சந்தர்ப்பவாத வௌவால்கள்!
வெற்றி என்பது பார்ப்பவர் கண்களைப் பொறுத்தது. வெற்றி கிடைக்கும் அணியின் பக்கம் தங்களை வரிசைபடுத்திக் கொள்வதற்காக பலர் தயாராக இருப்பார்கள்.
முக்கியமான பணியில் ஒருவர் இருக்கும்போது மட்டும்தான் அவரைத்தேடி வருவார்கள். நாம் முக்கியமானவர்களாக இருக்கும் போதெல்லாம் மற்றவர்களால் பயன்படுத்தப்படுகிறோம். உலகம் முழுவதும் சந்தர்ப்பவாதிகள் அதிகமாக இருக்கிறார்கள்.யாரும் எந்த காரணமும் இன்றி நம்மை விரும்புவதில்லை. ஈசாப் கதை ஒன்று உண்டு.
ஒருமுறை காட்டில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கடுமையான யுத்தம் ஏற்பட்டது. இதில் வௌவால் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தது. போர் முடிந்தபோது விலங்குகள் வெற்றி பெற்றிருந்தன. உடனே வௌவால் தானும் ஒரு விலங்குதான் என்று தன்னை வெளிக்காட்டியது. விலங்குகள் விருந்தில் கலந்து கொண்டது. காலம். சுழன்றது. மறுபடியும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கு சண்டை மூண்டது. ஆனால் இந்த முறை பறவைகள் வெற்றி பெற்றது. இந்த முறையிலும் சண்டையில் கலந்து கொள்ளாத வௌவால் வெற்றி பெற்ற பறவைகளின் சென்று தான் பறவை இனம்தான் எனக்கூறி இணக்கம் காட்டியது.
நாட்கள் சென்றன. பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சமரசம் ஏற்பட்டன. நாம் இருவரும் ஏன் வீணாக அடித்துக்கொள்ள வேண்டும். நாம் மோதுகிற போதெல்லாம் ஏற்படுகின்ற சேதம் கானகத்தை பாதித்துவிடும் எனக்கருதி அவை சமரசம் செய்து கொண்டன. அந்த சமயத்தில் பறவைகளும் விலங்குகளும் வௌவாலை எக்காரணம் கொண்டும் தங்களுடன் சேர்த்துக் கொள்ளக் கூடாது என தீர்மானித்து அவை வௌவாலை வெறுக்க ஆரம்பித்தன. அதன் விளைவாக வௌவால் பறவைகளுக்கு அஞ்சியே பகலில் பறப்பதை நிறுத்தியது. விலங்குகளின் கண்ணில் படாமல் இரவில் பறக்க ஆரம்பித்தது என்று ஈசாப் கதை கூறுகிறது.
இங்கே நம்மிடம் நிறைய சந்தர்ப்ப வௌவால்கள் இருக்கின்றன. அவை இரண்டு பக்கமும் சாய்ந்து நன்மை பெற்றுக்கொண்டே இருக்கின்றன. அவற்றை தங்கள் பக்கம் வரட்டும் என்று காத்திருப்பவர்கள் இருக்கும்வரை இந்த சந்தர்ப்பவாத வௌவால்களை தவிர்ப்பது கஷ்டம்.