
நிறைய விஷயங்களை சிந்திப்பதற்கும் செயல் படுத்துவதற்கும் தனிமை ஒரு வரப்பிரசாரம். சதா நாம் செய்யும் வேலைகளை பற்றி ஏதாவது குறை கூறுபவர்களை விட, எந்த விமர்சனமும் செய்யாமல் அப்படியே செய்தாலும் அதைக் கூட காது கொடுத்து கேட்காமல் இருப்பதற்கு தனிமை மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.
நீங்கள் யார் என்பதையும், உங்கள் தேவை எது என்பதையும் ஆழப் பதித்திடும் அற்புதமான விஷயமே தனிமை என்பது. நீங்கள் வலிமையாக இருக்கவேண்டும் என்றால் துன்பங்களை தனியாக ஏற்றிடும் மனப்பக்குவத்தை கற்றுக்கொள்ளுங்கள். ஒரு மனிதனுக்கு அழகு என்பது எல்லாவற்றிலும் ஒதுங்கி நிற்பதை விட, தேவை இலலாதவற்றை ஒதுக்கிவிட கற்றுக்கொள்ள வேண்டியதே.
கவனிக்க யாரும் இல்லாத பொழுது எப்படி இருக்கிறோம், எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் இருக்கிறது தனிமனித ஒழுக்கம். மேலும் தனிமையை நாம் சகித்துக்கொண்டு வாழ்வது வாழ்க்கை இல்லை. தனிமையில் இருக்கும் பொழுது நம்மால் எந்தெந்த செயல்களில் ஈடுபட்டு சிறப்புடன் செயலாற்ற முடியுமோ அத்தனையையும் நன்றாக செய்து நம்மை நாம் செதுக்கிக்கொண்டு வாழ்வதில்தான் அடங்கியிருக்கிறது தனிமையின் பேரின்பம்.
தனிமை எளிதானது அல்ல. ஆனால் அது வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். வாழ்க்கையில் எந்த சூழலும் தனியாக நின்று போராடும் தைரியமே தன்னம்பிக்கை என்பது.
தனிமை நேசிக்கக் கற்றுத்தரும், தனிமை யாரை நேசிப்பது என்பதைக் கற்றுத்தரும், தனிமையின் சூழ்நிலை நம்மை நேசிப்பவர் யார் என்பதை தெரிந்துகொள்ள கற்றுத்தரும்.
ஆதலால் தனிமையில் இருப்பதை சாபம் என்று எண்ண வேண்டியதில்லை. தனிமையில் இருப்பதும் ஒரு வரம்தான் என்று நினைத்துக் கொண்டால், அதிலிருந்து பாடம் படிக்க ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ஆகவே, தனிமையில் இனிமை காண முடியுமா என்ற சந்தேகம் வேண்டாம். தனிமை சக்தி நிறைந்தது. தனிமைதான் சிந்திக்க தூண்டுவது. தனிமைதான் எண்ண அலைகளை ஒருங்கிணைப்பது. ஆதலால் தனிமையில் இருக்கும் சூழ்நிலை ஏற்படும்போது அதையும் நேசிப்போம்! அதன் மூலம் கற்க வேண்டியதை கற்போம். அதன் வழி நடப்போமாக!