

உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்ற பாடல் வரியைக் கேட்டிருப்போம். அந்த இரண்டு வரிகளிலேயே எப்படி வாழ வேண்டும் என்ற தத்துவமே அடங்கியிருக்கிறது. வயதான பெரியவர்கள் இன்றும் காலையிலிருந்து மாலை வரை உழைத்து வாழ்வதைப் பார்க்கிறோம். அவர்களிடம் இவ்வளவு காலம் உழைத்தது போதாதா? கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே என்றால், தன்கையே தனக்கு உதவி என்பது போல், 'நம் உழைப்பில் வாழ்வதுதான் நமக்கு நிம்மதியும், பெருமையும். பிள்ளைகள் உழைப்பு அவர்களின் குழந்தைகளுக்குத் தான். நாம் அவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது' என்று அறிவுரை கூறுவார்கள்.
'உழைக்காமல் முடங்கி கிடப்பவனை சிலந்தியும் சிறை பிடிக்கும். எழுந்து நடப்பவனுக்கு இமயமும் வழி கொடுக்கும்' என்பது பொன் மொழி.
'நத்தையின் வேகம் அதிகம் தான். உழைக்காமல் முழு நேரமும் முடங்கி கிடக்கும் மனிதனின் வேகத்தை விட' என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு மனிதர் பள்ளிவாசலில் ஐங்காலத் தொழுகையைத் தொழுது முடித்த பின் தனது இல்லம் செல்லாமல், அப்பள்ளியிலேயே அமர்ந்து இறைவனை மேற்கொண்டு தொழுவதும், இறைவேதம் ஆகிய திருக்குர்ஆனை எடுத்து வைத்து ஓதுவதும் மற்றும் தஸ் பீஹ் (இறை நாமத்தை உச்சரித்தல்) ஆகியவற்றை தொடர்ந்து செய்வதுமாக இருந்தார். இதைக் கண்ட நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அருகில் நின்ற நண்பரிடம், "இவர் யார்? இவர் பிழைக்கச் செல்லாமல் நாள் முழுவதும் பள்ளிவாசலிலேயே தங்கி தன் தொழுகையை கழிக்கின்றாரே இவரது குடும்பத்தை யார் காப்பாற்றுகின்றார்கள்?" என்று கேட்டார்.
அதற்கு "இவரின் சகோதரர் காட்டிற்குச் சென்று விறகு வெட்டி விற்பனை செய்து, தன் குடும்பத்தையும், அண்ணனின் குடும்பத்தையும் கவனித்து வருகின்றார்" என்று கூறினார்.
இதைக் கேட்ட நபிகளார், "ஒவ்வொரு மனிதனும் தானே உழைத்து வாழ வேண்டும். அடுத்தவர் உழைப்பில் ஒருபோதும் வாழக்கூடாது!"என்று உழைப்பின் உயர்வை எடுத்துரைத்தார். மேலும் "தன் குடும்பத்தையும் அண்ணனின் குடும்பத்தையும் காப்பாற்றி வருகின்ற இவரது தம்பி தான் இவரில் மிகச்சிறந்தவர்"! என போற்றி புகழ்ந்துரைத்தார்.
தன் கையால் உழைத்து சம்பாதித்து குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து வாழ்வதில்தான் மகிழ்ச்சி இருக்கிறதே தவிர, வெளியே உள்ள வேறு எந்த புறக்காரணங்களாலும் வருவது கிடையாது. வந்தாலும் அது நிலைத்து நிற்காது. ஆதலால் வாழ்க்கை என்பது குலுக்கல் முறை அல்ல. வெற்றியும், வசதியும் வெகு சீக்கிரம் விழுவதற்கு! கடின உழைப்பால் வருவது தான் அது! இலையுதிர் காலம் வந்தால் தானே வசந்தம் வரும்! அதுபோல் உழைப்போம்; இன்பம் பெறுவோம்!