என்னதான் சிலர் ஊக்கமளிக்கும் (Motivation) கட்டுரைகள், கதைகளைப் படித்தாலும் அவர்களால் அந்த ஊக்கத்தை ஏன் அடுத்தடுத்த நாட்கள் கொண்டு செல்லமுடிவதில்லை? அவர்களுக்கு இதையும் தாண்டி என்ன தேவைப்படுகிறது?
ஊக்கமளிக்கும் மேற்கோள்கள்(Quotes), கட்டுரைகள் அல்லது கதைகளைப் படித்தபிறகு பலர் தங்களை ஊக்கப்படுத்திகொள்கிறார்கள். ஆனால், இந்த உணர்வு பெரும்பாலும் சிலருக்கு விரைவாக மறைந்துவிடுகிறது. இது அவரவரின் குணநலன்களில் (character) உள்ள வேறுபாடாக ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் இந்த ஊக்கம் அவர்களின் வாழ்வில் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
நிரந்தர மனநிலையைப் போலல்லாமல் ஊக்கம் என்பது ஒரு தீக்குச்சியில் ஒளிரும் நெருப்பு போன்றது. அது நமது உணர்ச்சிகள், சூழல், உள் நம்பிக்கைகளால் அவ்வப்போது வேறுபடுகிறது. ஆரம்பத்தில் தற்காலிக உத்வேகத்தை நமக்குத் தூண்டலாம்; ஆனால், அதை எவ்வாறு கொண்டு செல்லவேண்டும் என்ற விடையை நாம் பெறுகிறோமா? என்பதில்தான் மொத்த விடையுமே மறைந்துள்ளது.
மனச்சோர்வு தொடர்வதற்கான காரணம் (Hidden Causes of Continued Demotivation):
மனச்சோர்வு பெரும்பாலும் நமக்குச் சாதாரணமாக தோன்றும் சில விஷயங்களிலிருந்துதான் உருவாகிறது. நம் இலக்குகள் தெளிவற்றதாகவோ அல்லது நம்பத்தகாததாகவோ(unrealistic) இருக்கும்போது நம் கவனத்தைச் சற்று சிரமப்படுத்திவிடும். ஊக்கத்துடன் செயல்படும்போது சில நேரங்களில் நாம் புறக்கணிக்கும் ஓய்வுகூட மனச்சோர்வை அதிகரித்து; லட்சியங்களைத் தொடர தேவையான சக்தியைக் குறைக்கலாம்.
தோல்வி பயம் அல்லது இது சரியானதாக இருக்குமா? என்ற அழுத்தம், ஒரு விஷயத்தைத் தள்ளிப்போட வைக்கலாம் அல்லது தவிர்ப்பதற்குக்கூட வழிவகுக்கும். கூடுதலாக, ஒருவர் தன் தேர்வுகள் மீது நம்பிக்கை (choices) இல்லாமல் இருப்பது அல்லது சுற்றி எதிர்மறை தாக்கங்களால் (negative influences) சூழப்பட்டிருப்பதாக உணரும்போது அவர்களின் உற்சாகம் இயல்பாகவே குறைகிறது. இதனால் ஒருவர் பெற்ற ஊக்கமும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.
ஊக்கத்தைத் தக்க வைக்க வேண்டுமா?
நீங்கள் பெற்ற ஊக்கத்தை நீண்ட காலத்திற்கு தக்கவைக்க வேண்டுமா? அப்போ நீங்கள் வெளிப்புற உத்வேகத்தைச் சார்ந்திருப்பதைவிட, உங்கள் சொந்த பழக்கங்களை மெருகேற்றிக்கொள்வது உங்களுக்குப் பயனைத் தரும். அதற்கு சிறிய, தெளிவான இலக்குகளை (small, clear goals) முதலில் நிர்ணயுங்கள். தினசரி ஏன் இந்த விஷயங்கள் முக்கியம் என்பதை நீங்களே நினைவு படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் தினசரி வழக்கத்தை (daily routines) மாற்றியமைத்துக்கொள்வதும், சில நேரங்களில் உங்கள் கவனத்தை திசை திருப்பாமல் பார்த்துக்கொள்கிறது.
ஆதரவான நபர்களை உங்களைச் சுற்றி வைத்துக்கொள்ளுங்கள். சில நேரங்களில் திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காதபோது உங்களுக்கு நீங்களே ஆதரவாக இருங்கள். இறுதியில் இந்தப் போக்குகள் (routines) நீங்கள் பெற்ற ஊக்கத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதை அடுத்தடுத்து தொடரவும் உதவுகின்றன.
உங்கள் உள்ளார்ந்த சக்தி:
ஊக்கத்தைத் தக்கவைக்க மிகவும் தேவையான ஒன்று உள்ளார்ந்த சக்தியாகும் (intrinsic strength). நீங்கள் தீர்மானித்த இலக்குகள் உங்கள் தனிப்பட்ட அடையாளத்துடன் (personal values) சேரும்போது, அதற்காக செயல்படுவதற்கான உந்து சக்தி இயற்கையாகவே உங்களிடமிருந்து வெளிப்படும். இது இனி உங்களை முன்னோக்கி நகர்த்தத்தான் செய்யுமே தவிர, உங்களைப் பின்னோக்கி நகர்த்தாது. இறுதியில் உங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் உங்களிடம் கொண்டு சேர்த்து விடும்.