
சாதாரணமாக, வீட்டருகில் சிறுவர்கள் பொழுதுபோக்கிற்காக கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் கைகளில் கையுறை கால்களுக்கும், பேட் கட்டியிருக்க மாட்டார்கள். ஒரு மட்டையும் ஒரு ரப்பர் பந்தும் கொஞ்சம் இடமும் இருந்துவிட்டால் போதும். காரணம் அது வெறும் பொழுதுபோக்கு. அங்கே விளையாடும் அத்தனை சிறுவர்களுமே, அப்படிப்பட்ட மனநிலையுடன்தான் விளையாடுவார்கள்.
அதே கிரிக்கெட் விளையாட்டினைக் கொஞ்சம் 'சீரியஸ்' ஆக எடுத்துக்கொண்டு விளையாடுபவர்களும் இருக்கிறார்கள்.
அதிக விலை கொடுத்து மட்டை தேர்வு செய்து கையுறைகள், காலுக்குப் பேடுகள் தவிர இன்னும் தலைக்குக் கவசம், உயிர் ஸ்தானம் காக்க 'அப்டமன் கார்ட்' என்று கூடுதல் உபகரணங்களுக்குப் பணம் செலவழிக்கிறார்கள்.
அவர்கள் விளையாடும்போதும், அதில் ஒரு ஒழுங்கும் நேர்த்தியும் தெரியும். அதிக கவனத்துடன் விளையாடுகிறார்கள்.
இதற்கு அடுத்த கட்டம் அது தொழில்முறை விளையாட்டு. அப்படி விளையாடும் வீரர்கள் டெண்டுல்கர், கோலி போன்றவர்களைத் தெரியாமல் இருக்க முடியாது.
தலைக் கவசம் போன்றவை தவிர, முழங்கைக்கு தோள்பட்டைக்கு என்று இன்னும் கூடுதலான தற்காப்பு உபகரணங்களை அணிந்து கொள்கிறார்கள்.
இவ்வளவையும் அணிந்து கொண்டாலும், இலகுவாகவே விளையாட வேண்டும் என்பதற்காக, அந்த உபகரணங்கள் எல்லாம் எடையின்றி அதே சமயம் உறுதியானவையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தேர்வு செய்கிறார்கள்.
இப்படி உயர்ந்த தயாரிப்பு மட்டுமில்லை. விளையாடும் போதும் அவர்களிடம் மிக அதிக நேர்த்தி வெளிப்பட்டாக வேண்டும். மூன்று கட்டங்களிலும் செய்நேர்த்தி கூடிக்கொண்டே போவதைக் காண்கிறோம். வெற்றி பெற வேண்டும் என்கிற தாகம் அவர்களிடம் அதிகமாகிக்கொண்டே போகும். அதே நேரம் எதிர்ப்பும் அதிகமாகிக்கொண்டே போகிறது.
எதிரணியில் விளையாடுபவர்கள் திறமை. கவனம், ஆசை எல்லாம் அதிகம். அதனால் வெற்றி பெறுவது கடினமாகிறது. சூழ்நிலை சிரமமாகிறது. நம் பக்கத்து வீட்டுப் பையன் வீசும் பந்தினை விளாசுவதற்கும், பாகிஸ்தானின் 'ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ்' என்று செல்லமாக அழைக்கப்படும் சோயப் அக்தர் வீசும் பந்தினை எதிர்கொள்வதற்கும் வித்தியாசமிருக்கிறது.
முன்னேற வேண்டுமெனில், நம்மை வலுவானவர்களாக கொள்ள வேண்டும். காரணம் போட்டி அப்படி, சூழ்நிலை அப்படி .
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு, தெருவில் கிரிக்கெட் விளையாடுவதற்கான மன நிலையும், அதற்கான தயாரிப்பும் இருந்தால் போதாது. தொழில்துறை விளையாட்டு வீரர்கள் காட்டும் அக்கறை, பயிற்சி, முயற்சி, தீவிரம், முனைப்பு, கவனம், எல்லாம் வேண்டும். அவர்கள் உபகரணங்கள் தேர்வு செய்து ஆடுகளம் எப்படி என்பதைக் கணித்து, எதிரணியினர் எப்படி என்று ஆராய்ந்து, அதற்கு ஏற்ப மாற்றி ஆடுவதுபோல முன்னேற விரும்புபவர்களும் நுண்ணிய பார்வையும், தேர்ந்த செயல்பாடுகளும் உடையவர்களாக மாற வேண்டும்.
அப்படிச் செய்யும்போது வெற்றியைத் தவறவிடவே முடியாது. வெற்றியை நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும்.