன்னு கேட்கிறதுல தப்பில்லையே. நான் உழைக்கத் தயாரா இருக்கேன். உழைச்சுட்டும் இருக்கேன். எந்தப் பாகுபாடும் இல்லாம எல்லாத் தரப்பட்ட கலைஞர்களுடன் இணைஞ்சு வேலை செய்யுறேன். எந்த டைரக்டரா இருந்தாலும் கூச்சப் படாம ‘சின்ன கேரக்டர் இருந்தாலும் கொடுங்க... ரெண்டு நாள் வேலையா இருந்தாலும் பரவாயில்லை’ன்னு கேட்டுடுவேன்." 60 வயது கடந்த அவர் தனியாருக்கு தந்த பேட்டி ஒன்றில் கூறிய இந்தக் கருத்து அப்போது வைரலாகி பலருக்கும் தன்னம்பிக்கை தந்தது.
இதுதான். இந்த உற்சாகம்தான் இன்றைய இளையதலைமுறைக்குத் தேவை வெற்றிபெற… சரிதானே?