

கடந்த காலத்தை மறந்து, எதிர்காலத்தைப் பற்றிய பயத்தைத் தவிர்த்து, இன்றைய தினத்தில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் கவலையை வென்று மகிழ்ச்சியாக வாழ முடியும். கவலைகளுக்கு முக்கிய காரணம் பயமே ஆகும். நாம் கொள்ளும் கவலைகளில் 40% கவலைகள் உண்மையானதே கிடையாதாம்; அதேபோல், 30% கவலைகள் ஏற்கனவே நடந்து முடிந்த ஒன்றைப் பற்றி நாம் சிந்தித்துக் கொண்டிருப்பதால் வருகிறதாம்; 10% கவலைகள் எதற்கென்றே தெரியாமல் வருகிறதாம்! இதை நான் சொல்லவில்லை, உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
எனவே, நம்மால் செய்ய முடிந்த காரியங்களை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். செய்ய முடியாதவற்றை நினைத்துக் கவலைப்படுவதை விடுத்து, நம்மால் செய்யக்கூடிய விஷயங்களுக்காக நம் சக்தியைச் செலவிடலாம். சில விஷயங்கள் மட்டுமே நம் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதையும், பல விஷயங்கள் நம் சக்திக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன என்பதையும் புரிந்து கொண்டாலே கவலைகள் தோன்ற வாய்ப்பில்லை.
"இல்லாதவனுக்கு இல்லையே என்ற கவலை; இருப்பவனுக்கு இன்னும் வேண்டுமே என்ற கவலை; கூடவே, இருப்பதைக் எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்ற கவலை!"
கவலைகளிலிருந்து முற்றிலும் விடுபட வேண்டும் (Overcome worry and live happily) என்றால், நம் வாழ்நாளின் கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டும் போல! மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப கவலைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் உறுதி—இன்னொருவரின் கவலை நமக்கு மகிழ்ச்சியை அளிக்காமல் இருந்தால் அதுவே போதுமானது.
கோபங்களையும் கவலைகளையும் எப்போதும் சுமந்து திரிய வேண்டாம். வாழும் ஒவ்வொரு நொடியையும் உண்மையாகவும் சந்தோஷமாகவும் கழிக்கக் கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நிமிடமும் அந்தந்த நேரத்தில் கிடைக்கும் சந்தோஷத்தை மனதில் ஏற்றிக்கொண்டே இருந்தால், கவலை என்பது தானாகவே காணாமல் போய்விடும்.
மலர்கள் உதிர்வதை நினைத்துக் கவலைப்படுவதில்லை; மலர்வதை நினைத்தே மகிழ்கின்றன. இது, நாம் வாழ்க்கையில் கவலைகளை விடுத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ஓர் அழகான தத்துவம். மலர்கள் எவ்வாறு தங்கள் குறுகிய ஆயுட்காலத்தை மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனவோ, நாமும் அவ்வாறே நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 'என்றாவது ஒருநாள் உதிர்ந்து விடுவோம்' என்று கவலைகொள்ளாமல், மலரும் தருணத்தை அவை முழுமையாக அனுபவிப்பது போல், நாமும் நமக்குக் கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தையோ அல்லது முடிந்துபோன விஷயங்களையோ நினைத்துக் கவலைப்படாமல் நிகழ்காலத்தில் வாழ பழக வேண்டும். மலர்கள் உதிர்வது முடிவல்ல; அது ஒரு புதிய தொடக்கத்திற்கான (விதைக்கான) அடையாளம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, இழப்புகளை எண்ணி வருந்துவதை விட, புதிய தொடக்கங்களைக் கொண்டாடுவது சிறந்தது!
வாடிவிடும் என்று தெரிந்தும், அவை பூக்கும் பொழுது தங்களின் முழு அழகையும் வெளிப்படுத்துகின்றன. அதுபோல், நாமும் எதிர்காலக் கவலைகளைத் தவிர்த்து, நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கப் பழக வேண்டும்.
உதிர்வது என்பது இயற்கையின் நியதி; அதை ஏற்றுக்கொண்டு, மீண்டும் மலரும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதே வாழ்வின் ரகசியம்! நாமும் மலர்களைப் போலவே எப்போதும் புன்னகையுடனும் தன்னம்பிக்கையுடனும் தேவையற்ற கவலைகளை வென்று, மகிழ்ச்சியுடன் வாழ முயலுவோமா நண்பர்களே!