Motivation Image
Motivation ImageImage credit - pixabay.com

மனதிலிருந்து எழும் வாழ்வியல் நெறிதான்... சகிப்புத்தன்மை!

வெற்றி என்பதைப் பற்றி பலவித விளக்கங்கள், பல விதமான கருத்துக்கள் உள்ளன. பணம் சம்பாதிப்பதை வெற்றி என்றும் உயர் பதவி பெறுவதை வெற்றி என்றும் பங்களா, கார், வேலைக்காரர்கள் போன்ற சகல வசதிகளுடன் வாழ்ந்து வருவதை வெற்றி என்றும் கருதுகின்றனர். ஆனால் இவைகள் அனைத்திலும் சுயநலம் கலந்திருப்பதால் பெரும்பாலானவர்கள் இப்படிப்பட்டவர்களை மதித்து மரியாதை தருவதில்லை என்பதுதான் நிஜம். "பணம் இருந்துட்டா போதுமா மனுசன் நாலு பேரை மதிக்கிறானா பார்?" என்ற வசனத்தை கேட்டிருப்போம்.

பின் எதுதான் வெற்றி? நன்கு வாழ்ந்து வருகிறோம் என்ற மனநிறையுடன் ஒவ்வொரு வினாடியையும் நன்கு அனுபவித்து சந்தோஷமாகவும் பிறருக்கு பயன்படத்தக்கதாகவும் சகிப்புத் தன்மையுடன் வாழ்ந்து பிறப்பின் அர்த்தம் உணருபவர்களே வெற்றியாளர்கள் ஆகிறார்கள். நான் என்னும் அகந்தையை ஒழித்து மற்றவர்களுடைய நன்மைக்காக உழைத்து வருவதில் இன்பம் காண்பவன் ஒரு வெற்றி வீரன். கலைகளை வளர்த்து சிறந்த நாகரீகத்தை உருவாக்க பாடுபட்டு வருபவன் ஒரு வெற்றி வீரன். அன்பும் பண்பும் நிறைந்த ஒரு குடும்பத்தை உருவாக்கியவன் ஒரு வெற்றி வீரன். இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது பொறுமை அல்லது சகிப்புத்தன்மை எனும் மாபெரும் குணம். 

தனிமனித வாழ்வில் துவங்கி, பொதுவாழ்க்கை, குடும்பம், கொடுக்கல் வாங்கல், அரசியல் என மனித சமூகத்தின் அனைத்திலும் ஆளுமை செலுத்துகிற ஆற்றல் கொண்ட ஓர் அற்புதப் பண்பு தான் சகிப்புத்தன்மையாகும்.

சகிப்புத்தன்மையை இழந்துவிட்டால் நம் நிலை தவறிவிடும். வாழ்க்கைப் போகும் பாதையும் மாறிவிடும்.  ஒருவர் நம்மிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டால், நாமும் அவரிடம் அப்படியே நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுதான் பழி வாங்கும் தன்மை. பழி வாங்கும் தன்மையை விட்டுவிட்டு அவரை மன்னித்தால் அதுதான் சகிப்புத்தன்மை.

அதேபோல மற்றவர்கள் எல்லாவிதத்திலும் நமது விருப்பத்திற்கு ஏற்பவே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமல், அவர்களுக்குரிய குணங்களுடன் அவர்கள் இருப்பார்கள் என்று அவர்களின் நிறைகுறைகளுடன் ஏற்றுக் கொண்டால் அதுதான் சகிப்புத்தன்மை. இந்திய குடும்ப அமைப்பின் அடிப்படை இந்த சகிப்புத்தன்மைதான். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சகிப்புத்தன்மையுடன் வாழ்பவர்கள் இன்றும் உள்ளனர்.

அது மட்டுமல்ல தற்போது உலகில் நிலவும் பல்வேறு கலாசாரங்களையும் ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்று அழைக்கிறோம். மனிதகுலம் செழிப்பாக வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த பண்புகளுக்கு அடிப்படையாக இருப்பது சகிப்புத்தன்மை என்பதால் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என அன்றே நம் பெரியோர் எழுதி வைத்தனர்.

சகிப்புத்தன்மை என்பது சாதி, மத, இன, மொழி உணர்வுகளால் வரும் பற்று அல்ல, மாறாக அது ஒவ்வொருவரின் மனதிலிருந்து எழும் வாழ்வியல் நெறி... ஆம். புத்தர், மகாவீரர், காந்திஜி போன்ற சகிப்புத்தன்மை கொண்ட ஞானிகளைத் தந்தது நம் நாடு. சகிப்புத்தன்மை என்ற மேலான நெறியை உலக அளவில் எடுத்துச் செல்லும் தகுதி நமக்கு சற்று அதிகமாகவே உள்ளது எனப் பெருமிதம் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
உடுமலைப்பேட்டையில் உல்லாசமாய் சுற்றிப் பார்க்க வேண்டிய 7 இடங்கள்!
Motivation Image

இத்தகைய சகிப்புத்தன்மையை கற்றுக்கொள்ளும் இடங்களிலும், நமது பணியிடங்களிலும் நாம் கடைப்பிடித்தால் எத்தகைய நன்மைகள் பெறலாம் தெரியுமா? எப்போது சகிப்புத்தன்மையை மேற்கொள்கிறோமோ நாம் அப்போதே வியக்கத்தக்க வகையிலான வெற்றி வாழ்க்கையை நோக்கி நாம் பயணிக்கத் தொடங்கி விடுவோம்.

ஆனால் இன்றைய தலைமுறையினரிடம் இந்த குணம் இருக்கிறதா எனும் அச்சமும் வருகிறது. எல்லாவற்றிலும் "எடுத்தோம் கவிழ்த்தோம்" என்றிருக்கும் மனப்பான்மை இருப்பதைக் காண்கிறோம். இது வெற்றிக்குத் தடை என்பதை உணர்ந்து வெற்றி தரும் சகிப்புத்தன்மையயை வளர்த்துக் கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது.

வாழ்க்கையின் அடிப்படை உணர்ச்சிகளான அன்பு, நட்பு, ஈகை உள்ளிட்ட பண்புகளுடன் கல்வியறிவும் பெற்று சகிப்பு தன்மையுடன் வாழ முடிவெடுத்து வெற்றியை நம்மிடம் தேடி வர வைப்போம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com