
நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு வேலை செய்கிறோம், எத்தனை மணிநேரம் வேலை செய்கிறோம் என்பது முக்கியமில்லை. எவ்வளவுதான் முயற்சியைப் போட்டு வேலை செய்தாலும், அது நம் குறிக்கோளை நோக்கி இல்லை என்றால் வீணாகிவிடும். நாம் செய்யும் வேலைகள் கவனச்சிதறல் இன்றி நம் குறிக்கோளை நோக்கி இருக்கிறதா? என்பது மிகவும் முக்கியமாகும். அப்போதே விரைவில் வெற்றியடைய முடியும். இதைப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையை பார்ப்போம்.
ஒரு ஊரில் துப்பாக்கி சுடும் போட்டி ஒன்று நடந்தது. அதில் ஒருவர் பத்து முறை துப்பாக்கியால் சுட்டார். இன்னொருவர் ஒரேயொரு முறை சுட்டார். ஆனால், பரிசு கிடைத்ததோ ஒருமுறை துப்பாக்கி சுட்டவருக்குத்தான்.
உடனே பத்து தடவை துப்பாக்கி சுட்டவருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் போட்டி நடத்துபவரிடம் சென்று சண்டைப் போட்டார். ‘என்ன இது! நான்தானே அதிக முறை துப்பாக்கி சுட்டேன்! எனக்குத்தானே பரிசு தரவேண்டும்’ என்று கேட்டார். அதற்கு அந்த போட்டியை நடத்துபவர் சொன்னாராம், ‘அப்பா! நீ பத்து முறை துப்பாக்கி சுட்டாலும் மையப்புள்ளியை சுற்றியுள்ள இடத்திலேதான் சுட்டாயே தவிர மையப்புள்ளியில் சுடவில்லை. அவர் ஒருமுறை சுட்டாலும், மையப்புள்ளியில் சரியாக குறிவைத்து சுட்டார். அதனால்தான் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது’ என்றார்.
இந்தக் கதையில் சொன்னதுப்போல, சிலர் நிறைய நேரம் செலவழித்து ஒரு குறிக்கோளிற்காக முயற்சித் திருந்தாலும் வெற்றியடைய தாமதம் ஆவதற்கான முக்கிய காரணம் இதுதான். எவ்வளவு நேரம் வேலை செய்கிறோம், எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறோம் என்பது நம் வெற்றியை நிர்ணயிக்காது.
நாம் செய்யும் காரியத்தில் கவனச்சிதறல் இன்றி எவ்வளவு மணிநேரம், எத்தனை வேலைகள் நம்முடைய குறிக்கோளை நோக்கி இருக்கிறது என்பது மிகவும் முக்கியமாகும். எனவே, நன்றாக யோசித்து குறிக்கோள் சார்ந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இதை தெளிவாக புரிந்துக்கொண்டால் வாழ்க்கையில் வெற்றியடைவது சுலபமாகிவிடும். முயற்சித்துப் பாருங்களேன்.