
நம்முடைய வாழ்க்கையில் இந்த போராட்டமானது நாம் பிறந்ததற்கு அப்புறம் ஆரம்பிக்கவில்லை. தாயின் வயிற்றில் நாம் கருவாக உருவாகுவதிலிருந்தே தொடங்கி விடுகிறது. ஆம்!இலட்சக் கணக்கான விந்தணுக்களுடன் போராடிய பிறகு தான் நாம் உயிர் பெற்று கருவாக உருவாகிறோம். அதற்கு பிறகு அப்பப்பா... பத்து மாதம் வயிற்றுக்குள்ளே குழந்தையாக நாம் படும் போராட்டத்தை யாராலும் அறிய முடியாது. ஒரு குழந்தையாக கர்ப்ப பைக்குள் நாம் படும் கஷ்டத்தை கூற முடியாது. சுமக்கின்ற தாய்க்கும் புரியாது. குழந்தையை சுமக்கும் தாயோ தனக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் போராட்டங்களையும் பற்றியே அறிவாள்.
சரி, இதற்கப்புறம் வெளியில் வருகிறோம். நமக்கே நாம் ஆணா பெண்ணா என எதுவும் தெரியாது. வெளியில் வந்த பிறகு யார் நம்முடைய அம்மா அப்பா, நம்மை எப்படி அழைக்கிறார்கள் என்பதை எல்லாம் புரிந்து கொள்வதற்குள் ஒரு பெரிய போராட்டம் தான்...
அதற்குப்பிறகு நமக்கு தூக்கம் வரும் போது நம்மை தூங்க விட மாட்டார்கள். பெற்றோர்களின் சௌகரியத்திற்கேற்றவாறு தான் உறங்க வைப்பார்கள்.
அப்படி இப்படி என்று பல போராட்டங்களை சந்தித்து எப்படியோ ஒரு வருடம் ஆன பிறகு நடக்க முயறசிப்போம். அங்கே ஒரு போராட்டம்; விழுந்து எழுந்து நடப்போம். பேச்சு வருவதற்குள் ஒரு போராட்டம்.
பிறகு பள்ளி பருவம். நாம் இருக்கும் மாநிலத்தின் மொழியும் தாய் மொழியும் ஒன்றாக இருந்தால் பரவாயில்லை. இல்லை என்றால் வீட்டில் ஒரு மொழி, பள்ளிக் கூடத்தில் ஒரு மொழி பற்றாகுறைக்கு ஆங்கிலம் என மூன்று மொழிகளோடு ஒரு போராட்டம்.
அதற்கு பிறகு பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளி படிப்பிலும் கோச்சிங் வகுப்பிலும், விளையாட்டுத் துறையிலும் போட்டிகளோடு போராடும் பெரிய மகாபாரத யுத்த போராட்டம்.
இது முடிந்தவுடன் கல்லூரிக் காலத்தில் போராட்டம் இல்லையா? இருக்கு... இருக்கு... ரொம்பவே இருக்கு... படிப்பு, காதல் என பல்வேறு போராட்டங்கள். இந்த பருவத்தில் மனம் தன் போக்கிலே செல்லும். அதை கட்டுபடுத்தி வழிக்கு கொண்டு வர ஒரு போராட்டம்.
இதை எல்லாம் கடந்த பிறகு வேலை தேடும் போராட்டம். வேலை கிடைத்த பிறகு பதவி உயர்விற்காகவும் சம்பள உயர்விற்காகவும் போராட்டம்.
பிறகு திருமணம், குடும்பம் என போராட்டம் அதிகரிக்கிறது. வருடங்கள் போக போக நம்முடைய குழந்தைகள், அவர்களுடைய கல்வி எதிர்காலம் என போராட்டங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
கடைசியாக முதுமையான பிறகு முதுமையின் போராட்டம். உடம்பு தளர்ந்து மெலிந்து கண் தெரியாமலும் காது கேட்காமலும் மரணத்தை நோக்கி போராட்டம். கடைசி மூச்சிருக்கும் வரை போராட்டம். ஆமாங்க... கருவாக உருவாகுவதிலிருந்து சுடுகாட்டிற்கு செல்லும் வரை போராட்டம் தான்.