

மனித வாழ்க்கையின் சிறப்புக்கும் உயர்வுக்கும் அடித்தளம் அமைக்கும் உணர்ச்சிகளாக ஊக்கமும் உற்சாகமும் விளங்குகின்றன. இந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகப்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் உதவக்கூடிய சிந்தனைச் செயல்முறைகளை மனதில் கொள்ளவேண்டும். நிறையப் பணம் சம்பாதித்து வைத்துவிட்டால் மிகவும் ஆனந்தமாக வாழலாம் என்று நினைப்பது முற்றிலும் சரியானது அல்ல.
அப்பொழுது ஆனந்தத்திற்குப் பதிலாக மனத்துன்பமும் கஷ்டமும் வந்து சேரலாம். "ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பிறகு பணத்தால் மனிதனுக்கு ஒரு பயனுமே விளையாது வெறும் தற்பெருமையைத் தவிர" என்கிறார் ஆப்ரஹாம் லிங்கன்.
"உங்களைவிடப் பல மடங்கு அதிகமாகப் பணம் சம்பாதித்துக் குவித்தார்களே வழக்கறிஞர்கள்! அவர்களால் ஜனாதிபதி பதவியை விலைபேசி வாங்கிவிட முடியவில்லையே ஏன்? ஆனால் சேர்த்து வைத்து இருந்த நற்பெயரும் அதனால் விளைந்த புகழும் ஜனாதிபதி பதவியை உங்கள் காலடியில் விழவைத்துவிட்டது. பணத்துக்கு ஒரு குறிப்பிட்ட அளவுதான் சக்தி உண்டு என்பதை இப்போதுதான் நான் உணருகிறேன்" என்றார் திருமதி லிங்கன்.
நீங்கள் எத்தொழிலைச் செய்தாலும் உங்கள் நோக்கம் அந்தத் தொழிலின் மூலம் பெரும் புகழ் அடையவேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் தொழிலில் உங்களுக்கு ஆர்வமும் ஊக்கமும் தோன்ற முடியும்.
''என்னுடைய தொழிலாளிகளுள் அதிகம் உற்பத்தி செய்பவனை விட தனது உற்பத்தியைப் பற்றிப் பெருமைப்படுபவனைத்தான் நான் அதிகமாக மதிப்பேன்" என்றார் அமெரிக்கத் தொழிலதிபர்களுள் ஒருவரான ராக் பெல்லர்.
வெற்றி மேல் வெற்றி அடைந்து தன் சாம்ராஜ்யத்தை விரிவாக்கினான் நெப்போலியன். "இப்படி எல்லாம் அலைந்து திரிந்து நாட்டைப் பெருக்குகிறாயே. உன்னுடைய மறைவுக்குப் பிறகு இது உன்னுடையதாக இருக்கப்போவது இல்லையே? அதை அறிந்தாயா?" என்றார் ஒரு துறவி மாவீரன் நெப்போலியனைப் பார்த்து, அதைக் கேட்ட நெப்போலியன் கம்பீரமாகச் சிரித்தான். அது தெரியும் எனக்கு இந்த நாட்டை அமைப்பதில் நான் காட்டிய வீரம் இருக்கிறதே. அந்த வீரத்தினால் விளைந்த புகழ் இந்த உலகம் உள்ளளவும் என்னுடையதாகவே இருக்கும் அல்லவா?" என்று மிகுந்த பெருமிதத்துடன் பதில் உரைத்தான்.
ஒருவிதத் தகுதியும் இல்லாதவன் திடீரென்று உயர்ந்துவிட முடியாது. எந்தத் துறையில் நீங்கள் ஈடுபட்டு உழைத்துக்கொண்டு இருக்கிறீர்களோ அந்தத் துறையில் உங்கள் முயற்சிக்குக் கிடைக்கும் எதிர்பாராத வெற்றியாகத்தான் அந்தச் சந்தர்ப்பம் அமையுமே தவிர, கண்களை மூடிக்கொண்டு யாரை வேண்டுமானாலும் அதிர்ஷ்டம் கைதூக்கி விட்டு விடாது.
ஒவ்வொரு நாளும் ஒருவன் என்ன நினைக்கிறானோ அப்படியே அவன் வாழ முடியும்" என்கிறார் பேரறிஞர் எமர்ஸன். ஒருவனுக்கு வெற்றியை உண்டாக்குவதே அவன் எண்ணந்தானே! ஆகவே உங்களை நோக்கி உள்ள, இன்புற்று நல்வாழ்வு வாழ நினைக்கும் ஒவ்வொரு வரையும் நோக்கியுள்ள பிரச்னை-நல்ல நினைவை, பிறருக்குக் கேடு செய்யாத தூய்மையான நினைவை எப்படி நினைப்பது என்பதுதான்.
நல்ல நினைவுகளை நினைக்க ஆரம்பித்தால், உங்களை அணுகியிருக்கும் எல்லாவிதமான துயரங்களையும் ஒழித்து கட்டுவதற்குரிய வழி கண்டவராக நீங்கள் இருப்பீர்கள்.