

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்… என்ற வரிகளுக்கேற்ப அனைவருக்கும் அனைத்தும் கிடைத்து விடுவதில்லை. அப்படியும் சிலருக்கு சில வசதிகள் அனுகூலங்கள் கிடைக்கிறது.
பலருக்கு அது நிலைப்பதில்லை. கிடைத்தவர்களில் சிலர் அதை தக்கவைக்க தவறிவிடுகிறாா்கள். எல்லா வசதியும் இருந்தும் சிலரால் வேளாவேளைக்கு சாப்பிட முடிவதில்லை.
பசி எடுப்பவனுக்கு சாப்பாடு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் நேரம் சரியில்லை, ஜாதகத்தில் கட்டங்கள் கோளாறு, கிரகங்கள் அமைப்பு சாதகபாதகமாய் இல்லை, மனைவி சரியில்லை, கணவன் சரியில்லை, உறவுகளில் ஒற்றுமை இல்லை நல்ல நண்பர்கள் இல்லை, பிள்ளைகள் பிறந்த நேரம் சரியில்லை, இப்படி எத்தனை எத்தனை இல்லை. வாழ்க்கையில் மற்றும் பல இல்லங்களில் இதற்கெல்லாம் காரணம் நேரம் சரியில்லை என்ற ஒரேவரியில் தீா்வா? அதுகிடையவே கிடையாது.
நமது செயல்பாடுகளே அனைத்திற்கும் காரணமாகும். தெய்வ நம்பிக்கையோடு யாருக்கும் துரோகம் செய்யாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். நமது மனதில் உள்ள எதிா்மறை சிந்தனைகளை மூட்டை கட்டி வைத்திருக்கக்கூடாது.
நம்மால் முடியாதது எதுவும் இல்லை. முயன்று பாா்த்தால் எதுவும் கிடைக்காது என்பதே இல்லை எனலாம். முயற்சி செய்யாமலே அனைத்தும் எப்படி நம்மிடம் வந்து சேரும் என்ற கேள்வியும் பதிலும் நம்மிடமே இருக்கிறது. நம்மால் முடியாது என நினைத்தால் முடியாதுதான். முடியும் என நினைத்தால் முடியுமே! தராசு முள் சரியாக நேராக நிற்கிறது, தட்டில் வைக்கப்படும் பாரத்திற்கேற்ப அசைவுகள் ஏற்படுகிறது.
அதில் நாம் வைக்கும் பொருளைப்பொருத்தே சமநிலை அமைகிறது.
அதுபோலவே நல்ல எண்ணம் நல்ல ஒழுக்கம் பரந்த மனப்பான்மை அடுத்தவருக்கு உதவும் கொள்கை இருந்தாலே போதுமே! விடாமுயற்சியை விட்டு விடாதீா்கள். தன்னம்பிக்கையை தளரவிடாதீா்கள். எதிா்மறை சிந்தனையை வளரவிடாதீா்கள். நோ்மறை சிந்தனையை விலக்கிவிடாதீா்கள்.
அடுத்துக்கெடுக்கும் எண்ணத்தைக் கைவிடுங்களேன், கோபதாபம் தவிருங்களேன்! அனுசாிப்புத் தன்மையை கை கழுவிவிட வேண்டாம்.
ஆத்திரம் வரும்போது அடக்கி ஆளக்கற்றுக் கொள்ளுங்கள். கூடா நட்பை தேடிப்போகவேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடவேண்டாம். வாா்த்தைகளில் நிதானம் கடைபிடிக்க தவறவேண்டாம்.
நல்லதை நினையுங்கள், நல்லதையே செய்யுங்கள், பொதுவாக தாய் தந்தையர்கள் இருந்தால் உறவுகள் வளரும், சகோதரன் இருந்தால் தைாியம் வளரும், சகோதரிகள் இருந்தால் பாசம் மலரும், சம்பாத்தியம் இருந்தால் அனைத்தும் வரும், வேலை இருந்தால் மரியாதை வரும், மனைவி இருந்தால் பலம் கூடும், நண்பன் இருந்தால் நல்லதே நடக்கும்.
ஆனால் சொத்து பணம் இருந்தால் பதவி இருந்தால் மட்டுமே, அதைவிட ஹைலைட்டாய் அனைத்தும் வரும். இவை அனைத்தும் வரவேண்டுமென்றால் பணம் ஒன்றே பிரதானம் என்ற நிலைபாடு மனித மனங்களில் மெல்ல மெல்ல படர ஆரம்பித்துவிட்டது.
ஆக இல்லை என்ற மூன்றெழுத்தை மாற்றுவதும் பணம் என்ற மூன்றெழுத்துதான். மனிதநேயம் மரித்து விடவில்லை என்றாலும் மனிதமனங்கள் வெகுவாக மாறிவருவது கொஞ்சம் கூடுதலான வேதனையின் உச்சம் தொடுமோ என்ற ஐயப்பாடுகளுக்கு நமது நல் எண்ணங்களே மருந்தாகலாம்!