
இந்த உலகத்தில் நாம் என்னதான் நல்லது செய்தாலும் அதை பாராட்ட நான்கு பேர் இருப்பதுப்போல குறை சொல்லவும் நான்கு பேர் இருப்பார்கள். அதை எண்ணிக் கவலைப்பட்டு நாம் செய்யும் நல்ல செயல்களை நிறுத்துவது சரியாகாது. ஏனெனில், குறைக் கூறுபவர்கள் யாரும் நமக்கு ஒரு பிரச்னை வரும்போது வந்து நின்று உதவப்போவதில்லை. இதை தெளிவாகப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் அச்சுதன் என்றொருவர் வாழ்ந்து வந்தார். அச்சுதன் மிகவும் நல்லவர், நேர்மையானவர், இனிமையாக பேசக்கூடியவர், உதவும் மனம் படைத்தவர். இருப்பினும், அவருடைய மனதில் வெகுக்காலமாக ஒரு குறை இருந்து வந்தது.
அந்த குறை என்னவென்றால், ‘என்னதான் அவர் நல்லது செய்தாலும் அதை சிலர் புரிந்துக்கொள்வதில்லை. எவ்வளவு உதவி செய்திருந்தாலும் சூழ்நிலைக் காரணமாக ஏதேனும் உதவ முடியாத சமயத்தில் நண்பர்களே இவரிடம் முகத்தை காட்டுகிறார்கள்.
இவருடைய குழந்தைகளுக்கும், மனைவிக்கும் இவர் நேர்மையாக இருப்பதால்தான் தாங்கள் கஷ்டப்படுவதாக ஒரு எண்ணம் உண்டு’ என்பது அச்சுதனின் கவலையாக இருந்தது. அச்சுதனுக்கு மனதில், ‘நாம் எவ்வளவு நல்லது செய்தாலும் அதைக் குறை கூறுகிறார்களே!’ என்ற வருத்தம் இருந்தது.
அப்போது அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். அவரைக் காண சென்ற அச்சுதன் தன் குறைகளை அவரிடம் கூற, அவர் அச்சுதனை அழைத்துக் கொண்டு ஒரு சத்திரத்திற்கு செல்கிறார். இப்போது முனிவர் அச்சுதனிடம், ‘அந்த சத்திரத்தில் இருந்து வருபவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்டுவிட்டு வா!’ என்று கூறி அனுப்பி வைத்தார்.
அச்சுதனும் அந்த முனிவர் கூறியவாறு சத்திரம் வாசலில் சென்று நின்று அங்கிருப்பவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனித்தார். சிலர் இந்த சத்திரத்தின் உரிமையாளர் போல ஆட்கள் இருப்பதால் தான் நாட்டில் மழைப்பெய்கிறது என்று பாராட்டியும் இன்னும் சிலர், இந்த சத்திரத்தின் உரிமையாளருக்கு காசை சம்பாதித்து என்ன செய்வது என்று புரியாமல் சத்திரம் நடத்துகிறார்’ என்றும் பேசிக்கொண்டனர். இதைக் கேட்டுவிட்டு அச்சுதன் முனிவரிடம் வந்து நடந்தவற்றை சொன்னார்.
இப்போது இருவருமே சென்று அந்த சத்திரத்தின் உரிமையாளரை சந்தித்து இதைப்பற்றிக் கேட்க, அதற்கு அந்த உரிமையாளர் சிரித்துக்கொண்டே என்ன சொன்னார் தெரியுமா?
‘நம்மை குறை சொல்பவர்கள் நாம் கஷ்டப்படும் நேரங்களில் நமக்காக வந்து உதவப்போவதில்லை. அவர்களால் முடிந்தது குறை சொல்வது மட்டும்தான். எனவே, இதுப்போன்ற நபர்களை எண்ணி நான் ஏன் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கு பயந்து ஏன் நான் செய்யும் செயலை நிறுத்த வேண்டும்’ என்று கூறினார்.
இப்போது அச்சுதனுக்கும் எல்லாம் தெளிவாகப் புரிந்தது. இந்தக் கதையில் சொன்னதுப்போலத்தான், குறை சொல்பவர்களை மறந்துவிட்டு நம்முடைய வேலைகளில் கவனம் செலுத்தினால், வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.