
நாம் பள்ளிக்கு குழந்தையை அனுப்பவேண்டும் என்றால் அதற்கான சீருடை, வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ், புத்தகப்பை எல்லாவற்றுக்கும் மேலாக கல்வி கட்டணம் போன்றவற்றுக்கு தயாராக நாமும் இருக்க வேண்டும். குழந்தையையும் சீர்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் குழந்தையால் கல்வியை எந்தவித தடையும், தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் பயிலமுடியும்.
பல மருத்துவர்கள் இருந்தாலும் ஒரு சிலரைத்தான் நோயாளிகள் அடிக்கடி நாடிச் செல்வர். காரணம் கேட்டால் அவர் கைராசிக்காரர் என்பார்கள். அல்லது அவர் பேசும்போதே நமக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திவிடுவார் என்று கூறுவார்கள். அதனால் அவரிடம் செல்கிறோம் என்று கூறுபவர்களை பார்த்து இருக்கிறோம்.
அதேபோல் வீதிக்கு பல கடைகள் இருந்தாலும் சில கடைகளில் தான் வியாபாரம் எப்பொழுது நடந்து கொண்டிருக்கும். பல ஆசிரியர்கள் இருப்பினும் சிலரிடம் அடிக்கடி கேள்வி கேட்கவோ, நம்முடைய தவறுகளை திருத்திக்கொள்ளவும், விளக்கம் கேட்கவும் செல்வதுண்டு. எல்லாவற்றுக்கும் காரணம் என்னவென்று பார்த்தால், அவர்கள் நம் மனநிலையை அறிந்து புதிய வழிகாட்டியாக உதவுவதுதான் முக்கியமாக கருதப்படுகிறது.
ஒரு மிகப்பெரும் தொழிற்சாலையில் பல நூறு தொழிலாளர்கள் பணியாற்றலாம். ஆனால் நிர்வாகம் அந்த தொழிலாளர்களின் உழைப்பு, செயல்திறன் ஆகியவைகளை கொண்டுதான் தொழிலாளர்களை எடை போடுகின்றது.
நேர்மையான உழைப்பை மூலதனமாகக் கொண்டு தொழிலாளியாக சேர்ந்த ஒருவன் தொழிலாளர்களை வேலை வாங்கும் மேற்பார்வையாளனாக நியமிக்கப் படுவதும் உண்டு. புதிய சிந்தனையை தங்கள் தொழிலில் புகுத்த முனையாதவர்களாலும், கிடைத்தது போதும் என்று திருப்தி படுபவர்களாலும் முன்னேற முடியாது.
முன்னேறுவதற்கு சில தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுவும் பொது வாழ்க்கைக்கு வர துணிபவர்கள் கட்டாயமாக நடை, உடை, பாவனை, இலக்கியம் ,பொது அறிவு, பேச்சுத் திறமை என்று அனைத்திலும் ஈடுபாடுகாட்ட வேண்டும். அவைகளைத் தேடிச் சென்று கற்று வர வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு என்று ஒரு மரியாதை கிடைக்கும். எந்த இடத்திலும் தலைகுனியாமல் வரும் விமர்சனங்களை எதிர்கொண்டு பதிலளிக்க முடியும்.
அப்படித்தான் பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும் என்று லிங்கன் முடிவு செய்ததும் பேசிப் பழகவேண்டும் என்பதற்காக ஏழெட்டு மைல் தூரம் நடந்து சென்று வல்லுனர்களின் பேச்சுக்களை கேட்டு வந்தார். இலக்கணம் படிப்பது பற்றி பக்கத்தில் குடியிருந்த ஆப்ரகாம் ஆசிரியரிடம் ஆலோசனை கேட்டு, ஆறு மைல் தொலைவில் இருந்த ஒருவரிடம் அந்த இலக்கணப் புக்கை கடன் வாங்கிப் படித்தார்.
சட்டம் படிக்க வேண்டும் என்று மற்றவர்கள் கூறிய போது வெறுங்காலுடன் மரங்களின் கீழே அமர்ந்து கொண்டு சட்ட புத்தகங்களை படிக்கலானார். அவருடைய நண்பர்கள் அவரை சட்டசபை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்திய பொழுது, அவருடைய எதிரிகள் அவரை கேலி பண்ணினர். தேர்தல் சொற்பொழிவு நிகழ்த்தும் பொழுது அவர் அணிந்திருந்த உடைகள் சிறியதாக இருந்ததால் உட்கார்ந்தால் கிழிந்து விடுமோ என்று அஞ்சி அவர் உட்காரவில்லையாம்.
சட்டசபையில் சிறிது கம்பீரமாக தோற்றம் அளிக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி ஒரு புதிய உடை தைத்துக் கொண்டார். ஊர்திகளில் செல்ல கையில் காசு இல்லாததால் 100 மைல் நடந்து சென்று சட்டசபை கூட்டத்திற்கு ஆஜரானார் என்று ஆபிரகாம் லிங்கன் லட்சியத்தை அடைய அதற்காக ஏற்றுக்கொண்ட துன்பங்களையும், அந்த லட்சியத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆபிரகாம் லிங்கனின் விடாமுயற்சி ,லட்சியத்தில் மீதுள்ள பற்றும் இன்றும் உலகளவில் பேச வைத்திருக்கிறது. அதுபோன்று ஒரு மனிதன் செய்கின்ற பணியில் தீவிர நம்பிக்கை இருக்க வேண்டும். ஏற்றுக்கொண்ட பணியில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற ஆவலும், எடுத்த காரியத்தை முடித்துக்காட்ட வேண்டும் என்ற வெறியும் உள்ளத்தில் ஒளிவிட, அந்த ஒளியானது முன்னேற்றப் பாதையாகி அவர்களுக்கு மலர் பாதையாக வழிவிடும் என்பதில் ஐயமில்லை.
ஒவ்வொரு வெற்றியும் ஒரு பரிசு!
ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்!
ஒவ்வொரு விடியலும்
ஒருபுதிய பாதைக்கான வாய்ப்பு!