
அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்கிறோம். கற்றுக்கொள்வது என்பது நம்முடைய வாழ்க்கையில் முடிவே இல்லாத ஒரு செயலாகும். ஆனால் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கும் நாம் அனைவரும் வாழ்க்கையில் நம்முடைய இலக்குகளை எட்டி விட்டோமா? என்று கேட்டால் பதில் கூறுவதற்கு சிறிது யோசிக்க வேண்டியுள்ளது. அப்படியானால் நாம் எங்கே தவறு செய்கிறோம்? யோசித்தோமானால், நாம் ஒன்றை கற்றுக்கொள்ளும் அளவுக்கு அதனைப் பயன்படுத்துவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
நாம் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் மற்றவர்களுக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அறிவுப்பூர்வமாகவோ அல்லது செயல் வழியாகவோ கடத்தி விடவேண்டும். அவ்வாறு மற்றவர்களுக்கு நாம் கடத்தும் போதுதான் நம் மனமானது கலங்கிய நீர் தெளிவதைப்போல மீண்டும் தெளிந்து புதிதாக ஊற்றெடுக்கும். எனவே மனது செம்மையாகவும், அறிவு தெளிவு பெறவும் இத்தகைய செயல் மிகவும் முக்கியமானது. இதோ ஒரு குட்டிக் கதை...
ஒரு ஆசிரமத்தில் ஒரு குரு தன்னுடைய சீடர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த ஆசிரமத்தில் இருந்த அனைத்து சீடர்களும் குருவின் வார்த்தை களையும் செயல்களையும் நன்கு உணர்ந்து கொண்டு சிறப்பாக கற்றுத் தேர்ந்தனர். ஒரு குறிப்பிட்ட காலத்தில் அனைவரும் அந்த ஆசிரமத்தைவிட்டு தங்கள் இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டனர். சிறிது காலம் சென்ற பின், குரு தன்னுடைய சீடர்களை சந்திப்பதற்காக அவர்களது இருப்பிடத்தை தேடிச்சென்றார். பல்வேறு சீடர்களை சந்தித்த பின் அவர் இறுதியாக நகுலன் என்று சீடனை சந்தித்தார். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் ஒரு இடத்தில் மக்கள் அனைவரும் கூட்டமாக நின்று கொண்டு பனை ஓலையில் கூடை முடிவதை பார்த்துக் கொண்டிருந்தனர்.
குரு நகுலனிடம், "அனைவரும் வேடிக்கை பார்க்கும் போது, ஏன் நீ மட்டும் இங்கே தனியாக இருக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு அவரது சீடனோ, "நான்தான் அனைத்தையும் கற்றுவிட்டேனே! அதனால்தான் நான் அங்கே போய் என்ன நடக்கிறது என்பதை கவனிக்கவில்லை" என்று கூறினான்.
உடனே அந்த குரு அவரை தன்னுடன் ஆசிரமத்திற்கு வரும்படி அழைத்துச் சென்றார். ஆசிரமத்தில் உள்ளே நுழைந்த உடன் ஒரு பெரிய கண்ணாடி குடுவையை வைத்து அதனுள் தண்ணீரை நிரப்ப தொடங்கினார். குடுவை முழுவதும் நிறைந்த பிறகும் தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருந்ததார். அதைப் பார்த்த நகுலனோ, "குருவே, தண்ணீர்தான் நிறைந்து விட்டதே! மீண்டும் மீண்டும் ஏன் தண்ணீரை ஊற்றுகிறீர்கள்? எல்லாம் வழிந்து வெளியேறுகிறது அல்லவா!" என்று கேட்டான்!
அதுவரை அமைதியாக இருந்த குரு, "இந்த காலி கண்ணாடி குடுவையை போன்றதுதான் நம்முடைய மனதும் அறிவும். அதில் புதியவற்றை நிரப்பவேண்டும் என்றால் நாம் கற்ற பழையவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கவேண்டும். எப்போதும் மனதையும் அறிவையும் ஒரு காலி குடுவையாகவே வைத்திருக்க வேண்டும். ஒருவேளை நீ இங்கு கற்ற எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு கற்பித்து இருந்தால் 'நாம்தான் எல்லாத்தையும் கற்று விட்டோமே!' என்ற எண்ணம் உனக்குள் வந்திருக்காது! உன் மனமானது தெளிவாகி தினம் தினம் புதிய சிந்தனைகள் உதித்துக் கொண்டே இருந்திருக்கும்! இப்பொழுது உன்னுடைய மனதும் அறிவும் ஒரு கலங்கிய நீரைப்போல் இருக்கிறது. அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. முதலில் அதனை வெளியேற்று. புதிய சிந்தனைகள் தானாக ஊற்றெடுக்கும் என்று கூறினார். மனம் தெளிந்த சீடன் மறுபடியும் தனது இருப்பிடத்தை நோக்கி சென்றான்.
நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் கற்றல் என்பது முடிவில்லாத ஒரு செயலாகும். நாம் ஒன்றை கற்றுக் கொள்வதை விட மிகவும் முக்கியமானது அதனை சரியான இடத்தில் சரியான நேரத்தில் பயன்படுத்துவது. எனவே கற்றுக்கொள்வதில் இருக்கும் ஆர்வத்தை விட, ஒரு படி மேலான ஆர்வம் அதனை பயன்படுத்துவதிலும் இருக்க வேண்டும்! நம்முடைய மனதையும் ஒரு காலி குடுவையாக மாற்றுவோம்! அதுவும் தினந்தோறும் புதிய சிந்தனைகளால் நிறையட்டும்!