

வாழ்க்கையில் சிலர் புறத்தோற்றம் அழகாக இருக்க வேண்டும். நம்மை மற்றவர்கள் பார்க்கும்போது, அவர்கள் நம்மை உயர்வாக பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் அந்த தோற்றம் வெறும் காகித மலர்கள் போன்றது. அதில் வாசம் இருக்காது. -Motivation article
உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் அகத்தோற்றம் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதே, உயர்வான வாழ்க்கைக்கு வலிமை தருவது. அதில் மலர்களின் ஒவ்வொரு இதழ்கள் போன்று, பல நல்ல நிலைகள் இணைந்து ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கும் எண்ணங்கள்தான் ஒரு மனிதனின் ஆகச் சிறந்த வாழ்க்கையாக இருக்க முடியும்.
ஒவ்வொருவருக்கும் உள்ளுக்குள் இருக்கும் தன்மையை பொறுத்தே, அவர்களின் மதிப்பீடு இருக்கும். பார்வையில் கனிவு வருவதும், கோபம் வருவதும் ஒவ்வொருவரின் உள்ளுணர்வின் வெளிப்பாடே. உள்ளத்தில் மனிதம் இருந்தால் அங்கே கனிவு தானாக பிறக்கும். அதுவே உள்ளத்தில் வன்மம் முளைத்தால், கண்களில் சினம் வெளிப்படும்.
வாழ்க்கையில், உழைப்பில் வாழவேண்டும் என்ற தன்மானத்தோடு கூடிய நல்ல எண்ணங்கள் மனதில் தோன்றினால், வாழ்க்கை உயரும். அதுவே மனதில் கட்டுப்பாடு இல்லாமல், எப்படி வேணும்னாலும் வாழலாம் என்று நினைத்துவிட்டால், வாழ்க்கை திக்கு திசை தெரியாமல் போய்விடும்.
வாழ்க்கையில் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவரின் மனதில் பசுமரத்தாணி போல் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் மனம் இருந்தால் மட்டுமே, தனக்கு எந்த நிலை வந்தாலும், ஒருபோதும் தாழ்நிலைக்கு மனம் நினைத்து கூடப் பார்க்காது. அதுவே எப்படியும் வாழ்வது என்று மனம் முடிவு செய்து விட்டால், அங்கே சுயகெளரவம் அழிந்து போகும்.
ஆகவே வாழ்க்கையில் புறத்தோற்றம் எளிமையாக இருந்தாலும், அகத்தோற்றம் மாசு படியாமல் இருந்தால், அதுவே புறமும் சிறந்து உங்களை உயர்வாகக் காட்டும். ஆகவே உங்களுடைய எண்ணமும் செயலும் சிறப்பாக அமையுங்கள். மற்றவர்கள் உங்களை எவ்வளவு மதிப்போடு பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கை என்பது தெளிந்த நீரோட்டம்போல் இருக்கவேண்டும். அப்போது உங்கள் முகம் அகத்திலும், புறத்திலும் சிறந்து விளங்குகிறது என்பதை மற்றவர்கள் பார்க்கவும், உணரவும் முடியும்.
வாழ்க்கையில் அகம் எவ்வளவு தூய்மையாகவும் தெளிவாகவும் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில், உள்ளத்தில் புதுப்புது சிந்தனைகளும் ஆக்கப்பூர்வமான எண்ணங்களும் ஊற்றெடுக்கும். மகிழ்ச்சி என்பது மனித வாழ்க்கையோடு பயணம் செய்வது. ஏனெனில் மகிழ்ச்சி என்பது இறந்த காலமும் அல்ல. எதிர்காலமும் அல்ல. அது நிகழ்காலத்தின் வரம்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எப்படி எல்லாமோ வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது மனித இயல்பு. அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் சில அடிப்படை தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் முதலில் தன்னுடைய நேர்மையில் பற்று உள்ளவராக இருத்தல் அவசியம். நேர்மை இருக்கும் இடத்தில்தான் நேர்மறை எண்ணங்கள் சிறப்பாக செயல்படும்.
ஒவ்வொரு தனிமனிதனும் தனது அகத்திலும் புறத்திலும் தவறுகள் செய்யாமல், மனசாட்சியோடு வாழும் போதுதான், அவனுக்கு சகலமும் கிடைக்கும். அப்படி இல்லை என்றால், நல்ல வாழ்க்கை கானல் நீராகவும் வெற்றிப் பயணம், வெறும் வெற்றுப் பயணமாகவும் மாறும்!