நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையுமே பல போராட்டங்கள் நிறைந்தது. இதன் முக்கியமான பகுதிகள்தான் நாம் சந்திக்கும் சவால்கள், துன்பங்கள், தோல்விகள், அவமானங்கள் எல்லாமும். இவை நம் மன வலிமையை சோதித்து வலிமைபடுத்தும் வல்லமைப் பெற்றவை. இதை நாம் உணர்ந்து எதிர் நீச்சல் போட்டு வாழப்பழகுதல் நல்லது. இது நமக்கு ஏற்படும் மனச்சோர்வினை தடுக்கும் அல்லது குறைக்கும். இந்த போராட்டங்கள் இல்லாமல் நமது வாழ்க்கை வெற்றிகரமாக அமையாது.
நம் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் தான் நம் வாழ்வினை அழகுபடுத்தும். அந்த துயரமான நேரங்களில்தான் நாம் நமது உண்மையான உறவுகளை அறிந்து கொள்ளவும், புரிந்து கொண்டு செயல்படவும் முடியும்.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலும் நம்மை வலிமைமிக்கவர்களாக்கும். அதுவே நம் வாழ்வில் எதிர்காலத்தில் பெரிய வெற்றிக்கு அடித்தளம் போடும்.
நாம் வாழ்கையில் அனுபவிக்கும் தோல்விகள் நம்மை காயப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளை நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடங்களாக பார்க்க வேண்டும்.
வாழ்வில் போராட்டம் என்பது நமக்கு மட்டும் வருவதில்லை. எல்லோருக்கும்தான் வருகிறது. போராட்டமில்லாமல் வாழ்பவர் எவரும் இவ்வுலகில் இல்லை என்ற உண்மையை நாம் புரிந்து கொண்டு மன அழுத்தம் இல்லாமல் வாழப்பழக வேண்டும். போராட்டமோ, தோல்வியோ இல்லாமல் எவர் வாழ்க்கையிலும் சாதனைகள் சாத்தியமில்லை.
நம் மனதில், 'ஏன் எனக்கு மட்டும் இப்படி என்று நிகழ்கிறது?' என்னும் எண்ணம் தோன்றலாம். ஆனால் உலகத்தில் எல்லோருக்குள்ளும் இந்த எண்ணம் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதான் உண்மை. சிலர் வெளியே புலம்பிக் கொட்டித் தீர்ப்பார்கள். சிலருக்கு சிரிப்பினால் தம் துயரங்களை கடக்கும் திறமை இருக்கும். அதுதான் நமக்குள் அடிப்படையில் இருக்கும் வியத்தகு வேறுபாடு ஆகும்.
நம் ஒவ்வொருவரது வாழ்க்கைப் பயணமும் தனித் தனி பின்புலத்தைக் கொண்டவை. நமது போராட்டம் நமது வெற்றிகளை மீள்நோக்கிப் பார்த்து புன்னகை செய்யும் நாள் விரைவில் வரும். இந்த தன்னம்பிக்கை நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியம்.
இப்போது சந்திக்கும் துயரங்களை நினைத்து அழுதாலும்… நாளைய வெற்றியில் அந்தக் கண்ணீர் மறைந்து ஒரு நாள் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி மலரும். "நாளைய மகிழ்ச்சி நிமிடம், இன்றைய நம் போராட்டத்தின் பரிசு" என்பதை உணர்ந்து நம் கதையை நாமே எழுதப் பழக வேண்டும். ஒருநாள் நாம் வெற்றி பெற்றதும், நம் வெற்றிக்கதையை இவ்வுலகமே பேசும் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.
இன்றைய போராட்டமே நாளைய நமது வெற்றியின் அடித்தளமாகும். இனியாவது இதை உணர்ந்து வாழ்வோம். வாழ்க்கையை இனிமையாக்குவோம்.