
உலகிலேயே மிகவும் புகழ் பெற்ற ஓவியம் என்றதும் உடனே நம் நினைவிற்கு வருவது லியனர்டோ டாவின்சி வரைந்த 'மோனலிசா' ஓவியம் தான். இப்போது இந்த ஓவியத்தை வாங்க வேண்டும் என்று நினைத்து கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் வாங்க முடியாது. ஏனெனில், இந்த ஓவியம் விலைமதிப்பற்றது. பிரான்ஸ் அரசாங்கம் இந்த ஓவியத்தை பாரம்பரிய பொக்கிஷமாக கருதுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மோனலிசா ஓவியத்தை லியானோர்டோ டாவின்சிக்கு வரைவதற்கு விருப்பமேயில்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? 1503 ல் ஆரம்பித்து 1516 ல் தான் இந்த ஓவியத்தை முழுமையாக வரைந்து முடித்தார் டாவின்சி. மோனலிசா ஓவியத்தை வரைந்து முடிக்க டாவின்சிக்கு 13 வருடங்கள் ஆகியிருக்கிறது. ஏனென்று கேட்டால் டாவின்சி Perfection மற்றும் Procrastinate ஆகிய இரண்டையும் கொண்ட மனிதர்.
1503 ல் டாவின்சி எந்த ஓவியமும் வரைய கிடைக்காமல் இருந்தார். அந்த சமயம் பிரான்ஸஸ்கோ(Francesco del Giocondo) என்பவர் தன்னுடைய மனைவியின் ஓவியத்தை வரைய சொல்லி அதற்கு பணம் தருவதாகவும் கூறியிருக்கிறார். அவருடைய மனைவியுடைய பெயர் Lisa del Giocondoஆகும். டாவின்சியும் சென்று அவர் மனைவியின் ஓவியத்தை வரைய தொடங்குகிறார்.
ஆனால், அதை ஆரம்பித்த நேரமா என்னவென்று தெரியவில்லை. அதிலிருந்து டாவின்சிக்கு நிறைய வேலைகள் வர தொடங்குகிறது. இவரை விட பெரிய பணக்காரர்களிடம் இருந்து வேலை வந்ததால் இதை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டார். தொடங்கியதை விடமுடியாமல் கிட்டத்தட்ட 13 வருடங்களாக மோனலிசா ஓவியத்தை வரைந்துக் கொண்டேயிருந்திருக்கிறார்.
அந்த நேரத்தில் பிரான்ஸ் நாட்டு அரசன் இதைப்பற்றி அறிந்து டாவின்சியை அந்த ஓவியத்தை சீக்கிரம் வரைந்து முடிக்கும் படியும் அதை தான் வாங்கிக் கொள்வதாகவும் கூறினார். அதற்கு பிறகே 13 வருடங்கள் கழித்து டாவின்சி மோனலிசா ஓவியத்தை 1516 ல் வரைந்து முடித்தார். இப்படி தான் உவகத்திலேயே பிரபலமான ஓவியம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இன்றைக்கு நாம் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கும் விஷயம், பிற்காலத்தில் மிகபெரிய விஷயமாக மாறக்கூட வாய்ப்புகள் இருக்கிறது!