திருப்புமுனை - எல்லோர் வாழ்விலும் வரும் ஓர் நிகழ்வு. அது நம் வாழ்வையே தலைகீழாக்கும். சில ‘திடீர் திருப்புமுனைகளை’ (Sudden shocking turning points) எப்படி எதிர்கொள்ளலாம்? அதோடு பயணித்தால் என்ன ஆகும்? அந்தச் சூழ்நிலைகளில் என்ன பின்பற்ற வேண்டும்?
வாழ்க்கையின் திடீர் திருப்புமுனைகள்; அது வேலை இழப்போ, சொந்தபந்தங்களின் முறிவோ, உடல் நலம் சார்ந்த பிரச்னையோ அல்லது எதிர்பாராத சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்தக் காலகட்டத்தில் பல பூகம்பங்களை எதிர்கொள்வதுபோல நாம் உணரலாம். இந்தத் தருணங்கள் நம்மை வழக்கமான பாதையில் இருந்து வெளியேற்றி, நம்மை திசை திருப்பி, பாதிப்பை அதிகரிக்கின்றன.
இதுபோன்ற சூழ்நிலைகளில், நிகழும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பதற்கு பதிலாக, அதை ஒப்புக்கொள்ள பழக வேண்டும். காரணம் அதை மறுப்பதால் நம் நிதானத்தை இழப்போம். அதே நேரத்தில், ஏற்றுக்கொண்டால், தெளிவுக்கான பாதை நம் கண்ணில் படும். அந்தத் தருணத்தில் தூக்கமின்மை, பயம், கோபம் அல்லது குழப்பம் ஆகியவை இயற்கையாக வெளிப்படும். அவற்றைத்தான் முதலில் நெறிமுறைப்படுத்த வேண்டும்; இல்லையேல் நம் துயரத்தை மேலும் நீடிக்கச் செய்யும்.
நம் கவனத்தைச் சிதறவிட்டால்? இந்தக் காலகட்டங்களில் ஒருவர் கவனத்தை இழப்பது பொதுவானதுதான். ஆனால், கட்டுப்படுத்தப்படாவிட்டால் அது நாள்பட்ட மன அழுத்தம், தவறான முடிவெடுப்பது. பின் எல்லாம் சேர்ந்து உடல் ஆரோக்கிய பிரச்னைகளாகக்கூட மாறலாம்.
மூளையில் உணரப்படும் இந்தத் திடீர் உணர்ச்சி ஒருவரை தன் வாழ்வைப் பற்றி பயப்பட வைத்துவிடும்; அவரின் நினைவாற்றல், கவனம், பகுத்தறிவையும் பாதிக்கும். இது அவரின் வேலை, உறவுகள், சுயமரியாதையில் எதிரொலிக்கும். இறுதியில் பதற்றத்தை வரவழைத்து யாருமில்லாத உதவியற்ற தன்மையில் இருப்பதுபோல உணர வைக்கலாம்.
இயல்பான பாதைக்கு எப்படி திரும்பலாம்?
கட்டுப்பாட்டை மீண்டும் ஒருவர் பெற சிறிய சிறிய செயல்களுடன் தொடங்கலாம். காலை சரியான நேரத்தில் எழுந்திருப்பது, சிறிது நடைப்பயிற்சி செய்வது போன்ற எளிமையான வழிகளைப் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த சிறிய பழக்கவழக்கங்கள் மனதை அலைபாய விடாமல் நங்கூரமிட்டு ஒருவரின் இயல்பு நிலையை மீட்டெடுக்கின்றன.
நடந்த நிகழ்வை பொறுமையாக மறுபரிசீலனை செய்வது மற்றொரு சக்தி வாய்ந்த கருவியாகும். ‘இந்தத் திருப்புமுனை உங்களுக்கு என்ன சொல்ல வருகிறது’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இதன்மூலம் ஒருவரால் இதுவரை பார்க்காத புதிய சுவாரசியங்கள், ஆர்வங்கள் அல்லது வழிகளைக் கண்டுபிடிக்கக்கூடும்.
நம்மை சுற்றியுள்ள ஆதரவுகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம்பகமான நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது நிபுணர்களிடம் பேசுங்கள். உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது மனதில் புதைந்திருக்கும் உணர்ச்சி சுமையைக் குறைக்கிறது, முன்னேற வேண்டிய வழிகளையும் கொடுக்கிறது. இதோடு நினைவாற்றல், உங்களைப் பற்றிய தற்போதைய குறிப்பு (journaling), ஆழ்ந்த சுவாசம் போன்ற பயிற்சிகள் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தவும் கவனத்தைக் கூர்மைப்படுத்தவும் உதவும்.