
நான் வாழ்ந்து காட்டுகிறேன் பார் என்று சொல்லிக் கொண்டு பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படி வாழும்போது அவர்கள் தங்களுக்காக வாழாமல் பிறருக்காகத்தான் வாழ்கிறார்கள் என்பதை அறியத் தவறிவிடுகிறார்கள். பிறருக்காக வாழ்கின்ற வாழ்க்கையில் தங்களுக்காக வாழ்கின்ற நிலை போய், மற்றவர்கள் பாராட்ட வேண்டும், உயர்த்திப் பேச வேண்டும், பெருமைப்பட வேண்டும், பொறாமைபட வேண்டும் என நினைக்கிறார்கள்.
தங்களை அலட்சியப்படுத்தியவர்கள் எல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைக்கிறார்கள்.
இப்பேர்ப்பட்ட ஒரு எதிர்பார்ப்பதின் விளைவு, தாங்கள் வாழவேண்டிய அரிய, அற்புத வாழ்க்கையை வாழாமல் தங்களைத் தாங்களே ஏமாற்றிப் கொள்கிற ஒருவித மாய. வலைக்குள் தங்களை அறியாமல் சிக்க வைத்துக் கொள்கின்றனர். இதனால் தங்களுக்குத் கிடைத்திருக்கின்ற இந்த அற்புத உலக வாழ்க்கையை பறிகொடுத்து விடுகின்றார்கள்.
யாரும் யாருக்காகவும் வாழ்ந்து காட்டவேண்டும் என்று மனநிலையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளக் கூடாது. அவரவர் அவரவருடைய வாழ்க்கையை தனக்காக வாழ வேண்டும். தன்னுடைய வாழ்க்கையின் அனுபவத்தை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும். நாம் வாழ்ந்து காட்டித்தான் மற்றவர்கள் அதைப்பார்த்து வாழவேண்டும் என்பது அல்ல. அவரவர் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தாலே காரியங்கள் முறையாக நடக்கும்.
ஒருவர் தன் வாழ்க்கையை முறையாக முழுமையாக வாழ்ந்தால்தான் பிறரையும் வாழவைக்க முடியும். தான் வாழாமல் பிறரை வாழவைக்க முடியாது. தான் வாழ்ந்தால்தான் பிறரை வாழவைக்க முடியும். நாம் முழுமையாக வாழ்கிறோமா இல்லையா என்பதை ஒவ்வொருவரும் தங்களைத்தானே "நான் என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேனா" என்ற கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். இதை ஒருமுறை கேட்டால் போதாது, தேவைப்படும் போதெல்லாம் அடிக்கடி நம்மை நாமே இக்கேள்வியைத் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
அப்போதுதான் தெளிவான விழிப்புணர்வு விழிப்படைய ஆரம்பிக்கும். ஒவ்வொருவரும் தெளிவான விழிப்புணர்வு பெற்றால் நாமும் வாழ்ந்து மற்றவரையும் வாழ வைத்தது, வாழ வழி வகுத்துக் கொடுத்திடவும் முடியும்.