இன்று உங்கள் நாள்! அதை வசப்படுத்தத் தயாரா?

நேற்று என்ன நடந்தது என யோசிக்காமல், நாளை நடப்பதை நினைக்காமல், "இன்று என்னுடைய நாள்; அதை வசப்படுத்துவேன்" என முடிவெடுங்கள்.
Tamil motivation story
Happy lifeCredits: AI Image
Published on

நித்தம் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழப் பழகுங்கள். எத்தனையோ சின்னச் சின்ன சந்தோஷங்கள் கொட்டிக் கிடக்கின்றன; கிடைக்கின்றன. அவற்றைக் கவனிக்காமல் ஓடிக்கொண்டிருக்க வேண்டாமே! நிறைய பேர் கிடைக்காத பதவி உயர்வு (Promotion), வாங்க முடியாத வீடு, வாகனம் வாங்கக் கிடைக்காத கடன் (Loan) பற்றியே கவலைப்பட்டு, மன அழுத்தத்திற்கு உள்ளாகி (Tension), கண்முன் உள்ள நல்ல வாய்ப்புகளைக் கடந்துவிடுகிறார்கள். வாடகை வீட்டையும் அரண்மனையாய் நினையுங்கள்; அங்கே மகிழ்ச்சி தங்கும். எல்லாமே வேண்டும் என நினைக்கிறோம்; ஆனால், அதை அடைவதற்கான பயணத்தில் நிகழ்காலப் பொக்கிஷங்களைத் தவறவிடுகிறோம்.

விழிகள் பார்த்துக் கொண்டிருந்தாலும், மனசு மூடிக்கொள்ளவும் செய்யும். அதற்கு அனுமதித்தால், கண்முன்னே தோகை விரிக்கும் மயிலின் அழகை ரசிக்கத் தவறிவிடுவீர்கள்.

ஏரிக்கரை நாணல் போன்ற வாழ்க்கையில், அந்தந்த இடங்களுக்கேற்ப வளைந்தும் நிமிர்ந்தும் செயல்பட்டால், நிகழ்காலம் பொற்காலம்தான். அதற்கு என்ன செய்ய வேண்டும்? "நேற்று என்ன நடந்தது என யோசிக்காமல், நாளை நடப்பதை நினைக்காமல், இன்று என்னுடைய நாள்; அதை வசப்படுத்துவேன்" என முடிவெடுங்கள்.

உதாரணமாக, காலை எழுந்து அலைபேசியைத் திறந்து வாட்ஸ்அப் (WhatsApp) பார்த்தால், பணிப்பெண்ணிடமிருந்து வந்த "அம்மா, எனக்குக் காய்ச்சல்; இன்று வர முடியாது" என்ற செய்தி மிரட்டும். பதற்றமடையாமல் (Tension ஆகாமல்) மாற்றி யோசியுங்கள்.

போர் வீரன் அவதாரமெடுத்து, துடைப்பத்தைக் கையிலெடுங்கள். உங்கள் கைவண்ணத்தில் தரையெல்லாம் பளபளக்கும். வீட்டின் ஒவ்வொரு அறையின் தரையைப் பாதம் தொடும்போதெல்லாம், மனதிற்குள் பனிக்கட்டியின் சில்லிப்பை உணர்வீர்கள். பாத்திரம் கழுவும்போது, சில பாத்திரங்களுக்குச் சில கதைகள் இருக்கும்; அவை நினைவுக்கு வந்து (Rewind ஆகி) உங்கள் பணிச்சுமையைக் குறைக்கும். இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாள் என்பதில் ஐயமில்லை.

பிரச்னையில்லாத வாழ்க்கை யாருக்குமே இல்லை. அது மலையளவோ, கடுகளவோ - எதிர்கொள்ளத் தயார்படுத்தி, செயல்படுத்தி முறியடியுங்கள். கிடைக்கும் அனுபவமே வருங்காலத்தில் வழிகாட்டும். துவண்டு முடங்குவதால் அந்தந்த நேர இன்பங்களை நழுவவிட்டுவிடுவீர்கள். வாய்ப்பு கூடத் திரும்பக் கிடைக்கும்; ஆனால், கடந்த காலம் வரவே வராது.

அந்தந்தப் பருவங்களைப் புரிந்து வாழுங்கள். சிறுவயதில் அதிகமாக விளையாடி, தேவையான அளவு படியுங்கள். வளர்ந்ததும் நிறைய படிக்க வேண்டும்; கொஞ்சமாக விளையாடினால் போதும். இளவயதுதான் வாழ்க்கையின் திருப்புமுனைப் பருவம்.

என்ன சொன்னாலும் உடல் கேட்கும்; சாதிக்க ஆசைப்பட்டுச் சோதனையைச் சந்திக்கும்போது தாக்குப் பிடிக்கும். அஸ்திவாரத்தைப் பலமாகவும் அழுத்தமாகவும் போட வேண்டும். சோம்பலுக்கு 'நோ என்ட்ரி' (No Entry) சொல்ல வேண்டும். அடுத்து, சம்பாதிக்கும் காலமும் திருமண பந்தமும் இணைந்த இல்லறத்தில், சளைக்காமல் உழைத்துத் தொடர் பயணம் செய்ய வேண்டும். மன அழுத்தம் சூழ்ந்தாலும், தினசரி நிதானமாக ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
"நான் யார்?" - இந்த கேள்விக்கு விடை தெரிந்தால் உங்கள் வாழ்க்கை ராயல் தான்!
Tamil motivation story

கடைசியாக, உடல் இயலாமையால் பாதிக்கப்படும் முதுமையில் பக்குவம் அவசியம். தினசரி காலை படுக்கையிலிருந்து எழும்போதே, உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ஏதாவது ஒரு உறுப்பு ஒத்துழைக்க மறுக்கும். "வயதாகிவிட்டது, வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்" என்று தட்டிக்கொடுத்தபடி நாளைத் தொடங்குங்கள். அந்த நாள் முழுவதும் மலர்ச்சி வாடாது.

நாளின் ஒவ்வொரு தருணமும் இறைவன் கொடுத்த வரம். எதிர்மறை (Negative) எண்ணங்களை அணுகவிடாமல், நேர்மறை அதிர்வுகளுடன் (Positive Vibration) வாழ்க்கையை(Happy life) ருசித்துக் கொண்டாடினால், நித்தம் 24×60 நிமிடங்களும் நமக்கு வசந்தம் வீசும் பொன்னாள்தான். ரசித்து வாழுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com