
சோதனைகள் வராத வாழ்க்கையில் ஒரு சுவாரசியமே இருக்காது. பிரச்சனைகள் வந்தால்தான் அதற்கு தீர்வுகளை கண்டுபிடிப்பதும் முன்னேற்ற பாதையில் செல்வதுமாக இருக்க முடியும். எந்தவிதமான சோதனையும் இல்லாமல் நம்மால் மகிழ்ச்சியாக இரண்டு நாட்களைக் கூட கடக்க முடியாது.
ஏனென்றால் பிரச்சனைகள்தான் வாழ்வில் ஒரு குறிக்கோளை உருவாக்கும். வாழ்வில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தும். வாழ்வதற்கான ஒரு அர்த்தத்தை உண்டு பண்ணும். வலிமையான மனிதன் என்பவன் மிகப்பெரிய சோதனைகளை கடந்துதான் வந்திருப்பான். அதனால் வாழ்வில் எதிர்ப்படும் சோதனைகள் அனைத்தும் நன்மைக்கே.
நல்லவர்களையோ நிறைய சோதிப்பான். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக கொடுப்பதுடன் கடைசிவரை கைவிடாமல் கை தூக்கி விடுவான். இதன் உண்மையான அர்த்தம் நல்லவர்களை ஆண்டவன் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் வலிமைப்படுத்தி சாதிக்க வைப்பான் என்பதே.
சோதனைகள் நன்மைக்கே. பொன்னை உருக்கித்தான் அணிகலன்கள் செய்ய முடியும். அடித்து துவைத்த வேட்டிதான் வெண்மையாகும். வளைத்த மூங்கில்தான் பல்லக்காக மாறும். உலகில் சோதனையே சாதனையைத் தரும்.
சோதனைகள் எவ்வளவு வந்தாலும் அவற்றை சந்திக்கும் மனப்பக்குவம் தேவை. வாழ்வில் சோதனைகள் வரும் பொழுது எல்லாம் நன்மைக்கே என்று நேர்மறை எண்ணங்கள் கொண்டு அவற்றை எதிர்கொள்ளும் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் கொள்ள வேண்டும். நாம் இவ்வுலகில் வாழும் காலத்தில் அனைவரிடத்திலும் அன்பாகவும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும். அவ்வாறு வாழும்பொழுது எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் அதனை எதிர்க்கொண்டு சிறப்பாக வாழ இறைவன் துணை இருப்பான்.
சோதனை என்பது நம்மை நாமே மதிப்பீடு செய்து கொள்வதற்கான வாய்ப்பாகும். சிலர் சோதனை ஏற்பட்டால் அப்படியே இடிந்து உட்கார்ந்து விடுவார்கள். எல்லாம் கைமீறி போய்விட்டதாக எண்ணுவார்கள். அவற்றை நினைத்து புலம்பிக்கொண்டு நேரத்தை வீணடிப்பார்கள். ஆனால் சிலர் மட்டுமே சோதனைகளை மாற்றி சாதனை புரிபவர்களாக திகழ்வார்கள். வாழ்வில் சோதனைகள் ஏற்படும்போதுதான் அதனை சமாளிப்பதற்கான சக்தியை பெறுகிறோம்.
சோதனைகளால் ஏற்படும் இடையூறுகளையும், பிரச்னைகளையும் தகர்த்து முன்னேறும் வாய்ப்பைப் பெறுகிறோம். நிலைகுலைந்து விடாமல், துவண்டு விடாமல் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி வெற்றி பெறுகிறோம்.
சோதனை காலத்திற்குப் பின்பு வசந்தகாலமும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்வில் எதுவுமே நிரந்தரமல்ல; மாற்றம் ஒன்றே மாறாதது. எண்ணங்கள் மாறும். கவலைகள் மாறும். காட்சிகள் மாறும். நமக்கு ஏற்படும் சோதனைகளும் மாறி நல்ல நிலையை அடைவோம் என்ற திடமான நம்பிக்கை கொள்வது நல்லது. நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை மறக்கவேண்டாம். சோதனை ஏற்படும் காலங்களில் மனஉறுதியை இழக்காமல் இருந்து இதுவும் கடந்து போகும் என்று எண்ணி வாழ்வதே சிறந்தது.
சோதனைகள் நன்மைக்கே என்றுணர்ந்து சோர்ந்து போகாமல் இருப்பதும், மனதைரியத்தை இழக்காமல் இருப்பதும் அவசியம். நல்லதே நடக்கும் என்று அமைதி காக்கவும். சோதனைகள் நம்மை வேதனைப்படுத்தி வேடிக்கை பார்ப்பதற்கல்ல சாதனை புரியவைக்கவே ஏற்பட்டது என்று எண்ணுவது சிறப்பு.