
ஒருவர் தானாக வளர்ந்துவருகிறபோது கடந்து வருகிற அனுபவங்களை அவர்களுக்கு கொடுக்காமல், அவர்களை பத்திரமாக பாதுகாக்கிறேன் என்கிற பெயரிலோ அல்லது சரியாக வழிநடத்துகிறேன் என்கிற பெயரிலோ எல்லாவற்றையும் நாமே செய்து முடித்துவிடுகிறோம். அதற்கு பழக்கப்பட்டுப்போன அவர்களும், ஒரு விஷயத்தை தானாக செய்வது எப்படி? அந்த விஷயத்தை செய்கிறபோது பிரச்னைகள் வந்தால் கையாள்வது எப்படி? மற்றமனிதர்களோடு சேர்ந்து ஒரு விஷயத்தை வெற்றிகரமாக முடிப்பது எப்படி? என்பது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமலேயே பயணிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.
ஒரு கட்டத்தில் நம்மால் உதவிசெய்ய முடியாத நிலை ஏற்படுகிறபோது, தானாகத்தான் அந்த வேலையை செய்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் ஏற்படுகிறபோது, அந்தக் காரியத்தை செய்வதற்குரிய துணிச்சலோ, நம்பிக்கையோ அல்லது அதைக் கையாள்வதற்கான வழிமுறைகள் எதுவுமோ இன்றி அவர்கள் பரிதவிக்கிறார்கள். அய்யோ! பாவம் தடுக்கி விழுந்தால் தடுமாறிப்போவார்களே என்ற பயத்திலேயே அவர்களைப் பத்திரமாக பிடித்துக்கொண்டிருந்தோம் என்றால். ஒருநாள் அவர்கள் தடுக்கி விழுகிறபோது, எழுவது எப்படி என்று தெரியாமல் தவித்துப் போவார்கள்.
வீட்டுக்கு ஒரே பிள்ளை அதனால்தான் செல்லம் கொடுத்து வளர்த்தோம். இப்பொழுது எதையுமே செய்யத் தெரியாதவனாக இருக்கிறான் என்று, நிறைய பேர் புலம்புகிறார்கள். நீங்களும்கூட அப்படிக் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு. அப்படியான ஒரு சூழலை நம் அன்புக்கு உரியவர்களுக்கு கொடுப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கமுடியும்.
வாழ்க்கை அதன் போக்கில் ஒவ்வொருவருக்கும் சில பாடங்களை பயிற்றுவிக்கிறது. அந்த பாடங்கள் கொடுக்கும் அனுபவங்கள்தான் வாழ்க்கையை எப்படிக் கையாளவேண்டும் என்பது குறித்த புரிதலை ஒரு தனி மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. அந்த புரிதல் வருவதற்கு தேவைப் படக்கூடிய கால அவகாசத்தையும் சில சங்கடங்களையும் ஒருவர் பொறுத்துக் கொள்ளுகிற போதுதான், அடுத்த நிலைக்கு அவரால் உயரமுடியும் கடைசி வரைக்கும் யாரையும் நீங்கள் உங்கள் கண்காணிப்பிலேயோ அனுசரணையிலேயோ வைத்திருக்க முடியாது.
நீங்கள் ஒருவரை நேசிப்பது உண்மையாக இருந்தால் அவருடைய சின்ன சின்ன சிராய்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், அவர்களுக்கு விழுகிற அடி குறித்து அச்சப்படாமல், அவர்களை சொந்த அனுபவத்தின் வழியே நடக்க விடுங்கள்.
பாவம் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற ஒரு வார்த்தையை சொல்லிவிட்டு. நம்முடைய பிள்ளைகளுக்காகவும் நம் வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்களுக்காகவும், மனைவிக்காகவும், நண்பர்களுக்காகவும் எல்லாவற்றையும் நாமே செய்யமுடியாது.
வாழ்க்கை உங்களுக்கு ஒரு பாடத்தை சொல்லித் தந்திருப்பதைப்போல எல்லோருக்கும் ஒரு பாடத்தைச் சொல்லித்தர காத்திருக்கிறது. அவரவர் வாழ்க்கைப் பாடத்தை அவரவர் கற்றுக்கொள்ள அனு மதிப்பதுதான் நியாயமானது.
வாழ்க்கையை ஒரு வாய்ப்பாடுபோல நம்மால் சொல்லித்தர முடியாது. அந்தக் கணக்கு அவர்களுக்கு உரியது. தவறாக அவர்கள் அதை செய்தாலும் ஒருநாள் சரியாக அதைச் செய்வார்கள் தவறு செய்கிறபோது சரியாக செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுப்பதுதான் சரி. நம் அன்பிற் குரியவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டியது துணிச்சலும். நம்பிக்கையும்தான். அரவணைப்பும் அன்பும் அதற்கு ஒருநாளும் தடையாக இருந்து விடக்கூடாது.